மஹாபாரதக் கதைகள் வரிசையில் ஏற்கனவே வந்திருக்கும் முதல் மூன்று புத்தகங்களின் தொகுப்பே இந்த நான்காவது புத்தகமாகும். அம்மூன்று கதைகளையும் இதில் வரிசைப்படுத்திக் கொடுக்க முயன்றிருக்கிறேன். மஹாபாரதம் உரைக்கப்படும் களமாக இருந்த அந்த நாகவேள்வி ஏன் நடந்தது? அப்படி ஒருவன் பாம்புகளை அழிக்க வேண்டிய காரணமென்ன? பாம்புகளுக்குக் கிடைத்த சாபம்தான் என்ன? சாபத்தைச் செயலிழக்கச் செய்ய பாம்புகள் செய்த முயற்சிகள் என்ன? ஆதியில் பாம்புகளின் தாயான கத்ரு அவற்றுக்குக் கொடுத்த சாபமே காரணம் என்று சொல்லப்படுகிறது. அச்சாபத்தைச் செயலிழக்கச் செய்ய வாசுகி, பாற்கடல் கடையப்பட்டபோது மந்தர மலையைக் கட்டி உருட்டும் கயிறாகப் பயன்பட்டான்.