தமிழகத்தின் அரசியல் வரலாறு, தமிழக வரலாற்றைப்போல் நெடியது. ஆனால், இங்கு அது ஏனோ அரைகுறையாகவே பதிவுசெய்யப்பட்டு வந்துள்ளது. செயின்ட் ஜார்ஜ் கோட்டையைக் கைப்பற்றி, ஆங்கிலேயர்கள் சென்னையில் வலுவாகக் காலூன்றிய பிறகு, தமிழக அரசியல் வரலாறு, ஆவணங்களுக்குள் வந்தன. ஆனால், அவை ஆங்கிலேயர்களின் நியாயங்கள் - இந்தியர்களின் சட்ட விரோதங்கள் என்ற துரோகப் பார்வையில் பதிவு செய்யப்பட்டவை. ஆங்கிலேயர்கள் விரட்டப்பட்ட பிறகு எழுதப்பட்ட தமிழக அரசியல் வரலாறு, இயக்கங்கள், கட்சிகளின் கொள்கைகள், அங்கு அதிகாரத்துக்கு வந்தவர்கள், அவர்களை முழுமையாக எதிர்த்தவர்கள் பார்வையில் அங்கொன்றும் இங்கொன்றுமாகப் பதியப்பட்டன. காங்கிரஸ் கட்சியின் தேசியவாதம், கம்யூனிஸ்டுகளின் வர்க்கப் பார்வை, நீதிக்கட்சியின் சமூக நீதி, திராவிட இயக்கங்களின் சமூகச் சீர்திருத்தம், தமிழ் தேசியவாதிகளின் மொழி உணர்வு, தலித் இயக்கங்களின் ஒடுக்கப்பட்டோர் குரல்... என்று நெடிய பாதையில் பயணப்பட்டுள்ள தமிழக அரசியல் வரலாற்றில் விடுபட்டுப்போன பக்கங்கள் ஏராளம். எழுதுபவர்களின் சார்பு, விருப்பம், தேவை, நோக்கங்களுக்கு ஏற்ப, அது வளைத்து நெளிக்கப்பட்டது. அதில், சுதந்திரத்துக்காகப் போராடிய காங்கிரஸ் பேரியக்கத்தில் இருந்து சனாதன தர்மங்களுக்கு எதிராகக் குரலெழுப்பியவர்களின் குரல் ஒலிக்கவில்லை. கோடீஸ்வரர்களாகவும் ஜமீன்தார்களாகவும் இருந்த, நீதிக்கட்சியின் தலைவர்கள் எளிய மக்களுக்கு ஆற்றிய பணிகள் பதிவு செய்யப்படவில்லை. ரஷ்யப் புரட்சிக்கு முன்பே தமிழகத்தில் கம்யூனிஸம் கால் ஊன்றிவிட்ட வர்க்க வரலாறும், திராவிடச் சிந்தனைகளுக்கான விதையை நட்டது அயோத்திதாசப் பண்டிதர் என்பதும் எழுதப்படவும் இல்லை... தெளிவாக விளக்கப்படவும் இல்லை. அப்படி விட்டுப்போனவற்றை, வேண்டுமென்றே விடப்பட்டவற்றை, தேடி எழுதி பதிவு செய்ததன் மூலம் தமிழக அரசியல் வரலாற்றில் அறுந்துபோன கண்ணிகளை இந்த நூலில் கோர்த்துள்ளார் நூலாசிரியர் ப.திருமாவேலன். தொலைபேசியே அரிதிலும் அரிதான காலத்தில், உலகம் முழுக்க தனக்கான நெட்வொர்கை வைத்திருந்த சிங்காரவேலர் என்று தொடங்கி, திரு.வி.க., வ.உ.