விளையாட்டாய் மறைக்கப்படும் உண்மைகள் துரோகத்தின் கணக்கில் சேர்ந்து கொண்டு ஏமாற்றுபவனாக மற்றவர்களிடம் காட்டத் துணியும்.
சரியான காரணமில்லாமல் மனம் போகும் போக்கில் எடுக்கும் முடிவுகள் எப்பொழுது வேண்டுமானாலும் மாற்றத்தை நோக்கி நகரலாம். அந்நகர்வு எப்பொழுதும் கர்வத்தை உடைத்துக்கொண்டு தான் வெளிவரும்..
அருகாமையில் இருக்கும் போது வெளிச்சத்தில் நிழலைத் தேடிக் கொண்டிருப்பதும், விலகிய பிறகு இருளில் இருந்து கொண்டு வெளிச்சத்தைத் தேடும் மனநிலையே பல பிரச்சனைகளுக்குக் காரணமாகிறது என்றாலும் அதன் வழியே பிரச்சனைகளும் ஓர் முடிவுக்கு வந்து சேர்கிறது.
கடவுள் படைத்த மொழியில் அழகை வர்ணிக்க இருந்த மொத்த வார்த்தைகளையும் கொண்டு “ஒருவளை” பூமியில் படைத்து விட்டார் அந்தப் பிரம்மா, பூமியில் அந்த அழகி தென்காசியில் பிறந்து பெற்றவர்களால் “நயனா” என்று பெயர் சூட்டப்பட்டவள் அறிவானவளாக வளர்ந்து தன் அழகை தானே பார்த்துப் பொறாமை கொள்ளும் பேரழகு பெட்டகமாக வளர்ந்து படிப்பை முடித்து அரசாங்க பள்ளியில் முதுகலை டீச்சராக சிறுவயதிலே தன்னை நிலை நிறுத்திக் கொள்கிறது அந்த அழகு பதுமை.
வீட்டைத் தாண்டினாலே தென்காசி இளைஞர்கள் கூட்டம் “அவளை மொய்க்கத் தொடங்குகிறது” ஆனால் தன் புத்தியில் அழகைப் பற்றி கர்வத்தை ஏற்றிக் கொள்ளாமல் அவர்களிடம் “செருப்பைக்” காட்டுபவள் தான் கோபக்காரி மட்டுமில்லாமல் அறிவிலும் சிறந்தவள் என்பதைக் காட்ட அப்போ அப்போ சுற்றுவட்டாரத்தில் நடக்கும் பட்டி மன்றங்களில் கலந்து கொண்டு தன் புகழை பெருக்கிக் கொள்கிறாள்.
தொழில் விஷயமாகக் கன்னியாக்குமரிக்காரனான அரவிந்தன் எதிர்பாரா விபத்தின் மூலம் “டீச்சர் நயனாவை” சந்திக்கிறான். நயனாவின் அழகில் சொக்கிப்போய் இருக்கும் அந்த ஊர் “ரோமியோக்கள்” புகழ்ந்த புகழ்ச்சியில் அவளின் மீது அதிக ஈடுபாடு கொள்கிறான்.
இருவரும் பேசிக்கொள்ளும்படியான முதல் சந்திப்பிலே “காற்றுகூடப் புகமுடியாத இறுக்கமான அணைப்பு” ரோட்டிலே நடந்தேறுகிறது. அதன் பிறகு நயனாவின் பின்னே சுற்றும் வேலையை முழுமையாகச் செய்கிறான் அரவிந்தன், அவளின் “அறிவுச்சுடரை” அறிந்து கொள்வது மாதிரி சில சம்பவங்கள் நடந்தேறுகிறது.
அரவிந்தனை பிடிக்கவில்லை என்று சொல்லிக்கொண்டே அவனைப் பற்றியே நினைத்துக் கொண்டிருப்பவள் பட்டிமன்றத்தில் பேசிவிட்டு ஊருக்கு திரும்பும் போது “சோ” என்று கொட்டிக் கொண்டு இருக்கும் மழையில் “தொப்பலாக” நனைந்துவிடுகிறாள்.அறிவில் முதன்மையானவளாக இருந்தாலும் போடும் துணியில் தன் அறிவை கோட்டை விட்டுவிடுகிறாள். வெள்ளை உடைக்கு “கருப்புகலர் உள்ளாடை” போட்டுக் கொண்டு வந்தவள் “தொப்பலாக” நனைந்ததால் அங்கே இருக்கும் இளைஞர்களின் கண்ணுக்கு விருந்தாகுவதைப் பார்த்த அரவிந்தன் கோபமாகத் தன் காரில் வலுக்கட்டாயமாக அவளை ஏற்றிக் கொண்டு புறப்படுகிறான்.
