புத்தகம்: வெண்முரசு -வெண்முகில்நகரம்
ஆசிரியர்: ஜெயமோகன்
வாசித்தது:venmurasu.in
அச்சு புத்தக பக்கங்கள்: 1066
வெண்முகில் நகரம் என்பது முகில்கலால் சூழப்பட்ட இந்திரபிரஸ்தம். அது எப்படி உருவாகப் போகிறது என்பதன் ஒவ்வொரு படிநிலை தான் இந்த புத்தகம்.
திரௌபதி சுயம்வரத்தில் முடியும் முந்தைய பாகம், பாண்டவர்கள் ஐவருடன் அவள் எப்படி தன் வாழ்க்கையை பகிர்ந்து கொள்ளப் போகிறாள் என்பதில் தொடங்குகிறது.
கதைக்குள் கதைகள் நிறைந்த வெண்முரசின் இந்த பகுதியிலும் வழக்கம் போல கதைகளுக்கு பஞ்சம் இல்லை.
ஐவருக்குமான கோட்பாடுகள் விளக்கப்படுகிறது, கதைகளாக. பின் ஒவ்வோருவருக்கும் தனித்தனியாக வேறு கதைகள் வேறு சொல்லப்படுகிறது,சூட்சமமாக அவர்கள் புரிந்து கொள்வதற்காக.
ஐவரின் குணநலன்களுக்கு ஏற்றவாறு பொருத்திப் போகிறாள். அவர்கள் பள்ளியறையில் எட்டிப் பார்க்காமல் கதைக்குள் போவோம்.
பாண்டவர்கள் பாஞ்சாலியுடன் தற்காலிகமாக காம்பில்யத்தில் வாழ்கிறார்கள். ஆனால் சக்ரவர்த்தினி அதில் அமைதி கொள்வாளா?
அடுத்து சில கதைமாந்தர்கள் அறிமுகம். மகாபாரதம் கதையில் நான் கேட்டறிந்திராத பூரிசிரவஸ், சாத்யகி.
கதையில் அவர்கள் பங்கு என்ன என்றே அதிகம் பேசப்படாதவர்களுக்கு முக்கிய கதாப்பாத்திரங்களின் அளவுக்கு பாத்திரப் படைப்பு செய்து, விரித்து எழுதி அசத்தியிருக்கிறார் ஆசான்.
பால்ஹிகக் கூட்டமைப்பை இணைக்க,குல மூத்தவரான பிதாமகர் பால்ஹிகரைக் கொண்டு பால்ஹிகக் குடிகளை ஒன்று திரட்டும் பொருட்டு பணிக்கப்படுகிறான் பூரிசிரவஸ்.
அதற்காக சிபி நாட்டுக்கு பயணப்படும் பூரிக்கு, பொன்னியின் செல்வன் வந்தியத்தேவன் போல செல்லும் இடமெங்கும் பெண் விசிறிகள். வாசகிகளும் அதில் அடக்கம் !!!
மானாவாரியாக காதலில் விழுகிறான். மணந்து கொள்வதாக வாக்கும் அளிக்கிறான். காடு மலை என எல்லா இடத்துப் பெண்களுமே திரௌபதியையே அவனிடம் விசாரிக்கிறார்கள்.
இதற்கிடையில் முதலில் தொட்டில் போல கட்டி தூக்கிவரப்பட்ட பால்ஹிகர் சொந்த மண் மீண்ட முறுக்கில் பூரியையே மிஞ்கிறார்.
இளமை திரும்புதே என்று வேட்டையனாகி, இளம் பெண்ணை மணந்து அவளுக்கு குழந்தை கொடுக்கும் அளவுக்கு தெம்பாகிவிடுகிறார்.
அவரைத் தேடிப் போன இடத்தில் பூரியும் மலைமகள் ஒருத்தியை திருமணம் செய்து கொள்கிறான். மலைமகனாக இல்லாமல் தனக்கென்று அரசமைத்து கோட்டை கட்டி வாழும் கனவு காண்கிறான்.
பால்ஹிகரின் வருகையால் அவர்கள் எதிர்பார்தத்தது போல் ஒன்றிணைகிறது பால்ஹிக கூட்டமைப்பு. அவர்கள் சார்பில் பேச அஸ்தினபுரம் செல்கிறான்.
அங்கே துரியோதனனின் அன்பிற்கு பாத்திரமாகிறான். கௌரவர்களும் கர்ணனும் அவனை தங்களுள் ஒருவனான காணத் தொடங்குகிறார்கள். அவர்கள் சார்பில் தூது செல்கிறான். கௌரவர்கள் கதை அதன் பின்னர் பூரியின் பார்வையில் விரிகிறது.
அஸ்தினபுரியில் மீண்டும் ஒரு காதல், துச்சளையுடன்.
நான்கு பேர் நான்கு காதல் என்று பூரி ஒருபுறம் இருக்க, மறுபுறம் உயிரும் உடலும் கிருஷ்ணனுக்கே என்று சாத்யகி.
தங்கள் வருங்காலத்தை மேம்படுத்த துவாரகைக்கு பயணப்படும் பல யாதவ இளைஞர்கள் போல் கிருஷ்ணனுக்காக தன் உயிரையும் துறக்க சித்தமாகி அடிமைக் குறி பெற்று நகர் நுழைகிறான்.
