இராவணனின் மாட்சியும் வீழ்ச்சியும்
திரு அ.ச.ஞானசம்பந்தன் முன்னுரையில் கூறியதை போல், இராமயணத்தை வால்மீகியிடமிருந்து எடுத்துகொண்ட காவியப் படைப்பாக மட்டுமே பார்க்க வேண்டும் என்றும், அதில் கம்பரது கவி சுவையேற்றபட்ட நயங்களையுமே இதில் பொருட்படுத்த வேண்டும் என்பதையும்தான்.
அந்த வகையில், இராவணன் என்பவனை நல்லவனா? தீயவனா? என தீர்மானிப்பதை விடுத்து, அவனது மனம், புத்தி, வாக்கு,குணங்களால் ஏற்பட்ட அவனது மாட்சியையும் வீழ்ச்சியையும் பற்றிய ஆய்வுகளை கொண்டதே இந்நூல்.
தெரிந்த காவியக் கதை என்றாலும், கம்பரின் கவிநயங்களை சிலவற்றை காட்டி, மேலும் அதனை விளக்க திருக்குறளையும் மேற்கோள்காட்டி இராவணனது அவலத்தை ஆழ்ந்து உணர்ந்து கொள்ள வைக்கிறார்.
சீதை, சூர்ப்பனகை, வீடணன், இந்திரசித்தன், மேகநாதன், மாலியவான், மாரீசன், வாலி, அனுமன், இராகவன், இலக்குவன் என்பவர்களின் செயல்களையும், அதில் சிலரது குணங்களையும், மேலும்
இராவணனது பெருமை சிறுமைகளை காணவும் திரு.அ.ச.ஞா'வின் இந்நூல் நமக்கு உதவியிருக்கிறது.
இராவணனின் மாட்சிகளில் சில:
"மூன்று கோடி வாணாளும்,
முயன்று பெற்ற பெருந்தவமும்,
முதல்வனால் முன்னாளில் எக்கோடி
யாராலும் வெல்லப்படாய் என்று
கொடுக்கப்பட்ட வரமும்,
உலகனைத்தையும் செருக்கடைந்த புயவலியும்" யாருக்கும் வாய்க்கப்பெறாத பண்புகளன்றோ!!!
எல்லாம் இழந்த பின்னும், சீதையை விடுவிக்க.."தடுத்தது மானம் ஒன்றே", என தனது மானத்தை காக்க எதையும் விட்டுகொடாதாவனாக..,
"என்னையே நோக்கி நான் இந் நெடும்பகை தேடிக்கொண்டேன்.."எனவும்
"நாசம் வந்துற்றகாலை நல்லதோர் பகையைப் பெற்றேன்"-தீமை வந்தாலும் எனக்கு சரிநிகர் பகையாளியை பெற்றேன் எனவும் கூறியது தன்னிலை உணர்ந்த மதியாளனாகிறானே இலங்கை வேந்தன்.
"யானரேனும் தானாகுக யானென் தனியாண்மை பேரேன் நின்றே வென்றி முடிப்பன் புகழ்பெற்றேன்" என கூறி, கடைசி வரை பேராண்மை கொண்டு சமர் புரிந்து மாய்ந்தது மாண்பாகாதா!!!
சூர்ப்பனகையின் சூழ்ச்சியினால்,
அதாவது இராமனை அடைய, சீதையை அப்புறபடுத்தாகவேண்டிய காரணத்தால், இராவணனிடம் இலக்குவன் தன் மூக்கை அறுத்தான் என கூறுவதை விடுத்து, பேரழகியான சீதையை உனக்காக கொணர சென்றபோது, இலக்குவன் தடுத்து எனது அங்கம் சிதைத்தான் எனக் கூறினாள்.
இதற்கு முன்பாக, சூர்ப்பனகையின் அங்க சிதைவை கண்டதும், உடனே கோபம் கொண்டு "அவர்கள் ஏன் இப்படி செய்தார்கள்" என கேளாமல், "நீ என்ன தவறு செய்தாய்?"என தர்மத்தின் பக்கத்தின் நின்று மதிநுட்பத்துடன் கேட்டவனின் மாட்சிக்கு வேறெதும் சான்று வேண்டுமோ!!!
அதாவது,
"தீயிடை உகுத்த நெய்யின் சீற்றத்துக்கு ஊற்றம் செய்ய
நீயிடை இழைத்த குற்றம் என்னைகொல் நின்னை இன்னே
வாயிடை இதழும் மூக்கும் வலிந்தவர் கொய்ய?"
அதேவேளையில், இராவணனது வீழ்ச்சிக்கு காரணம் பிறன்மனை நோக்கிய காமமேயன்றி வேறல்ல.
அதாவது,
என்று இன்னொருவனின் இல்லத்தாளை, பாவத்தை மறந்து, வேத மறைகளை துறந்து சிறையெடுத்தாயோ, அன்றே அரக்கர்புகழ் ஒழிய ஆரம்பித்து விட்டது. இதனைகும்பகர்ணன் இராவணனிடம்,
"என்றொருவன் இல்லுறை தவத்தியை இரங்காய்
வன்றொழிலி னாய்மறை துறந்துசிறை வைத்தாய்
அன்றொழிவ தாயின. அரக்கர்புகழ் ஐய!"
மேலும் பகைவரின் பலத்தை அசட்டை செய்தது, அவர்களை துச்சமென மதித்தது, உற்பாதங்களை(துர்நிமித்தங்கள்) புறந்தள்ளியது என இராவணன் தன் அழிவை தானே தேடிக்கொண்டான்.
கடைசியில், வேதமறைகள் தப்பினாலும் இராமனது வில்(தனு)'லிருந்து வந்த அம்புகள், தப்பாது இராவணனை கொன்று முடித்தது.
இதை,
"...வேதம் தப்பின போதும் அன்னான் தனுஉமிழ் சரங்கள் தப்பா!" எனக் காணலாம்.
நமது சுயவிருப்பு வெறுப்புகளை ஒதுக்கிவிட்டு காப்பிய மாந்தர்களின் செயல் குணநலன்களை ஆராய்ந்து விளங்கி கொள்ள ஏற்ற வகையில் அமைந்திருக்கிறது இந்நூல்.
அத்தியாயங்கள் தொடங்குவதற்கு முன் அவலம்(Tragedy) என்ற உரை சற்றே சலிப்பூட்டுவதாக இருந்தாலும், பின்பு வந்தவைகள் கருத்துச் செறிவனாய்.
நன்றி!