யூதாஸின் நற்செய்தி
ஆசிரியர் : கே ஆர் மீரா
தமிழில் : மோ .செந்தில்குமார்
எதிர் வெளியீடு
112 பக்கங்கள்
நாவல்
ஒரு கதைக்கு கதைசொல்லியை முன்னிருத்தி அவரின் பார்வையில் ஒரு நிகழ்வையோ , ஒரு முழு வாழ்வையோ கூறுவது ஒரு வடிவமாக நாவலுக்குள் இருந்தாலும் , ஒரு சில நாவல்கள் மட்டுமே தன் கதையை தனக்குள் வசிக்கும் வெவ்வேறு கதைமாந்தர்களை கதை சொல்லிகளாக மாற்றி ஒவ்வொருவருடைய பார்வையின் வழியே அந்த கதையை கூறுகின்றன . இந்த தனித்துவமான முறையில் இருக்கும் சவால் என்னவென்றால் தராசின் முள் போல சரி-தவறு,நியாயம்-அநியாயம் , நன்மை-தீமை , நல்லவர் -கேட்டவர் என இருபக்கமும் ஆசிரியரும் தன் கதையோடு ஊசலாட வேண்டியிருக்கும் . வாசகனும் அந்த ஊசலாட்டத்தில் ஒரு அங்கமாக மாறினால் மட்டுமே அந்த கதைக்குள் அவன் பிரவேசிக்க முடியும் . இருமுனை கத்திபோல அது ஆயுதமாக மாறி கதையை ஆசிரியரிடமிருந்தும் வாசகனிடமிருந்தும் பிரித்தெடுக்கும் வல்லமையும் உண்டு , மறுமுனையில் அந்த யுக்தியே அந்த கதையின் வீச்சுக்கு ஒரு பெரும் உந்துசக்தியாகவும் வாய்ப்புள்ளது . யூதாஸின் நற்செய்தி -யும் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் ஒரு சமூகத்தின் நிலையை அதில் சம்மந்தப்பட்டவர்கள் அனைவரின் பார்வையிலும் இருந்து கூறப்பட்ட ஒரு நாவல் . ஆகையால் தான் ஆசிரியர் இக்கதையை தொடங்கும்போதே இது காதலின் கதையும் அல்ல , புரட்சியின் கதையும் அல்ல இது சவங்களின் கதை என்று கூறியே தொடங்குகின்றார் .
கதை நிகழும் காலம் மிகவும் முக்கியமானது . இந்தியாவில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்ட காலம் , இந்தியாவின் அரசியல் தலைவர்களும் ,சமூக போராளிகளும் ஈவு இருக்கமின்றி காவல் துறையினரால் சூறையாடப்பட்ட காலகட்டம் . இந்தியா முழுக்க அவர்களுக்கு தண்டனை என்ற பெயரில் வதைமுகாம்கள் அமைக்கப்பட்டன , அப்படி கேரளத்தில் கக்காயம் என்ற பகுதியில் அமைக்கப்பட்ட முகாமில் வேலை செய்து பின் விருப்பஓய்வு பெற்ற காவல் ஆய்வாளரின் மகளான பிரேமாவின் பார்வையில் கதை கூறப்படுகிறது . தனது அரசு பதவியிலிருந்து ஓய்வுபெற்றபின்பும் அந்த முகாமின் நினைவுகள் அவரைவிட்டு அகலாமல் தன் வதைக்கும் வழக்கத்தை மனைவி மகளின் வழி தீர்த்துக்கொள்கிறார் . இந்த பின்னிலையில் பிரேமா தன் 15 வயதில் தன் நாலுகெட்டு வீட்டிற்கருகில் உள்ள குளத்தில் சதா விழுந்து சாகும் மனித சடலங்களை மீட்டெடுக்கும் யூதாசை சந்திப்பதோடு அவன் மேல் காதல் கொள்கிறாள் . கக்காயம் முகாமில் இருந்து மீண்டு வந்த ஒரு சிலரில் யூதாசும் ஒருவன் . யூதாஸ் பிரேமாவிடம் இருந்து விலகிச்செல்கிறான் , பிரேமாவோ யூதாசை பின்தொடர்கிறாள் . காலம் கரைகிறது , நாலுகெட்டு வீடு நிர்மூலமாகிறது , தாயை இழக்கிறாள் , வயதை இழக்கிறாள் , அழகை இழக்கிறாள் , உடல்நலம் இழக்கிறாள் , யூதாஸின் மேல் உள்ள காதலை மட்டுமே சுமந்து கொண்டு யூதாஸின் வாழ்வை பின்தொடர்ந்து , அவனுக்குள் புதைந்து கிடந்தவற்றை கண்டறிந்து காதல் கூடி அவனை தேடி அலைகிறாள் , இந்த பயணத்தில் ஓரிரு முறை அவர்கள் சந்தித்தாலும் ஒவ்வொரு முறையும் யூதாஸ் விலகிச்செல்கிறான் . எங்கோ ஒரு ஏரியில் முங்கி அடி ஆழம் சென்று அந்த சவங்களை கடந்து அவன் எதையோ தேடிக்கொண்டே இருக்கிறான் . ஒவ்வொரு கரையாக பிரேமா யூதாசுக்காக காத்திருக்கிறாள் . யூதாஸ் ஏன் ஓடிக்கொண்டேயிருக்கிறான் ? பிரேமாவின் அழுத்தமான காதலுக்கு காரணம் என்ன ? யூதாஸ் தண்ணீரின் ஆழத்தில் தொலைத்தது தான் என்ன ? முன்பின் அறியாத ஒரு நாடோடிக்காக பிரேமா இத்தனையும் இழப்பது ஏன் ? இத்தனைக்குமான பதில்களாக நமக்கு கிடைப்பதெல்லாம் பிரேமாவின் காத்திருப்பும் , களங்கமில்லாத அவள் உள்ளமும் உணர்வுகளும் தான் .