சி., ரெட்டைமலை சீனிவாசன், சத்தியமூர்த்தி, காமராஜர், அண்ணா, ஓமந்தூரார், பக்தவத்சலம், குமாரசாமி ராஜா, அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா என்று இந்த நூல் பரந்து விரிகிறது. வெறுமனே வரலாற்று நாயகர்களின் வாழ்க்கைக் குறிப்பாகவும், அரசியல் இயக்கங்களின் கொள்கை முழக்கங்களாகவும் மட்டுமே இல்லாமல், தனி மனிதர்கள் வரலாற்று நாயகர்களானது எப்படி? அதற்கான பின்னணி என்ன? அவர்களின் தியாகம் எத்தனை உன்னதமானது என்பதை எடுத்து விளக்கியதோடு, இன்றைய தலைமுறைக்கும் நாளைய தலைமுறைக்கும் அரசியல் ஏன் அவசியம் என்பதையும் பொட்டில் அடித்ததுபோல் உரைக்க வைக்கிறது. நூலை வாசிக்கும்போது, மற்ற வரலாற்று நூல்களைப் போல், புள்ளி விவரங்கள், காலக்கோட்டை அடுக்கி வாசகர்களை மலைக்க வைக்காமல், எளிய மனிதர்கள், மாணவர்கள் புரிந்துகொள்ளும் வாசிப்பை இந்த நூல் சாத்தியப்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது. ‘பெரியோர்களே... தாய்மார்களே’ மூலம், தமிழக அரசியல் வரலாறை வாசிக்க அனைவரும் வாருங்கள்.
தமிழகத்தின் 400 ஆண்டு அரசியல் சூழ்நிலையையும், அவ்வப்போது இந்திய மற்றும் உலக அரசியல் பற்றிய நிரம்ப தகவல்கள் அடங்கிய பெட்டகமே ப.திருமாவேலனின் "பெரியோர்களே தாய்மார்களே" எனும் அரசியல் கட்டுரைத்தொகுப்பு. நம் பள்ளி பாடப் புத்தகத்தில் மறைக்கப்பட்ட பல்வேறு வரலாறுகளை சுவாரசியமான முறையில் காட்டமான விமர்சனரீதியில் தொகுக்கப்பட்டுள்ளன. எனக்கு மிகவும் பிடித்த ஆகச்சிறந்ததாக நான் கருதுவது நாம் பெரிதும் அறியாத நீதிக்கட்சியின் உருவாக்கிய பிட்டி.தியாகராயர்,டி.எம்.நாயர் மற்றும் சி.நடேசன் ஆகியோரின் வரலாறும்,காந்தியின் தமிழக அரசியல் அத்தியாயங்கள்,தோழர் ஜீவானந்தம் அவர்களின் அரசியல் மாண்பு,மேலும் காங்கிரஸின் ஆட்சிக்காலத்தில் காமராஜர் என்னும் ஒற்றை மனிதரின் புகழ் ஒளியால் மங்கிய Unsung herosக்களனா ஓமந்துரார் ராமசாமி ரெட்டி மற்றும் பி.எஸ்.குமார ராஜா அவர்களின் தன்னலமற்ற அரசியல் அறம் சார்ந்த வாழ்க்கை போன்றவை ஆகும். மேலும் ராஜாஜி மற்றும் தீரர் சத்தியமூர்த்தி அவர்களின் இருவரும் என்னதான் நாட்டு விடுதலைக்குப் போராடினாலும், அவர்களின் மோதல் போக்கான அரசியல் மற்றும் இருவரின் பிற்போக்குத் தனமான சிந்தனைகள் நம்மை கண்டிப்பாக அதிர்ச்சி அடையச் செய்யும். அப்போது மட்டும் RSS அமைப்பு தமிழ்நாட்டில் பலமாக இருந்திருந்தால் பல தலைவர்கள் சங்கிகளாக இருந்திருப்பார்கள்,நல்லவேளை அந்த நேரத்தில் நீதிக்கட்சி மற்றும் திராவிட இயக்கங்களின் முற்போக்கான அரசியல் தான் தமிழகத்தை இது போன்ற பிற்போக்குத் தனங்களில் காப்பாற்றி உள்ளது. மொத்தத்தில் அரசியல் பற்றி அறிய விரும்புபவர்களுக்கு இந்நூல் ஆகச்சிறந்ததாக அமையும். நூலின் ஆசிரியர் ப.