அபிதா - லா. ச. ராமாமிர்தம்
"அவள் நடக்கையில் ஜலம் தெளித்த இடம் பூமிக்குக் குளிர்ச்சி. ஆனால் அவள் நடை என் நெஞ்சுக்குத் தீ."
அப்படி தீயாய் பற்றி எரிகிற ஆத்மார்த்தமான காதலின், தன் மனதுக்கு விருப்பமான ஒருவரைப் பூஜிக்க, துதிபாட நினைக்கிற பரவசத்தின், குற்ற உணர்ச்சியின், அலைவுறும் மனதின், ஆழ்மன சலனங்களின் தொகுப்பு தான் அபிதா.
ஒரு சில நாவல்கள் தான் அதோட கதைக்கரு, அதன் ஊட பேசுகிற கற்பிதங்கள், கடத்துற உணர்வுகள் என்றளவில் மட்டுமே முற்றுப் பெறாமல் அதை எல்லாத்தையும் தாண்டி, படிச்சு முடிச்சதும் அது நமக்குள்ள நிகழ்த்திப் பார்க்கிற விசாரணையாகவும், நம்மைத் துளைத்து எடுக்கிற கேள்வியாகவும் அதன் வழி ஏதோ ஒன்றைக் கண்டடைகிற திறப்பாகவும் தொடர்ந்திட்டே இருக்கும், அப்படியான ஒரு நாவல் தான் அபிதா.
படிச்சு முடிச்சதும், இப்படியான நாவல்களின் நோக்கம் தான் என்ன, இப்படியான நாவல்களை எப்படித்தான் அணுகுவது, இப்படியான நாவல்களில் மீறல்களைச் செய்கிற மனிதர்களையோ அவர்களின் மனங்களையோ படிச்சதும் என்னை அறியாமலே உள்ளுக்குள்ள சுறுக்குனு ஒரு உணர்வு ஏற்படுதே அது தான் என்ன, உண்மையில் அது இப்படியான மீறல்களுக்கு எதிரான என்னுடைய எதிர் மனநிலை மட்டும் தானா இல்லை அதன் வழியா நான் அப்படியானவன் இல்லை என்கிற அறிவிப்பை எப்படியாவது அழுத்தமா வச்சுரணும்னு நினைக்கிற, என்னையும் மீறிய என்னுடைய தன்முனைப்பா.
நானும் என் வாழ்வில் ஏதோ ஒரு தருணத்தில் இது மாதிரியான சலனங்களையும், சபலங்களையும் கடந்து தானே வந்து இருப்பேன், அதை எல்லாம் கடந்து வர என்னைச் சுற்றிய மனிதர்களும், காலமும், நான் நுகர்ந்த கலைகளும் எனக்கு கொடுத்த வாய்ப்பை, நான் இப்படியான மீறல்களைச் செய்ய நினைக்கிற கதாபாத்திரங்களுக்கும் கொடுக்க தயாராக இருக்கிறேனா, இல்லை அப்படியான வாய்ப்புகளை எல்லாம் பயன்படுத்தி அதன் பிறகு எனக்கு நானே உருவாக்கிக் கொண்ட எல்லைகளின், மதிப்பீடுகளின் வழியாகவே இது மாதிரியான படைப்புகளையும் அணுகிப் பார்க்கிறேனா, அப்படி அணுகிப் பார்ப்பது சரியான அணுகுமுறையா அப்படின்னு அபிதா எனக்குள் நிகழ்த்தி விட்டுப் போன விசாரணைகளும், கேள்விகளும் ஏராளம்.
