திருடன் மணியன்பிள்ளை - ஜி.ஆர்.இந்துகோபன்
ஒரு வழியாக வாசித்து முடித்துவிட்டேன் மணியன் பிள்ளையை. ஒரு போதும் நினைத்துப் பார்க்கவில்லை, ஒரு முன்னாள் திருடனின் வாழ்விலிருந்து திருடிக் கொள்ள எனக்கு இவ்வளவு இருக்கும் என்று. அப்படி மணியன் பிள்ளையிடம் இருந்து நான் திருடிக்கொண்டவை
ஏராளம்.
ஒரு மனுசனோட வாழ்க்கையில் இவ்வளவும் நடக்குமான்னு யோசிக்கவும், வியக்கவும் வைக்கிறது மணியன் பிள்ளையின் வாழ்வும், அவருடைய அனுபவங்களும்.
வாழ்க்கை எந்த நிமிஷத்தில் வேணாலும் எந்தவொரு முன்னறிவிப்பும் இன்றி எந்த திசையில் வேண்டுமானாலும் தடம் புரண்டு தலை கீழாக மாறக்கூடிய ஒன்று தான்னும், வாழ்வில் நாம் எடுக்கிற ஒரு சின்ன தவறான முடிவு கூட, வாழ்க்கை முழுக்க நம்மள விடாமல் துரத்தி அதிலிருந்து மீண்டெழ நினைத்தாலும் மீளவே முடியாத இடத்தில் கொண்டுபோய் நிறுத்தி விடும் என்பதற்கு மணியம் பிள்ளையின் வாழ்வு மிகச் சிறந்த உதாரணம்.
ஒரு திருடனின் வாழ்வில் அப்படியென்ன இருந்துவிடப் போகிறது தன்னை நியாயப்படுத்துகிற காரணங்களும், அவன் வாழ்க்கை எவ்வளவோ அவலமும், அபத்தமும் நிறைந்தது என்பதைப் பற்றிய குறிப்புக்களைத் தவிர என்ற முன் அனுமானத்தோடு ஆரம்பித்த எனக்கு மணியம் பிள்ளையின் வாழ்வு காட்டிய உலகம் முற்றிலும் வேறானது. அது நிச்சயம் வெறும் அவலமும், அபத்தங்களும் மட்டுமே சூழப்பட்டது இல்லை.
அங்கேயும் சாகசங்களும், கொண்டாட்டங்களும், சுவாரசியங்களும், நடுங்குகிற விரல்களை இறுகப் பற்றிக் கொள்ளும் நேசமும், நிர்க்கதியாய் நிற்பவர்களை அரவணைத்துக் கொள்கிற அன்புக்கும் குறைவே இல்லை.
கொஞ்சம் கோவம், கொஞ்சம் வெறுப்பு, கொஞ்சம் ஏமாற்றம்,கொஞ்சம் சிரிப்பு, கொஞ்சம் அழுகை, கொஞ்சம் அருவருப்பு, கொஞ்சம் ஆச்சரியம், கொஞ்சம் அவநம்பிக்கை, கொஞ்சம் கொண்டாட்டம், கொஞ்சம் தர்க்கம், கொஞ்சம் அரவணைப்பு ஆனால் நிறைய அன்பு மற்றும் கருணையென மணியன் பிள்ளையின் வாழ்வு காட்டுகிற சித்திரங்கள் அத்தனையும் ஏதேதோ உணர்வு தளத்திற்குள் பயணிக்க வைக்கிறது மனதை.
தன்னுடைய சிறுவயதில் உறவுக்கார பெண்ணின் தூண்டுதலின் பேரில் ஆரம்பிக்கிற மணியம் பிள்ளையின் குற்றப்பத்திரிக்கை, அதன் பிறகு கோவில் உண்டியலை உடைக்கும் முயற்சியில் கைது, கேரளாவின் வாழத்துங்கல் பகுதியில் சிறிதும் பெரிதுமாய் பல திருட்டுகள், கடைசியில் ஒரு மிகப்பெரிய திருட்டு அதன் பின் மைசூரில் தொழிலதிபர் சலீம் பாஷாவாகக் கோடியில் புரளும் தலைமறைவு வாழ்வு இன்னும் கொஞ்சம் நாட்களில் மிகப்பெரிய கட்சியில் தனக்கென ஒரு பதவி கிடக்கிற வாய்ப்பு என நீண்ட மணியம் பிள்ளையின் வாழ்க்கை ஒரு சிறிய கவனப் பிசகால் - கைது செய்யப்பட்டு மீண்டும் எல்லாத்தையும் இழந்து வாழ்க்கை எங்கிருந்து தொடங்கியதோ அங்கேயே கொண்டுபோய் நிறுத்துகிறது மணியம் பிள்ளையை. இதற்கு இடைப்பட்ட ஒரு முப்பது ஆண்டுக்கால திருடனின் வாழ்வைப் பற்றிய தன் வரலாறு தான் திருடன் மணியம் பிள்ளை.