திருமாவேலன் அவர்களுக்கு என் வாழ்த்துக்கள்💐. இப்புத்தகத்தை எனக்கு அறிமுகம் செய்த White nights வலைவொளி தோழர்களுக்கு என் அன்பு கலந்த நன்றிகள்💐. பி.கு: இந்நூலின் அறிமுகம் செய்த White nights ன் வளைவோளியின் இணைப்பு உள்ளது. https://youtu.be/ZyTsXp6ALdI
What a book!., Every Tamilans must read this. I repeat 'Its must'. "A moral sense" தமிழக அரசியல் வரலாற்றை ஆதி முதல் அந்தம் வரை எளிய நடையில், தெள்ளத் தெளிவாக விவரிக்கிறது. அரசியல் என்பது ஒரு சிலரின் தனி சொத்து அல்ல, அது பொது சொத்து என்று புரிய வைக்கிறது. இளைய தலைமுறைக்கு "அரசியல் என்பது நஞ்சல்ல, அது ஒரு அமிர்தம், அதை கையாள்பவன் பொறுத்தே, அது சாக்கடையா இல்லை பூக்கடையா என்று தீர்மாகிக்கப்படுகிறது" என்று புரிய வைக்கிறது இந்நூல். இன்று "அரசியல் ஒரு சாக்கடை" என்பதற்கு காரணம், அதில் உள்ள கிருமிகளால் தான் தவிர, அந்த இடத்தை பொருத்தல்ல!
சமீப காலமாக கலைஞர் செய்திகள் தொலைக்காட்சியில் வெளிவரும் நிகழ்ச்சிகள் செய்தி தொகுப்புகள் எல்லாம் மிக நேர்தியானவை, காரணம் ப. திருமாவேலன். இவரின் ஊடகத்துறை அனுபவமும், அறிவாற்றலும் வியப்புக்குரியது. இவர் எழுத்தின் மீது கொண்ட அதீத மதிப்பில் படித்தது தான் “பெரியோர்களே தாய்மார்களே!”. விகடனில் தொடராக வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பு.
கடந்த சட்டமன்ற தேர்தல் சமயத்தில் வெளிவந்த அரசியல் தொடர், படிக்க படிக்க பல கேள்விப்படாத தகவல்களை அறிய நேர்ந்தது. திராவிட இயக்கம் சார்ந்த கட்டுரைகள் பெரும்பாலும் விமர்சன பார்வையில் தான் எழுதப்பட்டுள்ளன. தமிழக அரசியில்,இந்திய அரசியல்,உலக அரசியல் என அவரால் எழுதப்பட்ட அத்தனை கட்டுரைகளும் மாபெரும் தகவல் களஞ்சியம் தான்.
அவரின் ஊடகத்துறை தனித்துவத்திற்கும்,அனுபவத்திற்கும் இக்கட்டுரை தொகுப்பு ஒரு சாட்சி. தனிப்பட்ட முறையில் எனக்கு ஓமந்தூரார், மா.போ.சி, கீ.ஆ.பே போன்றவர்கள் பற்றிய கட்டுரைகள் சுவாரசியமாகவும் அறிவூட்டும் வகையிலும் அமைந்தது. கட்சியை உடைத்த புரட்சி நடிகர் MGR பின்னாளில் கலைஞரிடம் நெருக்கமாக பழகியதும், அவர்களுக்குள்ளான அந்த பிரியங்களையும் ஒரு கட்டுரையில் சிறப்பாக காட்சிப்படுத்தி இருந்தார்.
