தமிழ் இலக்கணம் ஆறுமுகநாவலர் Tamil Ilakkanam By Arumuka Navalar Pages - 217 ஆறுமுக நாவலர் (டிசம்பர் 18, 1822 - டிசம்பர் 5, 1879) தமிழ் உரைநடை செவ்விய முறையில் வளர்வதற்கு உறுதுணையாய் நின்றவர். தமிழ், சைவம் இரண்டும் வாழப் பணிபுரிந்தவர். யாழ்ப்பாணம், நல்லூரில் தோன்றியவர். தமிழ் நூல்களை முதன் முறையாகச் செவ்வையான வகையில் பதிப்பித்தவர். திருக்குறள் பரிமேலழகருரை, நன்னூற் காண்டிகை போன்ற இலக்கிய, இலக்கண நூல்களையும் திருவிளையாடல் புராணம், பெரியபுராணம் போன்ற நூல்களையும் பிழையின்றிப் பதித்தவர். மிழ் மொழி, இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத் தமிழ் என மூன்று பிரிவுகளை உடையது. இவையே முத்தமிழ் என அழைக்கப்படக் காரணமாக விளங்குகிறது. முன்னோர் முத்தமிழின் பிரிவுகள் ஒவ்வொன்றுக்கும் தனித்தனியே இலக்கணம் அமைத&
யாழ்ப்பாணத்து நல்லூர் ஆறுமுக நாவலரவர்கள் இயற்றிய இந்நூலை ஆசிரியர் அரங்கனார் ( கவினப்பன் ) பாடஞ்சொல்லிய பதிவுகள் வாயிலாகக் கற்கப் பலகாலம் நினைந்து இப்பொழுது ஒருவழியாக ஒருமுறை முழுதும் கண்டு முடித்தேன்
கீழ் வருவன போன்ற பல அரிய செய்தி இந்நூல் வழி கிட்டின
எழுத்து என்பது ஒலியாம். வடிவம் காலந்தோறும் மாறிவந்தும் எந்த எழுத்தும் ஒலி மாறாமல் காலவெள்ளத்தைக் கடந்து நின்று நிலைபெறுவதை எண்ணுங்கால் இவ்வுண்மை விளங்குகிறது
ச - இவ்வெழுத்தை cha என்றே பலுக்க வேண்டும். 'ஸ' - இப்புல்லின எழுத்தை நம் மொழியில் நுழைத்தற்குக் கூறக்கூடிய காரணத்தை எண்ணுங்கால் சகரத்தின் சரியான பலுக்கலை உணர முடிகிறது
நிறுத்தற்குறி புணர்ச்சிக்கு மாற்று ஆகா. நிறுத்தற்குறி இட்டாலும் புணர்த்தியே எழுதினர் முன்னோர்
இருசொல் வெவ்வேறு பொருளில் வரும்பொழுது வெவ்வேறு வகையில் புணரும்
கார் + குழல்
காராகிய குழல் கார்போன்ற குழல் முதலிய பொருளில் வரின் கார்க்குழல் என்றும் காரும் குழலும் முதலிய பொருளில் வரின் கார்குழல் என்றும் புணரும்
அதாவது பொருளை அறிவிக்கவே புணர்ச்சி
இரண்டு உயிரெழுத்து தம்முள் தாம் மயங்கா என்பதால் அவற்றை உடன் படுத்த வருவதே உடம்படுமெய். இது செய்யும் வேலையாவது ஒவ்வாத இருவரை உடன்பட வைக்கும் சந்து செய்தல் (அ) இற்றை வழக்கில் பஞ்சாயத்து
நேர்மறை என்று நாம் இன்று ஆளும் சொல்லின் பொருளுக்கு முன்னோர் ஆண்ட சொல் உடன்பாடு
உம்மைத்தொகை கூட்டலுக்கு வரும்
பத்தும் ஒன்றும் - பத்து + ஒன்று - பதினொன்று
பண்புத்தொகை பெருக்கலுக்கு வரும்
பத்து + பத்து - பதிற்றுப்பத்து
வேடம் தமிழென்பார் அருளியார். இருப்பினும் அது Vesham எனும் அயற்சொல்லின் வடிவோ என்று ஐயம் எனக்கு. பொருநுதல் என்று அதற்கொரு சொல் கண்டேன் இந்நூலில்
உறவுகளை உடைமைகளாக எண்ணுதல் பிழை. எனது மகன் என்றால் மகன் என் உடைமை ஆகிறான். எனக்கு மகன் என்று முறைக்கியை பொருளில் கூறுவதே சரி
அவ்வாறு இவ்விரண்டு அரணன்று போன்ற சொல்லில் புணர்ச்சி இரட்டுறமொழிதலில் பாட உதவுவதைக் கண்டேன்
அருகாமை என்ற சொல்லில் உள்ள 'ஆ'காரம் எதிர்மறைப்பொருள் தரும் என்று கொண்டு இச்சொல் பிழை என்பர் சிலர். எனில் இல்லாமை என்ற சொல்லில் 'இல்' என்ற முதனிலை தந்த எதிர்மறைப் பொருளின் மேல் 'ஆ'காராம் மீண்டும் ஒரு எதிர்மறைப் பொருளைத் தந்ததா? இவ்விருசொல்லிலும் ஆகாரம் சாரியை
செய்யாது செய்யாமல் இவ்விரு சொல்லிற்கும் பொருள் வேறு
இவ்வாறு இச்சிறுநூலால் கற்றவையும் பெற்றவையும் பல. இலக்கணத்தை மனத்தில் நிறுத்த இன்னும் பன்முறை படிக்க வேண்டும்