தமிழகத்தின் தலைநகரம். அரசியல், சினிமா, கல்வி, வேலைவாய்ப்பு என அனைத்திற்குமான மையபுள்ளியாக இருக்கும் மதராசப்பட்டினம் (எ) மெட்ராஸ் (எ) சென்னை வரலாற்றில் எத்தனை சிறப்புமிக்க ஒன்று என்பதை அட்டகாசமாக அறிமுகப்படுத்தும் புத்தகம் தான் "மதராசப்பட்டினம் to சென்னை".
இன்று நாம் சர்வசாதாரணமாக கடந்து செல்லும் சென்னையின் ஒவ்வொரு புராதன கட்டிடங்கள், கோட்டையில் தொடங்கி மவுண்ட் வரை மூச்சு முட்டும் வாகன நெரிசலை கொண்ட அண்ணா சாலை, சுட்டெரிக்கும் வெயிலில் இளஞ்ஜோடிகள் காதல் வளர்க்கும் மெரீனா கடற்கரை, பல்லாயிரக்கணக்கான வருமானத்தை கொடுக்கும் சென்னை துறைமுகம், தினம் ஆயிரக்கணக்கான மக்கள் பயன்படுத்தும் சென்ட்ரல் ரயில் நிலையம் மற்றும் எழும்பூர் ரயில் நிலையம் என சென்னையின் ஒவ்வொரு அடையாளங்களின் பின்னும் நூறாண்டு, இரு நூறாண்டு, மூன்னூறாண்டு வரலாறுகளும் கதைகளும் புதைந்து கிடக்கின்றன. அந்த வரலாறு அதிகம் பதிவு செய்யப்படாமலும் பதிவு செய்யப்பட்ட வரலாறும் பரவலாக வாசிக்கப்படாமலும் தெரிந்து கொள்ளப்படாமலும் இருப்பது வேதனையளிக்கிறது.
எஸ்.ராமகிருஷ்ணன் அவர்கள் தேசாந்திரி யூடியூப் சேனலில் "சென்னையும் நானும்" என்றொரு 19 எபிசோட் கொண்ட தொடரில் சென்னை குறித்தும் அதன் வரலாறு குறித்தும் பேசி இருந்ததை பார்க்க நேர்ந்தது. அட்டகாசமான அந்த தொடரைப் பார்த்த பின் சென்னை குறித்து வாசித்து இன்னும் நிறைய தெரிந்து கொள்ள வேண்டுமென்ற தேடலில் தான் இந்த புத்தகத்தை கண்டடைந்தேன்.
தென்னிந்தியாவில் முதன்முதலாக ரயில் நிலையம் அமைக்கப்பட்டு இயக்கப்பட்டது ராயபுரம் ரயில்வே நிலையம். சினிமா என்ற ஒன்று கண்டுபிடிக்கப்பட்ட இரண்டே வருடங்களில் சென்னையில் 1897-ல் "விக்ட்டோரியா பப்ளிக் ஹாலில்" முதல் சலனப்படம் திரையிடப்படுகிறது. இன்று சென்னையை எல்லோரும் தூற்றுவதில் முக்கிய இடம் பிடிக்கும் ஒன்று கூவம் ஆறு. சென்னையை நாறடிப்பதாக குற்றம் சாட்டப்படும் இந்த கூவ நதிக்கரையில் வெள்ளையர்கள் தங்கள் மாலை பொழுதுகளை குடும்பத்தோடு கழித்திருக்கிறார்கள். தமிழின் புகழ்பெற்ற எழுத்தாளர் திரு.வி.க. தினம் காலை கூவ ஆற்றில் குளித்துவிட்டு திருநீறு அணிவதாக அவருடைய புத்தகத்தில் குறிப்பிட்டிருக்கிறார். இத்தனை சிறப்பு வாய்ந்த கூவம் ஆறு, இங்கிலாந்து நாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்படும் ஆடைகளுக்கு செய்யப்பட்ட சாயக்கழிவுகள் 1930-களில் கலக்க தொடங்கி 80 ஆண்டுகளில் அழகான ஆற்றினை சாக்கடையாக மாற்றி இருக்கிறோம். முதல் உலகப்போரின் போது தாக்குதலுக்கு உள்ளான இந்தியாவின் ஒரே பகுதி சென்னை. ஜெர்மனியின் எம்டன் கப்பல் பிரிட்டிஷாரின் கப்பல் படைகளுக்கு 'பெப்பே' காட்டிவிட்டு சென்னை துறைமுகத்தின் மீது குண்டு மழை பொழிந்துவிட்டுப் போயிருக்கிறார்கள். இரண்டாம் உலகப்போரின் போது துறைமுகத்தின் மீது எறியப்பட்ட குண்டுகள் பட்டு கடற்கரையின் சகதிகள் சென்னை கடற்கரை ரயில் நிலையம் முன்பு இன்று இருக்கும் ஸ்டேட் பேங்கின் கட்டிடத்தின் மீது தெரித்திருக்கிறது. சென்னையை பல முறை தாக்கிய கொடூரமான பஞ்சம் 1781-லும் தாக்கியது. அதுவரை சென்னை சந்தித்த பஞ்சங்களிலே மிகக் கொடூரமான பஞ்சமாக வரலாற்று ஆசிரியர்களால் கருதப்படுவது இதுவே. காரணம் ஹைதர் அலியின் படையெடுப்பையும் சேர்ந்து அப்போது சமாளிக்க வேண்டி இருந்தது. மிகக் குறைவான தானியங்களே இருந்த காரணத்தினால் பசியால் வாடும் மக்களுக்கு கஞ்சி காய்ச்சி ஊற்றியிருக்கிறார்கள். அந்த இடத்திற்கு கஞ்சித் தொட்டி என்று பெயர். பின்னர் அது சத்திரமாக பயன்பட்டிருக்கிறது. பின்னர் அங்கே தொழுநோய் மருத்துவமனை அமைத்திருக்கிறார்கள். கால ஓட்டத்தில் அது சென்னையின் மிக முக்கியமான மருத்துவமனையாக மாறிப்போனது. அதுவே இன்று நாம் பார்க்கும் ஸ்டான்லி மருத்துவமனை.
இப்படி சுவாரசியமான பல தகவல்கள் புத்தகம் முழுக்க நிறைந்து கிடக்கின்றன. எழுத்தாளர் தேடித்தேடி திரட்டிய தகவல்களை நாம் மிக சுலபமாக ஒரே புத்தகத்தில் தெரிந்து கொள்ளலாம்.
10 ஆண்டுகளாக சென்னையில் தங்கியிருக்கிறேன். புத்தகத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் வரலாற்று சிறப்பு மிக்க சில இடங்களை இதுவரை பார்த்ததேயில்லை. புத்தகத்தை படித்து முடித்ததும், "சென்னை திரும்பியதும் ஒவ்வொரு இடங்களையும் சென்று பார்த்துவிட்டு வரவேண்டுமென்று" தோன்றியது.
"சென்னை எனக்கு பூர்வீகம்", "மெட்ராஸ் என் ஊரு" என கெத்து காட்டுபவர்கள் நிச்சயமாக இந்த புத்தகத்தை வாசித்து சென்னை என்ற மாநகரம் எவ்வாறு உருவானது, அதன் பின்னே எத்தனை பேரின் உழைப்பும் தியாகமும் அடங்கியிருக்கிறது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.
If you want to know more about madras, this book help a lot. Before traveling to chennai complete this book and you will enjoy all the places you will see. Must read book all all chennai people