நீதி கட்சி தலைவர்கள் பற்றிய கட்டுரையும், பேரறிஞர் அண்ணா பற்றிய கட்டுரையும் என் மனதுக்கு நெருக்கமானவை. அவர்கள் ஆற்றிய சமூக தொண்டிற்கும் அர்பணிப்பிற்கும் நாம் அனைவரும் கடமை பட்டுளோம். “Non brahmin manifesto” என்று நீதிக்கட்சி வெளியிட்ட அறிக்கை இன்றளவும் நம் வாழ்க்கையில் மாபெரும் மாற்றங்களை நிகழ்த்தி வருகிறது என்றால் வியப்பில்லை.
2016 சட்டமன்ற தேர்தல் என்பதால் ஜெயலலிதாவையும், மநகூ வையும் சற்றே கூடுதலாக விமர்சித்திருந்தார், மதுவிலக்கு சார்ந்த கட்டுரைகளில் இரு திராவிட கட்சிகளும் வசை மொழியில் இருந்து தப்பவில்லை. விகடனில் இருந்ததால் அவரது அணுகுமுறை வேறுவடிவில் இருந்திருக்கலாம். ஆனால் ஒட்டுமொத்தமாக பார்க்கையில் கடந்த கால அரசியல் வரலாற்றை தெரிந்துகொள்ள நிச்சயம் உதவும்.
வரும் சட்டமன்ற தேர்தலுக்கு தயாராகும் நோக்கத்திலும்,வரலாற்று பிழைகளை திருத்தவும், சூழ்ச்சிகளை கண்டறியவும் இப்புத்தகம் அவசியம் உதவும்.
பல்வேறு கட்டுரைகளின் தொகுப்பு என்பதால் விரிவாக எழுத முடியவில்லை, வாசித்துவிட்டு உங்கள் கருத்துக்களை பகிருங்கள்.
இப்பொழுதுதான் ப.திருமாவேலன் எழுதிய 'பெரியோர்களே தாய்மார்களே' நூலைப் படித்து முடித்தேன். தமிழக அரசியல் பற்றி அழகிய தமிழில் அவர் தீட்டிய காவியம் அது. கிட்டத்தட்ட 400 வருட கால தமிழ்நாட்டு வரலாற்றை ,அரசியல் பின்புலத்தை தெளிவாக ஆராய்ந்துள்ளார். சென்னை பட்டணம் உருவாக்கப்பட்ட கதைகளில் இருந்து சென்னை கோட்டை உருவானது உட்பட நிகழ்கால அரசியலில் நிலவரம்வரை விளக்கியுள்ளார்.
திராவிட இயக்கம் பிறந்து வளர்ந்த வரலாற்றை அயோத்திதாச பண்டிதர் , ரெட்டைமலை சீனிவாசன் ஆரம்பித்து ஜெயலலிதா வரை படம் பிடித்து காட்டியுள்ளார். சென்னை மாகாணம் முதல் இன்றைய தமிழ்நாட்டு முதலமைச்சர் என ஒவ்வொருவரின் செயல் திறன்களையும் விளக்கியுள்ளார். இதுவரை பெரிதும் பேசப்படாத ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் பற்றி விவரித்துள்ளார். பல இடங்களில் நகைச்சுவை ததும்ப எழுதியுள்ளார். இவர் எழுத்தில் அழகு தமிழ் மென்மேலும் அழகு பெறுகிறது. இப்புத்தகத்தை யூடியூபில் ஆடியோ புத்தகமாக வெளியிட்டுள்ளார். அதைக் கேட்டுவிட்டு இப்புத்தகத்தைப் படித்த எனக்கு இப்புத்தகத்தின் ஒவ்வொரு வரியையும் படிக்கும் போது அவருடைய குரல் கணீர் கணீரென்று என் செவிகளில் ஒலித்துக் கொண்டே இருந்தன.