திருடன் தன் வாழ்க்கையில் நிகழ்த்திய திருட்டுகள், அதற்காகக் கையாண்ட நுட்பங்கள், திருடிய பொருட்கள், திருடிய பொருட்களை வைத்துக் கொண்டாடிய நாட்கள், கள்ளுக்கடை சச்சரவுகள், திருடி மாட்டிக்கொண்டதும் உடனே ஒப்புக் கொண்டு கைது ஆகிற சம்பவங்கள், நிகழ்த்தப்பட்ட விசாரணைகள், உருட்டிப் பிழியப்பட்ட அடிகள், தன் வழக்கைத் தானே வாதாடும் அடாவடிகள், ஒரு சில காவலர்களின் நட்பு, திருடன் பொருட்டு அவன் குடும்பம் படும் அவமானங்கள், கடந்து வந்த காதல், திருமண வாழ்க்கை, தான் சந்தித்த வேறு சில நுட்பமான திருடர்கள், பெண்கள், பாலியல் தொழிலாளிகள், கஞ்சா விற்பவர்கள், கள்ள நோட்டு அடிப்பவர்கள், சிறை வாழ்க்கை அங்கு நிகழும் கொடுமைகள், பாலியல் பிரச்சினைகள், அதிகாரத்தின் அழுக்கான பக்கங்கள் என மணியன் பிள்ளையின் வாழ்வு திறந்து காட்டுகிற பக்கங்களும், மனிதர்களும் ஏராளம்.
இதில் தன்னை நியாயப்படுத்துகிற இல்லை மற்றவர்களைக் குறை கூறுகிற இடங்களோ, பாசாங்குகளோ, மன்றாடி நிற்கிற தருணங்களோ கூட பெரிதும் இல்லை ஒரு சில மிகைப்படுத்துதலைத் தவிர.
வாசிக்கிற எனக்குத் தான் அது பத்தில் ஒரு கதையே தவிர, அதைச் சொல்பவனுக்கு அது எப்பவும் தன் வாழ்வைப் பற்றிய சாகச கதைதான், அதில் கொஞ்சம் மிகைப்படுத்தல் இயல்பு தான் என்பதையும் கூட புரிந்து கொள்ள முடிகிறது.
மணியன் பிள்ளையின் வாழ்வைப் படிக்கும் போது, உண்மையில் திருடன் மட்டும் தான் சமூகத்தில் திருடனா என்கிற கேள்வியும் என்னுள் எழாமல் இல்லை. மணியன் பிள்ளையின் வாழ்வு அதிகாரத்தின் பின்னாலும், சமூக அந்தஸ்தின் பின்னாலும் ஒளிந்து இருக்கிற பல திருடர்களையும் அடையாளம் காட்டுகிறது.
ஒரு திருடனிடம் இருந்து கூட எண்ணலாமோ திருடப்படுகிறது அதிகாரத்தால் - உணவாக, உடையாக, உடலாக, உறவாக, திருடிய பொருளாக இப்படி எண்ணலாமோ.
இந்த புத்தகம் - ஒரு சில சமயங்களில் சகல குற்றங்களைச் செய்த திருடனின் வாக்குமூலமாகத் தோன்றலாம், இல்லை திருடனின் வாழ்க்கை சாகச கதையாகத் தோன்றலாம், இல்லை எப்படியெல்லாம் வாழ்க்கையை வாழக்கூடாது என்று அறிவுறுத்துகிற கையேடாகவும் தோன்றலாம். இது எல்லாமுமாகவும் தோன்றினாலும் அத்துடன் சேர்த்தே பின்னப்பட்டு இருக்கும் மானுட நேசத்தின், அன்பின், கருணையின் தரிசனமாகவும் இதைப் பார்க்க முடிந்தது.
