கதாநாயக வில்லன்கள் (anti-heroes) வெகுஜன சினிமாவில் எப்போதும் பார்வையாளனுக்குப் பரவச மூட்டுபவர்கள். மார்லன் பிராண்டோ, ரஜினிகாந்த், சத்யராஜ், சாருக்கான் என எல்லோரும் இதில் வெற்றி பெற்றிருக்கிறார்கள். இந்து முஸ்லீம் பிரச்சினை மற்றும் அமெரிக்காவின் பயங்கரவாத எதிர்ப்பு வேட்டை எனும் இந்த இரு பிரச்சினைகளில் கமல்ஹாஸன் தேர்ந்து கொண்ட கதாநாயகவில்லன் பாத்திரங்கள் என்பது அவரது ஹே ராம், தசாவதாரம், உன்னைப்போல் ஒருவன் மற்றும் விஸ்வரூபம் திரைப்படங்களில் இடம்பெறும் கதாநாயக வில்லன் பாத்திரங்கள் மட்டுமல்ல... குறிப்பிட்ட இரு பிரச்சினைகளைப் பொறுத்து நிஜ வாழ்விலும் கமல்ஹாஸன் கதாநாயகவில்லன் தான். கமல்ஹாசனே இந்த விளையாட்டைத் தேர்ந்து கொண்டிருப்பதால் அவரால் இந்தக் கதாநாயகன் வில்லன் விளையாட்டில் இருந்து வெளிவர முடியாது.
கோவையில் பிறந்த யமுனா ராஜேந்திரன் (Yamuna Rajendran) தற்போது இங்கிலாந்தில் வாழ்ந்து வருகிறார். தமிழின் முக்கிய சினிமா விமர்சகராகவும் அரசியல் கோட்பாட்டாளராகவும் மொழிபெயர்ப்பாளராகவும் தீவிரமாக இயங்கிவரும் இவரது எழுத்துக்கள் உலகெங்கும் அரசியல் ரீதியாகவும் பண்பாட்டு ரீதியாகவும் ஒடுக்கப்படும் மக்களின் அரசியல் போராட்டங்களையும் கலை இலக்கியம் சார்ந்த அழகியல் பிரச்சினை களையும் தீவிரமாக விவாதிப்பவை.