சாமானிய மக்களுக்கு அரசியல் மீது உள்ள வெறுப்பு, குறிப்பாக தமிழக அரசியல்வாதிகள் மீது உள்ள கசப்பு இப்புத்தகத்தைப் படித்தால் நிச்சயம் பறந்துபோகும். இந்தி எதிர்ப்புப் போராட்டம் பற்றி இவர் எழுதிய குறிப்புகள் கண்களில் கண்ணீர் மல்க வைப்பன. தமிழ் நாட்டின் நலனுக்காக தங்கள் இன்னுயிர்களை அர்ப்பணித்த எண்ணற்ற மனிதர்களுக்கு இப்புத்தகம் அஞ்சலி செலுத்தியுள்ளது. சென்னை மாகாணத்தின் ��ெயரை தமிழ்நாடு என மாற்ற உயிர் துறந்த தியாகி சங்கரலிங்கனார் ஐ பற்றியும், சென்னையை தமிழ்நாட்டோடு இணைக்க அரும் பாடுபட்ட தலைவர்களின் பங்களிப்பையும், கன்னியாகுமரி மாவட்டத்தை திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் இருந்து தமிழ்நாட்டுடன் இணைக்க பாடுபட்ட தியாகிகளின் தியாகத்தையும் போற்றி உள்ளது.
சிறு சிறு ஊர்களாக இருந்த பகுதிகளை இணைத்து சென்னப்பிரதேசமாக, மதராஸ் மாகாணமாக உருவாக்கிய ஆங்கிலேயே தொழிலதிபர்கள் பற்றி விளக்கியுள்ளார். இந்தியாவின் பற்பல போராட்டங்களில் தனித்துவம் வாய்ந்ததாக தமிழகம் விளங்கியதையும் பல்வேறு முன்னேற்ற முன்னேற்றங்களில் தமிழ்நாடு முன்னணியில் நின்றதையும் தெளிவுபடுத்தியுள்ளார்.
ஏன் அரசியலில் நாட்டம் செலுத்த வேண்டும் என்பதில் ஆரம்பித்து தமிழகத்தின் மொத்த வரலாற்றையும் அங்குலம் அங்குலமாக விவரித்து தமிழர்களின் தியாகங்களை பதிவு செய்து, மற்றவர்கள் போற்ற மறந்த தமிழர்களின் தலைவர்களை, மாமனிதர்களை நயம்பட நினைவு கூர்ந்துள்ளார்.
தலைவர்கள் செய்த நல்லனவற்றை புகழ்ந்ததோடு நின்றுவிடாமல் செய்த தவறுகளை தக்க இடங்களில் சுட்டிக் காட்டியுள்ளார்;அப்போது கொதித்தெழுந்துள்ளார். எந்த கட்சிக்கும் இயக்கத்துக்கும் சார்பு இல்லாமல் நடுநிலையோடு அனைத்தையும் அலசியுள்ளார்.
விடுதலை போராட்டத்தை சிப்பாய் கலகத்தில் இருந்து ஆரம்பிக்கும் பல ஆசிரியர்களைப் போல் இல்லாமல் தமிழ்நாட்டிலிருந்து ஆரம்பித்துள்ளார்.மருது சகோதரர்களையும் கட்டபொம்மனையும் திப்பு சுல்தானையும் வைத்து வீர வரலாற்றைத் தொடங்கியுள்ளார். பூலித்தேவனும் மாவீரன் சுந்தரலிங்கமும் தீரன் சின்னமலையும் சுதந்திர போராட்ட வீரர்களே என நினைவுப்படுத்தியுள்ளார்.
அரசியலில் உள்ள ஆணாதிக்கத்தையும் , இருட்டடிப்பு செய்யப்பட்ட தலைவர்களின் தியாகங்களையும் , மறைக்கப்பட்ட அரசியல் நிகழ்வுகளையும், மிகவும் விமர்சிக்கப்படும் தலைவர்களின் நற்செயல்களையும் வெளிச்சம் போட்டு காட்டியுள்ளார்.