ஒரு மனிதன் சக மனிதனை எதனால் வஞ்சிக்கிறான், பலி வாங்கத் துடிக்கிறான் என்பதற்கெல்லாம் மிக எளிமையாகக் காரணங்களைக் கண்டடைய முடிகிற நம்மால், ஒரு மனிதன் சக மனிதனை எதற்காகவெல்லாம் நேசிக்கிறான், அன்பு செலுத்துகிறான் என்பதை மட்டும் ஒரு போதும் புரிந்து கொள்ளவே முடியாது போல, உண்மையில் அதுதான் வாழ்வின் சுவாரஸ்யமும் போலும். அப்படியான தருணங்களும் நிறைந்து கிடக்கிறது மணியன் பிள்ளையின் வாழ்வில்.
குழந்தையின் அழுகைக்காகத் திருட்டை ஒப்புக் கொண்டது, பட்டினியோடு படுத்துக் கிடக்கும் மனிதர்களின் வீட்டின் முன் சீனிக்கிழங்கை வைத்து விட்டுப் போவது, ஏதோ ஒரு ரயில் நிலையத்தில் சீரழிக்கப்பட்டு நிர்க்கதியாய் நின்ற பெண்ணை மணியன் பிள்ளையின் நண்பன் அழைத்து வந்து ஆதரவு கொடுத்தது, உயிருக்குப் போராடுகிற கணவனுக்கு மருந்து வாங்க விபச்சாரத்தில் ஈடுபட்ட - தெரியாத பெண்ணுக்காகத் திருடப்போனது, மணவறைத் திருடன் மணப்பெண்ணின் மீது ஆசை ஏற்பட்டு அவளைத் தொட்டதும் தன் மகளின் நினைவு வந்ததால் அவளைத் தட்டி தூங்க வைத்தது, சகல குற்றங்களைச் செய்து தன்னை தெருவில் விட்டுவிட்டுப் போன மணியன் பிள்ளையை மன்னித்து அவரது மனைவி மெகருன்னிஸா கடைசி வரை அவருக்காகவே வாழ்ந்து, அன்பு செய்து இறந்தும் போனது, சலீம் பாயாக வாழ்ந்து ஏமாற்றியது திருடன் எனத் தெரிந்த பின்பும் அவனுக்காக ஓடி வந்து யுசஃப் அழுது நின்றது, திருடனுக்கும் கருணையோடு உதவி செய்த சில நல்ல காவலர்கள், நீதிமன்றம் இப்படியென்று அன்பும், கருணையும் நிறைந்து கசிந்துருகவும் வைக்கிறது மணியன் பிள்ளையின் கதை.
ஒரு திருடன் என்ன போதிப்பது, பெண்களை அத்தனை இழிவாக நடத்திய ஒருவன் என்ன அறிவுரை சொல்வது என்றளவில் மட்டுமே இந்த புத்தகத��தைச் சுருக்கிக் கொள்ள முடிந்து விட்டால் இதிலிருந்து எடுத்துக் கொள்ள ஒன்றும் இல்லை. ஆனால் ஆழமாக வாசித்துப் பார்த்தால் வாழ்வில் சகல குற்றங்களையும் செய்த திருடனின் ஆத்ம விசாரணையில் தெறித்து விழுந்த அத்தனைத் தத்துவங்களும், புரிதல்களும் முத்துக்களே.
அது காட்டுகிற திறப்புகளும், புரிதல்களும் ஆத்மார்த்தமானவை. அதில் முடிந்த அளவுக்கு கைகளில் அள்ளி எடுத்துக்கொண்டேன் எடுக்க முடியாதவற்றை மணியன் பிள்ளை சொல்வது போல் எனக்காணவை இல்லை என்று ஒதுக்கியும் தள்ளி விட்டேன்.
முன்னமே சொன்னது மாதிரி திருடனின் வாழ்வில��ருந்து திருடிக் கொள்ள எனக்கு இவ்வளவு இருக்கும் என்று நினைக்கவில்லை அப்படி நான் திருடிக்கொண்டவை ஏராளம்.
முடிந்தால் நீங்களும் திருடிக்கொள்ளுங்கள் - இன்னமும் நடுங்கிக் கொண்டே இருக்கும் ஒரு வாழ்க்கையை, சமூகம் பற்றியான புரிதலை, மானுட அன்பை, நேசத்தை மற்றும் அதன் கருணையை.