என்னைப் பொறுத்தமட்டில் மனிதர்கள் மனதால் குற்றமற்றவர்கள் என்பதெல்லாம் வெறும் வெற்று வாதம் தான். ஒவ்வொரு நாளும் மனித மனம் தனக்குள் நிகழ்த்திப் பார்க்கிற குற்றங்களும், வஞ்சங்களும், குரோதங்களும், துரோகங்களும், பழிவாங்கத் துடிக்கிற எண்ணங்களும், சபலங்களும், இச்சைகளும் ஏராளம். இப்படியாக மனம் நிகழ்த்திப் பார்க்கிற எல்லா சலனங்களையும் அறிவின் துணை கொண்டு அதன் மூலம் ஒரு வடிகட்டுதலை நிகழ்த்தியப் பிறகு நாம் பேசுவது தான் தூய்மை வாதமும், நாமெல்லாம் அப்பழுக்கற்றத் தூயப் பிம்பங்களாய் இங்கு நடமாடித் திரிவதும். சரியான வாய்ப்பும் தக்க சமயமும் கிடைத்தால் அதை எல்லாம் நிஜத்தில் நிகழ்த்திப் பார்க்கத் துணிகிற மனிதர்கள் தான் நாம் எல்லாம்.
அப்படியான அறிவின் வடிகட்டுதல் ஏதும் நிகழாத, தனக்கென எந்த எல்லைகளையும் வகுக்காத, வகுத்துக் கொள்ள முடியாத மனதிற்கு ஒரு குரலைக் கொடுத்து அதன் எண்ண ஓட்டங்கள் அத்தனையும் எழுத்தாக்கிப் பார்த்தால் என்னவாக இருக்கும்? அப்படி ஒரு மனித மனதிற்கும், அறிவிற்கும் இடையில் நிகழ்கிற ஊடலும், சமயத்தில் நடக்கிற போரும், அலைவுறும் மனதின் அதன் ஊசலாட்டத்தின் அப்பட்டமான குரலும் தான் அபிதா.
வாழ்வின் இறுதியில், விரக்தியில் தன் மனைவி சாவித்திரியுடன், சிறுவயதில் தான் வாழ்ந்த கரடிமலைக்கு தன்னுடைய முதல் காதலின் நினைவுகளோடு வருகிறான் அம்பி. அங்கு தன்னுடைய முன்னாள் காதலி சக்குவைத் தேடி வந்த அம்பிக்கு அவள் இறந்துவிட்ட செய்தியும், அந்த செய்தி கிடைத்த அதே சமயத்தில் சக்குவே வடிவாய் நிற்கிற அவள் மகள் அபிதாவையும் பார்க்கிறான். தான் பார்ப்பது உண்மையா அல்லது கனவா என அலைவுறும் அம்பியின் மனது குற்றவுணர்ச்சியின், ஏக்கத்தின் மிகுதியால் சக்கு தான், மீண்டும் அபிதாவாய் தனக்குத் தரிசனம் கொடுக்கிறாள் என அபிதாவின் மேல் காதல் கொள்��ிறான். கடைசியில் என்ன தான் ஆனது?
எங்கோ எப்போதோ தொலைத்து விட்ட ஒன்றை மீண்டும் காலம் அதே உருவில், வடிவில் நிறுத்தி நிகழ்த்திப் பார்க்கும் விளையாட்டுக்குப் பலியாகிப் போகும் மனமும், அதன் விளைவாய் உள்ளே பற்றி எரியும் அணையாத நெருப்பின் தகிப்பும் தான் அபிதா.
வெறுப்பும், கசப்பும், விரக்தியுமாய் ஒரு வாழ்வும், சக்குவின் இறப்பிற்கு நான் தான் காரணம் என்கிற குற்ற உணர்ச்சியும், சக்குவின் மறு உருவாய் வந்து தன்னை கடந்த கால நினைவுக்குள் தள்ளி விட்டு இம்சிக்கும் அபிதாவும், சக்குவின் மீதான ஆத்மார்த்தமான காதலின் வெளிப்பாடும், தானே சக்குவாகவும், அம்பியாகவும் பேசி அசை போடும் தருணமும், தன் மனைவி சாவித்திரிக்குத் தான் செய்வது எல்லாம் தெரிந்தும் பேசாமல் இருக்கிறாள் என்கிற கொந்தளிப்பும் - இப்படி எல்லாமுமாய் சேர்ந்து பகடை ஆடிப் பார்க்கிறது அம்பியின் மனம். அம்பி கரடி மலையை விட்டு சாவித்திரியுடன் வாழ்ந்த வாழ்வு வரமா? இல்லை மீண்டும் வந்ததும், அபிதாவைக் கண்டதும் சாபமா? இல்லை இரண்டிலுமே எஞ்சி இருப்பது என்னமோ வெறும் வாழ்வின் மீதான குற்றப்பத்திரிக்கை தானா?
