குடும்பச் சூழல் தெரிந்தே காதலிப்பவர்கள் கடைசி நேர பரபரப்பில் செய்யும் செயலால் எவரோ ஒருவர் பெரும் துயரத்தில் மாட்டிக் கொண்டு அவதிபடுகின்றனர்.
முதல் மகள் ராஜியின் காதலுக்குப் பெற்றவர்கள் சம்மதிக்காததால் திருமண நாளுக்கு முன்தினம் ஓடிப்போவதால் இரண்டாவது பெண் புவனியை ராஜிக்கு பார்த்த பையனுக்குக் கட்டி வைக்கின்றனர்.
கணவனின் கொடுமைகளைச் சகித்துக் கொண்டிருக்கும் புவனி பெற்றவர்களிடம் சொல்லலாம் என்று பார்த்தால் குடும்பக் கௌரவத்தைக் காத்த குலவிளக்கு என்று அவர்கள் அவளைக் கொண்டாடி வருவதால் தனக்குள்ளே மருகிக் கொண்டிருப்பவள் நிறைமாத கர்ப்பிணி என்றும் பாராமல் கணவன் காட்டிய மூர்க்கத்தனத்தால் குழந்தையை மட்டும் இவ்வுலகில் விட்டு சென்றுவிடுகிறாள்.
தாங்கள் பார்த்த பையன் தான் நல்லவன் அவனுடன் பெண்ணின் வாழ்வு சிறக்கும் என்று உள்ளக் களிப்பில் இருக்கும் புவனியின் பெற்றவர்களுக்குப் பேரிடியாக இருக்கிறது புவனியின் இழப்பு.ஓடிப்போன ராஜியை தூற்றிக் கொண்டிருந்தவர்கள் அவளின் வாழ்வு சிறப்பாக இருப்பதை அறிந்து கொண்ட பின் தங்கள் மனதை மாற்றிக் கொண்டு ராஜியை காணப் புறப்படுகின்றனர்.
தங்கையின் இழப்பால் துவண்டு போய் இருக்கும் ராஜி அவளின் மகளுக்குத் தாயாகிறாள்.