கல்விச் சீர்திருத்தம், கல்விக்கூட சுதந்திரம், மாற்றுக்கல்வி ஆகியவை பற்றி சமீப ஆண்டுகளில் நிறைய விவாதங்கள் நடைபெறுகின்றன. பள்ளிக்கல்வி பற்றி இப்படி நிறைய கருத்துப் பரிமாற்றங்கள் நிகழ்ந்தாலும், கல்லூரி மாணவர்களைப் பலரும் கண்டுகொள்வதில்லை. அந்த வெற்றிடத்தை நிரப்பும் நூல் இது! ‘ஒரு வகுப்பறை யாருக்கு சொந்தம்... பேராசிரியருக்கா? மாணவனுக்கா? கல்விக்கூடத்தின் கதாநாயகனாக யார் இருக்க வேண்டும்?’ எனக் கேள்விகளை எழுப்பி விடை தேடுகிறார் திரு. ச.மாடசாமி. அய்யப்பராஜ் என்ற பேராசிரியரின் பார்வையில் ஒரு நாவல் போல விரியும் இந்த நூல், தங்கள் பணியில் அக்கறையுள்ள அத்தனை ஆசிரியர்களுக்கும் வேதம். அதே சமயம் மாணவர்களும் தங்களைச் செதுக்கிக்கொள்ள இந்த நூல் வாய்ப்பு தருகிறது. கல்வியில் முழுமை பெற்று, வாழ்வில் தனக்குரிய இடத்தை ஒருவர் தேடிக்கொள்வது எப்படி என்பதற்கான வழிகாட்டியாக இந்த நூல் இருக்கிறது. பாதைகளைத் தேர்ந்தெடுப்பவர்களைத் தாண்டி பாதைகளை உருவாக்குபவர்களும் இருக்கிறார்கள். எல்லோருக்கும் சிந்தனையின் வாசலைத் திறந்து வைத்து காத்திருக்கிறது ‘எனக்குரிய இடம் எங்கே?’.
"எனக்குரிய இடம் எங்கே" புத்தகத்தை அண்மையில் வாசித்து முடித்துள்ளேன். புத்தகத்தின் ஆசிரியர் சா.மாடசாமி, ஓய்வு பெற்ற தமிழ்ப் பேராசிரியர் ஆவார். அவர் தன் அனுபவம் வாயிலாய் கற்றுணர்ந்தவைகளைக் கோர்வையாக புத்தகத்தில் வடித்துள்ளார்.
புத்தகத்தின் தலைப்பிலே அறியும்படி, வகுப்பறையில் உள்ள ஒவ்வொரு மாணவர்களுக்கான இடம் எது? இங்கு இடம் என்பது முதல் பென்ச் ஓ அல்லது கடைசி பென்ச் ஓ என்பதில்லை. வகுப்பறையில் அவர்களின் திறன் என்ன? மற்ற மாணவர்களை விடவும் அவர்களுக்கு தனித்தன்மை என்ன உள்ளது என்பதே தான் தலைப்பாக அமைந்துள்ளது.
வகுப்பறையின் உரையாடல்களையும் தன் அனுபவங்களையும் கோர்த்து, அய்யப்பசாமி என்ற ஆசிரியக் கதாப்பாத்திரத்தின் வழியாக எழுதியுள்ளார். வாசிப்பதற்கு ஏற்றவாறு உள்ளது.
வகுப்பறை என்பது ஆசிரியருக்கானதா, மாணவர்களுக்கானதா அல்லது இருவருக்குமானதா?... வகுப்பறையில் ஆசிரியரின் பங்கு என்ன, மாணவர்களின் பங்கு என்ன?
வகுப்பறை என்பது வெறும் கட்டடச் சுவரா ? அப்படியானால், வகுப்பறையை உயிர்பிப்பது எப்படி? என்றெல்லாம் விரிவாகவும் உரையாடலாகவும் அமைத்துள்ளார்.
இந்த புத்தகத்தில் இருந்து பல உரையாடல்களையும் காட்சிகளையும் திரைப்படங்களில் பயன்படுத்தியுள்ளனர். குறிப்பாக, சாட்டை , அடுத்த சாட்டை திரைப்படங்களில் சில காட்சிகள் இந்த புத்தகத்தில் இருந்து சுட்டவை என்பது வெளிப்படையாகத் தெரிகிறது.
குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால், 'அடுத்த சாட்டை' திரைப்படத்தில் வரும் பிரிவு உபச்சார விழா, "சாட்டை" படத்தில் வரும் 'வகுப்பறையில் வாசிக்கும் போது திக்கிய மாணவியை கிண்டலடிக்கும் சக மாணவர்கள்' என பல இங்கிருந்து எடுக்கப்பட்டவை போலும்.
வகுப்பறையில் நடப்பவற்றை இலக்கியமாக்கும் முயற்சியில் வெற்றி பெற்றிருக்கிறார் என்றே சொல்ல வேண்டும். புத்தகத்தை வாசிக்கும் போது நாமும் நமது பள்ளிக்கூட நாட்களை நினைவு கூற முயல்கிறோம். ஆனால் நமக்கு அப்படியான ஆசிரியர் ஒருவரும் கிடைக்க வில்லை.
வகுப்பறையை மாணவர்களுக்கானதாக மாற்றும்போது தான் அது உயிர் பெருகிறதே அன்றி , அது வெறும் கட்டடமாகத் தான் இருக்கிறது. ஒவ்வொரு ஆசிரியரும் கட்டாயம் வாசிக்க வேண்டிய புத்தகம் இது. மாணவர்களும் தான்...