அபிதா, சகுந்தலை இருவரும் வேறு என்கிற பகுப்பு அறிவிற்கு எட்டினாலும், கதை முழுக்க சக்குவை (அபிதாவை) பற்றி எரிகிற அம்பியின் மனவெழுச்சியில் வாசிக்கும் போது - வயதின் எல்லைகளையெல்லாம் கடந்து சக்குவை சிறுவயதில் விட்டுவிட்டுப் போன அம்பியின் மனதில் இருக்கிற தவிப்பையும், அதில் இன்னமும் வற்றாமல் உயிர் கொண்டிருக்கும் காதலையும் எனக்குள்ளும் கடத்தி விட்டு வேடிக்கைப் பார்ப்பது தான் லா.ச.ராவின் மொழியாளுமை போலும்.
அத்தனை மீறல்களையும் நிகழ்த்திப் பார்க்கிற அபிதா, அப்படி எல்லா எல்லைகளையும் கடந்துருச்சா அப்படின்னு பார்த்தா அது தான் இல்லை. அபிதா தனக்காக வகுத்து கிட்ட எல்லைகளையும் ஒரு போதும் கடக்கவே இல்லை - உடல் சார்ந்த எல்லைகளை.
அபிதா ஒரு போதும் தன்னால் தொட்டு ஸ்பரிசிக்கக் கூடிய இல்ல கைகளில் அள்ளி கொண்டாடக் கூடிய தன்னோடு சக்கு இல்ல என்பதும் தன்னால் கண்கண்ட தூரத்தில் மட்டுமே நின்று பூஜிக்கிற, ஆராதிக்கிற, வணங்கித் தொழுது நிற்கிற - அவளின் இருப்பை, நினைவுகளைத் தீயாய் பற்ற வைத்து அம்பியின் ஆழ்மனதில் எரிக்கிற சக்குவின் பிம்பம் மட்டும் தான் அபிதா அப்படின்னு தனக்காக வகுத்துக்கிட்ட எல்லையையும் எங்கேயுமே தாண்டல லா.ச.ரா.
சமயத்தில் அபிதாவும், கரடிமலை உச்சியில் வீற்றிருக்கும் திருவேல நாதரும் வேறல்ல ஒன்று தானோ என்றும் கூட தோன்றுகிறது. ஒரு போதும் அவ்வளவு எளிதாகத் தொட்டு ஸ்பரிசிக்க முடியாத, ஆனாலும் எப்படியாவது தன்னுடைய ஆராதனையாலும், தொழுகையாலும் எட்டிவிட நினைக்கிற ஒன்று தானோ அபிதா.
அம்பியும், அபிதாவும் இருக்கும் வரை சக்குவும் எரிந்து கொண்டும் தான் இருப்பாள், அம்பியின் தொடுகையில் இல்ல அவனின் தொழுகையில், பரிசுத்தமான நினைவுகளில், ஆத்மார்த்தமான அன்பினில் - அதன் பொருட்டு தானோ, என் மனம் ஒரு போதும் ஏற்றுக்கொள்ளாத அந்த முடிவோ என்று கூட தோன்றுகிறது.
லா. ச. ராவின் மொழியில் இசையும், கவித்துவமும் இருக்கிறது எனப் பலர் சொல்லிக் கேட்டதுண்டு, அந்த இசையில் லயித்த முழுமையும், அந்த கவித்துவ பிரவாகத்தில் திளைத்த இன்பத்தையும் கொடுத்த ஒரு அற்புதமான படைப்பு அபிதா.