ஒற்றை உயிராய் நீந்தி கரு சேரும் ஒவ்வொரு உயிரும் தன்னிருப்பை தக்க வைத்துக் கொள்ள போராடிக் கொண்டிருக்கின்றது.. அதில் எத்தனை வன்மம், பேராசை, கடபம்... ஆனால் இவைகள் யாவுமின்றி ஜீவித்துக் கொண்டிருக்கும் உயிர்கள் அவசர உலகில் விசித்திரமானவையாகவே இருக்கின்றன. அது வா.மு.கோமுவின் கதைகளில் வரும் பாத்திரங்கள் போன்றே...
வா. மு. கோமு ஈரோடு மாவட்டம் வாய்ப்பாடியைச் சேர்ந்த சிறுகதை, புதின எழுத்தாளர். கொங்கு மண்டல வட்டார வழக்கில் கிராமம் சார்ந்த பாலியல் கதைகளையும் எதார்த்த இலக்கியத்தையும் படைப்பவர். தமிழின் அனைத்து முன்னணி பத்திரிக்கைகளிலும் இலக்கிய பத்திரிக்கைகளிலும் இவரது கதைகள் வெளியாகியிருக்கின்றன. இவரது தவளைகள் குதிக்கும் வயிறு என்ற சிறுகதைத் தொகுப்பு 2008ம் ஆண்டின் சிறந்த சிறுகதைத் தொகுப்புக்கான விகடன் விருதை பெற்றது.
வழக்கம் போல் கொங்கு வட்டார வழக்கில் பின்னி இருக்கும் வா.மு.கோமு சிறுகதைகளின் ஊடே யாரும் தொடாத விளிம்பு நிலை சம்பவங்களை, பாலியல் சிக்கல்களின் கோர்வையாய் சிறுகதைகளைப் படைத்திருக்கிறார்.... மெல்லிய நகைமுரண் விரவிய சம்பவம்கள், அதன் ஊடே மனிதர்களின் பலவீனங்கள் சிறுகதைகளாய் வடிக்கப்பட்டுள்ளது.