சென்னை மாநகரத்தின் வரலாற்றை அவ்வளவு அழகாக அடுக்கியுள்ளார். தமிழ்நாட்டு அரசியலோடு நின்று விடாமல் உலக அரசியலிலும் எட்டிப்பார்த்துள்ளார். கம்யூனிசத்தை, பொதுவுடைமையை அது இந்தியாவில் பரவிய வரலாற்றை அழகுற தொகுத்துள்ளார் . இந்திய விடுதலை வரலாற்றை பாகிஸ்தான் பிரிவினை வரை சாவர்க்கர் வரை பேசியுள்ளார்.
சர் பிட்டி தியாகராயர், டி எம் நாயர், நடேசனார் , எம்.சி. ராஜா ,ரெட்டைமலை சீனிவாசன் ,ஓமந்தூர் பி ராமசாமி ரெட்டியார், பி எஸ் குமாரசாமி ராஜா, கக்கன் ,ஜீவா, காமராஜர், பக்தவத்சலம், ராஜாஜி, காந்தி ,நேரு, பெரியார் ,அண்ணா, கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா முதலிய பல தலைவர்களைப் பற்றி அழகுற பேசுகிறார். அந்நிய ஏகாதிபத்தியத்தில் ஆரம்பித்து ,சுதந்திரப் போராட்டம் என விரிவடைந்து, தற்கால தமிழ்நாடு அரசியலில் முடிவு பெறுகிறது இந்நூல்.
அடுத்த வருடம் தேர்தல் வரும் நிலையில் அனைவரும் கண்டிப்பாக வாசிக்க வேண்டிய புத்தகம் இது.
வெளியீடு : விகடன் பிரசுரம் புத்தகத்தைப் பரிந்துரைத்த அன்பு அண்ணன் பூ.கொ. சரவணன் -க்கு 🖤🖤
இரு நூற்றாண்டு தமிழக அரசியல் வரலாற்றை , மறைக்கப்பட்ட / மறுக்கப்பட்ட நிகழ்வுகளை , மனிதர்களை தேளிவாக , எவ்வித சமரசம் இல்லாமல். எவ்வித மத , இன , மொழி , கட்சி சார்பு இல்லாமல் எழுதப்பட்ட நூல்.
2016 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு 2015-ல் தொடங்கி 2016 வரை ஜூனியர் விகடனில் தொடராக வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பே "பெரியோர்களே தாய்மார்களே". 5 வருடங்களுக்கு முந்திய சூழ்நிலையில் எழுதப்பட்டிருந்தாலும் இன்றைய சூழ்நிலைக்கும் ஒவ்வொரு கட்டுரையும் பொருந்திப் போவது வேதனையே. இன்னும் சொல்லப் போனால் அப்போதைய அரசியல் சூழ்நிலையை விட இன்றைய அரசியல் சூழல் மிக மோசமாகவே இருக்கிறது.