"காட்டிக்கொடுப்பவனுக்கு உறக்கமில்லை " " காட்டிக்கொடுத்தவனின் காதலிக்கும் உறக்கமில்லை " என்ற வரிகள் இந்த கதைநெடுக மீண்டும் மீண்டும் வெவ்வேறு தருணங்களில் கூறப்பட்டாலும் கதையின் ஆழம் கூடக்கூட அதன் எடையும் கூடிக்கொண்டே வருகிறது. கதை பிரேமாவின் பார்வையில் தொடங்கினாலும் , அவளுடைய தந்தையான ஒரு காவல் துறை அதிகாரியின் பார்வையில் அந்த வதைமுகாம்களுக்குள் அவர்கள் வெறும் அரசாங்க எந்திரத்தின் உதிரிகள் மட்டுமே என்று நீண்டு , யூதாஸின் பார்வையில் போராளிகளின் பக்கமிருந்து அவர்கள் வலியை , வலி தாங்கமுடியாமல் அவன் உதடுகள் உதிர்த்த அந்த ஒற்றை பெயர் , அந்த பெயருக்கு சொந்தமானவளின் வதை , வதைக்கு எதிர்த்து நின்ற ஒரு துளியும் கண்ணீர் உதிர்த்திடாத திடமான அந்த விழிகள் நம்மை நோக்கி ஓராயிரம் கேள்விகளை கேட்கின்றன .
ஒரு பட்டாம்பூச்சியின் சிறகடிப்பால் உலகின் மூலையில் எங்கோ ஒரு புயல் உருவாகுமென்றால் , இந்த யூதாஸின் நற்செய்தி கதையின் நிகழ்வுகளும் அதுபோல ஒன்றோடொன்று தொடர்புடையவைதான் . புரட்சியால் அந்த புரட்சியாளர்களுக்கு மட்டுமல்ல அவர்கள் சம்பதப்பட்ட மனிதர்கள் அனைவருமே அதன் பாதிப்பின் அதிர்வலைகளை உணரத்தான் வேண்டும் . இது கோட்டிற்கு இந்த பக்கமிருக்கும் புரட்சியாளருக்கு மட்டுமல்லாமல் கோட்டிற்கு அந்த பக்கமிருக்கும் அரசாங்க எந்திரத்தின் உதிரிகளுக்கும் தான் . அவசர சட்ட காலகட்டத்தின் ஆங்கிலத்தில் " collateral damage " எனப்படும் இருமுனை சேதத்தின் பலியாடுகளாகத்தான் ப்ரேமாவையும், யூதாசையும் நான் பார்க்கிறேன் . ஒரு தனி மனிதனின் சுயநலமான , தன்னிச்சையான , அவசரமான , ஆத்திரத்தின் பிடியில் எடுக்கும் முடிவுக்கு இப்படி கண்ணுக்கு தெரியாத பலிகள் நிகழ்ந்துகொண்டுதான் இருக்கின்றன . இந்தியா பெரிய நாடு , அதன் அரசு எந்திரம் மிகப்பெரியது , அதன் அகண்டபார்வையில் ஏங்கோ இந்தியாவின் கடைக்கோடியில் இச்சிறு நிகழ்வுகள் யாருக்கு தெரியப்போகிறது ? இதற்குத்தான் இலக்கியம் 2000 ஆண்டுகளாக போராடி வருகிறது . இதனை பதிவுசெய்யத்தான் இலக்கியவாதி போராடிவருகிறான் . ஆனால் அந்த மிக பெரிய அரசு எந்திரமோ இலக்கியத்தையும் , இலக்கியவாதிகளையும் , அவர்களுடைய கருத்தையும் பெரிதாக காதுகொடுத்து கேட்பதில்லை . அரசியல், கட்சி, பதவி, கூட்டணி எனும் பேரிரைச்சல்களுக்கு நடுவே இந்த கூக்குரல்கள் கேட்பது சற்று கடினம்தானே ? கேட்கவில்லை என்றால் இனி சற்று உரக்க சத்தமிடுவோம் அவர்களுக்கு கேட்கும்வரை அல்ல உரைக்கும்வரை .
--இர.மௌலிதரன்
16-10-2024
11.21 am