நயனா டீச்சர் நனைந்து போய் அருகில் அமர்ந்திருக்க அரவிந்தன் மனம் அவளைச் சீண்ட தூண்டிவிடுகிறது. வெளியில் மழை கொட்டிக் கொண்டிருக்கக் கார் உள்ளே “சூடேறிய மனதுடன்” இருப்பவன் அவளைத் தன் “முத்தத்தால் தீண்டிய” உடனே டீச்சருக்கு காதல் பிறந்துவிடுகிறது.
தாங்கள் வாடகைக்கு இருக்கும் வீட்டை மிகவும் நேசிக்கும் நயனா அது விற்பனைக்குப் போகிறது என்று தெரிந்தவுடன் அதை நிறுத்த போராடி தோற்றுப்போகிறாள். பண்ணையுடன் சேர்ந்த அவ்வீட்டை வாங்கும் மைக்கேல் நயனாவின் “அழகைக் கண்டு” மணந்து கொள்ள விரும்புகிறான். மணந்தால் அந்த வீட்டை அவர்களுக்கே கொடுப்பதுடன் அவளின் அப்பாவிற்கும் அவளின் அத்தை மகனுக்கும் பண்ணையை நிர்வகிக்கும் பொறுப்பை ஒப்படைக்கிறேன் என்று சொன்னதைக் கேட்ட குடும்பம் “தலையாட்டிவிடுகிறது”.
தன் காதலுக்கு வில்லனாக வந்த மைக்கேலை “பார்க்காமலே” வெறுக்கும் நயனா அதை அரவிந்தனிடம் சொல்லப்போக, பல “தொழில் சாம்ராஜ்ஜியத்தை” கட்டியாளும் மைக்கேலுடன் தன்னால் போட்டிப் போட முடியாது அவனையே கட்டிக் கொள்ளும் என்று சொன்னதைக் கேட்டு பொங்கி எழுபவள் அரவிந்தனுடனான காதலை “தலைமுழுகிவிடுகிறாள்” கோபத்தில்...
“பென்ஸ்கார்,ஆடிகார்,பி.எம்.டபிள்யூ” என்று வித விதமான காரில் உலாவரும் அரவிந்தன் தன்னால் மைக்கேலை எதிர்க்க முடியாது என்றதால் கோபத்தில் தன் வகுப்பில் இருக்கும் மாணவி செய்த தவறுக்கு பொறுமையிழந்து அவளை அடித்துவிட அது மாணவியின் தற்கொலை முயற்சி வரை சென்றுவிடுகிறது. அதனால் கைது செய்யப்படுகிறாள் “டீச்சர் நயனா”. மைக்கேல் தலையீட்டால் அப்பெண்ணின் தற்கொலை முயற்சிக்குக் காரணம் ஏமாற்றிய அம்மாணவியின் காதலனே என்ற உண்மை வெளிவருகிறது, நயனா விடுதலை ஆனாலும் குற்றவுணர்ச்சியால் அங்கே வேலைச் செய்யப் பிடிக்காமல் வேலையை வேறு ஊருக்கு மாற்றம் வேண்டி விண்ணப்பிக்கிறாள்.
மைக்கேலும் ,அரவிந்தனும் ஒருவனே என்று தெரிந்த பிறகு சந்தோஷப்படாமல் தன்னை ஏமாற்றிவிட்டானே என்று அவனை வெறுத்து உதாசீனப்படுத்திக் கொண்டேயிருக்கிறாள் நயனா..
“டீச்சர் நயனா” வேலை மாறுதல் கிடைத்து மைக்கேல் அரவிந்தனின் ஊருக்கே போய் சென்று சேர்கிறாள்.. அவனைத் திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்று மறுத்துக் கொண்டே வருபவள் அவனின் மாமன் பெண்ணான ப்ரியாவை அவனுடன் சேர்த்துப் பார்க்கும் போது அவளின் முடிவு ஆட்டம் கொள்கிறது.
ப்ரியா வந்த பிறகு மைக்கேல் அரவிந்தன் தன்னைக் கண்டு கொள்வதே இல்லை என்பதை உணர்ந்த பிறகே அவனை “தான் யாருக்கும் விட்டுக் கொடுக்க முடியாது” என்று தெளிந்தவள் அவனுடன் சண்டைக்குக் கிளம்புகிறாள் ஏன் தன்னை ஒதுக்குகிறான் என்ற விவரம் அறிய....
“அறிவுச்சுடரான டீச்சர் நயனா” தானாகவே முடிவு செய்து கொள்கிறாள் அரவிந்தனுக்கும் ப்ரியாவிற்கும் தான் திருமணம் என்று, ப்ரியா தான் விரும்பியவனை மணம் புரிய போகிறாள் என்று தெரிந்த பிறகே நிம்மதி சுவாசம் எழுகிறது.
நயனாவை அவளின் கூட்டில் இருந்து வெளிவரத் தான் அவளை உதாசீனம் செய்வது போல் “நடித்தானாம்” அரவிந்தன் ப்ரியாவின் பேச்சைக் கேட்டு.
நயனாவின் “குழப்பமான” மனம் “தெளிவான” பிறகு மணவிழா இனிதே நடந்தேறுகிறது.