நாட்டு விடுதலைக்காக தன்னலம் பார்க்காமல் ஆங்கிலேயர்களை தீரத்துடன் எதிர்த்து நின்ற தமிழ் குறுநில மன்னர்களின் அறிமுகத்தில் தொடங்கும் புத்தகம் சமூக விடுதலை வேண்டுமென்று குரல் எழுப்பிய அயோத்திதாசர், நீதிக்கட்சியின் தோற்றம் அதன் வளர்ச்சி, பதவிக்காக அலையாமல் தன்னை தேடி வந்த முதல்வர் பதவியை ஏற்க மறுத்த சர். பி.டி. தியாகராயர் மற்றும் அவரோடு இணைந்து செயலாற்றிய அவரோடு பல்வேறு சமயங்களில் மாற்றுக் கருத்து கொண்டிருந்த டி.எம். நாயர் மற்றும் பலர், காங்கிரசின் தோற்றம் மற்றும் அதன் அசுர வளர்ச்சி, அவர்கள் கவனம் செலுத்த மறுத்த அல்லது மறந்த விஷயங்கள், சமூக விடுதலையை விட நாட்டு விடுதலையே முக்கியமென நினைத்த காங்கிரஸ் பெரும்புள்ளிகள், தென்னாப்பிரிக்காவில் ஆங்கிலேயேர்களை எதிர்த்து நின்று உயிர்துறந்த 15 வயது சிறுமி தில்லையாடி வள்ளியம்மை, அந்த சிறுமியின் மூலமும் மற்றும் பல தீரர்களின் மூலமும் தமிழர்களின் விடுதலை உணர்வையும் தீரத்தையும் அறிந்து வியந்த காந்தி, பிறந்தது முதலே நோயால் அவதிப்பட்டு பிள்ளைகளும் அவரைப் போலவே நோயுற்று அவதியுற மருத்துவம் பயின்று மற்றவர்களுக்கு உதவி புரிந்ததோடு அமைச்சராகி தேவதாசி முறையை ஒழித்துக்கட்டிய டாக்டர். முத்துலட்சுமி ரெட்டி, இந்திய பிரிவினையின் போது தமிழகத்தை வரவிருந்த ஆபத்திலிருந்து முன்னெச்சரிக்கையுடன் காப்பற்றிய முதல்வர் ஓமாந்தூர் ராமசாமி, பி.எஸ். குமாரசாமி ராஜா, தோழர் ஜீவா, இரட்டைமலை சீனிவாசன், சிங்காரவேலர், பெரியார், அண்ணா என தமிழக அரசியலில் கொள்கைப்பிடிப்புடனும் சமூக விடுதலைக்காகவும் உழைத்தவர்களை அறிமுகம் செய்து வைக்கிறது ஒவ்வொரு கட்டுரையும்.
பெரும்பாலான கட்டுரைகள் இது போன்ற சூழல் உருவாக காரணமாக இருந்த வாக்காளர்களை நோக்கி கேள்வி எழுப்புகிறது. அரசியல் சுரணையற்று வாழ்வது எத்தனை அபாயகரமான சூழலை/அரசியலை இங்கு வளர்த்தெடுக்கும் என்பது கட்டுரைகளின் வழியே பேசப்படுகிறது. நீண்ட காலமாக சொல்லப்பட்டு வரும், "அரசியல் ஒரு சாக்கடை" என்றொரு சொற்றொடர் எத்தனை காலத்திற்கு இன்னும் சொல்லப்பட்டுக் கொண்டே இருக்கும் என்பதெல்லாம் விவாதிக்கப்படுகிறது.
உட்கட்சி பூசல், தலைமை போட்டி, ஈகோ மோதல் அந்த காலத்திலும் இருந்திருக்கிறது என்றாலும் மிக மிக மோசமான தலைமையை அடியொற்றி, குனிந்து கூழை கும்பிடு போட்டு, தன்மானத்தை அடகு வைத்திடும் அரசியல்வாதிகள் இன்று புற்றீசல் போல பெருகிக் கிடக்கிறார்கள். மக்கள் சேவை என்பதெல்லாம் ஒன்றுக்கும் உதவாத விஷயமாகவே பார்க்கப்படுவது தான் இன்றைய அரசியல் சூழல். பதவிக்காலம் முடிவதற்குள் முதலீட்டை விட பத்துமடங்கு, இருபது மடங்கு, நூறு மடங்கு லாபத்தை சுருட்டிக் கொண்டு செல்வது ஒன்றே அரசியல் என பார்க்கப்படுகிறது. ஓட்டுக்கு காசு என மக்களை பழக்கப்படுத்தி, தேர்தல் நேரத்தில் அந்த காசை எதிர் நோக்கி மக்கள் காத்து கிடக்கும் அவல நிலையை ஏற்படுத்தியது தான் இன்றைய அரசியல் பிழைப்புவாதிகளின் சாதனை.