துவாரகையின் பிரம்மாண்டத்தை கதை மாந்தர்களின் கண்ணோட்டத்தில் விவரிக்கும் பகுதி இது. கிருஷ்ணனின் மருகன் அடிமைக்கூட்டத்தில் நிற்பதைக் கண்டுகொண்ட அமைச்சன் அவனை அழைத்து சென்று இராஜ்யத்து பொறுப்புகளை அளிக்கிறான்.
கிருஷ்ணனுக்கு மிக அணுக்கமானவனாக மாறிவிடும் அவன் பார்வையில் பாண்டவர்கள் பக்கத்து கதை அதற்குப் பிறகு சொல்லப்படுகிறது.
வழக்கம் போல் எல்லா பெண்கள் மனதையும் கவர்ந்து கொள்கிறான் மாயக்கண்ணன்.
பீஷ்மர் நாடு திரும்ப வழிவகுக்கிறான். அவனின் சதுரங்கத்தில் அனைவரும் காய்கள் ஆகிறார்கள்.
தன் மைந்தர்கள் பாண்டவர்களுக்கு எதிராக அவர் அறியாமல் சதி செய்ததை எப்படியோ உய்த்துணர்ந்து, மதவேளமாக மாறும் திருதராஷ்ட்டிரர் துரியன், துச்சாதனனை பிளந்து கட்டுகிறார். இதில் இடையில் வந்த கர்ணனுக்கும் ரெண்டு இடி. சகுனிக்கும், கணிகருக்கும் ரெண்டு கிடைத்திருந்தால் வாசகர்கள் மகிழ்ந்திருப்பார்கள்.
அஸ்தினபுரத்திற்கு பாண்டவர்கள் சார்பாக தூதுவனாக கிருஷ்ணன் புறப்படுகிறான். குந்தியிடமிருந்தும்,திரௌபதியிடமிருந்து பாகப்பிரிவினைக்கான குறிப்புகளோடு செல்கிறான்.
துவாரகைக்கு நிகரான ஒரு நகரத்தை உருவாக்க விளையும் தன் கனவை கிருஷ்ணனிடம் சொல்லி அவனிடமே உதவியும் கேட்கிறாள் பாஞ்சாலி.
அவள் கனவு நகரம் தான் இந்திரபிரஸ்தம் !
இந்த பாகத்துக்கு வெண் முகில் நகரம் என்று பெயர் வைத்ததுக்கு பதிலாக கல்யாண மாலை என்று பெயர் வைத்திருக்கலாம்.
அத்தனை திருமணங்கள்!!!
பாண்டவர்கள் திருமணம் முடிந்தால் கௌரவர்கள் சும்மா இருப்பார்களா? போட்டி போட்டுக்கொண்டு நாடு முழுவதும் இருந்து மணமகள் வேட்டையாடுகிறார்கள்.
கௌரவர்கள் நூற்றுவர் பெயரையே முழுவதும் அறியாத நம்மை, அவர்கள் மனைவிமார்கள் பெயர் வரை மனப்பாடம் சொய்யாமல் ஆசான் விடுவதாக இல்லை.
ஆனால் அந்ந களேபாரத்தில் அதிகம் பாதிக்கப்படுவது நம்ம பூரிதான். அவன் நேசித்த இரு பெண்கள் பாண்டவர்கள் மனைவியாகிறார்கள். துரியோதனன் தங்கையை சூழ்நிலை காரணமாக அவன் மணக்க முடியாமல் போகிறது.
பானுமதி துரியனின் காதல் அழகு. ஒரு மாறுபட்ட துரியன் மனதுக்கு இனியவனாக தோன்றுகிறார்.
இராஜ மரியாதையுடன் அஸ்தினபுரிக்கு வரவேற்க்கப்படுகிறான் கிருஷ்ணன். ‘எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை’ என்று பாண்டவர்களும் கௌரவர்களும் கொஞ்சிக குலாவிக் கொள்ள, பாரதம் தெரியாதவர்கள் வாசித்தால் அப்படி ஒரு போர் வருமா என்று கேள்வி எழுப்ப வைக்கும் அளவுக்கு எழுதியுள்ளார்.
இந்த கதையை ஆசான் இன்னும் எப்படியெல்லாம் மாற்றப் போகிறார் என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
இறுதியில் பாஞ்சாலியின் நகர் நுழைவு ஆரவாரமாக நிகழ்கிறது. பூரிசிரவஸும் சாத்யகியும் நதிக்கரையில் சந்தித்துக் கொள்வதோடு பாகம் முடிவு பெறுகிறது.
நட்பாக பிரியும் அவர்கள் போரில் எப்படி மீண்டும் சந்திப்பார்கள் என்று தெரிந்து கொள்ளாமல் இருந்திருக்கலாம் என்று தோன்றியது.
மூன்று மாதங்கள் போனது தெரியாமல் போகிற அளவுக்கு இந்த பெரிய பாகம் விறுவிறுப்பாக சென்றது. இந்திரநீலத்துக்குள் நுழைய மணம் காத்துக் கொண்டிருக்கிறது.