"இறப்பினைக் கொண்டு இறந்தவரோடு தொடர்புடைய மக்கள் மூலம் வாழ்வியலை பேசும் மென் சித்திரம்"
இறப்பின் இழப்பு இறுதியானது. அதன் வலியை உணரும் கதாப்பாத்திரங்கள் தேக்கி வைத்திருக்கும் சொல்லக் கூடிய விஷயங்களும், சொல்லக் கூடாத ரகசியங்களும், வேதனைகளும், மகிழ்ச்சிகளும், வாசிப்பின் மூலம் பகிரப்படுகின்றன.
இங்கு சரி தவறுகள் ஒழுக்க வரையறைகள் எல்லாம் அந்த ஆன்மாவிற்கும் இல்லை நினைப்பவர்களுக்கும் இல்லை. காரணம் அதற்கு வலிகளும் இல்லை தப்பிக்க வேண்டிய நிர்பந்தமும் இறந்த ஆன்மாவிற்கும் சொல்கின்ற ஆன்மாவிற்கும் இல்லை. நிகழ்வும் அக மனதிலிருந்து அவர்களறியாமல் சொல்லப்படுகின்றன.
கதை சொல்லிய யுத்தியும், மொழிப் பெயர்ப்பும் அருமை. கல்பற்றா நாராயணனுக்கும் , ஷைலஜாவிற்கும் வாழ்த்துகள்.
வயநாட்டின் இயற்கையை காப்பியின் மணத்தை, மிளகின் காரத்தை. மழையின் சாரலை சுமித்ராவின் கடந்த காலத்தை, மாதவி, கீதாவின் மூலம் பெண்ணினம் எதிர்கொள்ளும் போறாமைகளை உட்கொள்ள தயராகலாம்.
சுமித்ராவிற்கு உலகத்து மக்களோடு துவேசமுமில்லை, ஆர்வமும் இல்லை, தேடல்கள் இல்லை தேடி வந்தவைகளை துரத்தவுமில்லை. எல்லாம் தன்னுள்ளீர்த்து தளிர்த்து மலர்ந்து உதிர்ந்து தணியாத தகிப்பின் வெப்பத்தில் கரைந்து காற்றாகி போனாலும் சுமித்ரா கடத்திய நினைவுகள் நேசித்த வாசித்த மனங்களிலிருந்து மறைந்து போவதில்லை.
இறக்கும் வரை....