எளிய மனிதர்கள் மீதான அக்கறையும் நேசமுமே இக்கட்டுரைகளின் மையம். இவர்கள் அன்றாடம் நம் கண்ணில் பட்டு கடந்து போகிறவர்கள், ஆனால் அவர்களின் சுகதுக்கங்களை, நெருக்கடிகளை, வலி வேதனைகளை நாம் அறிந்திருக்கவில்லை, அதை கவனப்படுத்தவே இவற்றை எழுதினேன். பள்ளி கல்லூரியில் கற்றுக் கொண்ட பாடங்களை விடவும் வாழ்க்கையில் எளிய மனிதர்களிடமிருந்து அதிக பாடங்களை கற்றுக் கொண்டிருக்கிறேன், அவையே என்னை வழிநடத்துகின்றன, அந்த வகையில் இக்கட்டுரைகள் நான் கற்றுக் கொண்ட வாழ்க்கை பாடங்களே. எஸ்.ராமகிருஷ்ணன்
S. Ramakrishnan (Tamil: எஸ்.ராமகிருஷ்ணன்; born 1966)
is a noted Tamil author and Tamil film dialogue writer. He was born in Mallankinaru, Virudhunagar district, Tamil Nadu.
Ramakrishnan is noted for his column Thunai Ezhuthu in the magazine Ananda Vikatan. His short stories have been translated in German, French, Kannada, Hindi and Malayalam.
His other works include Kadhaa Vilaasam, Desaandri, and Alainthen Tirindhen.
மற்றுமொரு எஸ்ராவின் 25 கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு. படிக்கத் தொடங்கியதில் இருந்து முழு வீச்சில் கீழே வைக்க முடியாத வகையில் சுவாரஸ்யமான கட்டுரைகள். ஒவ்வொரு கட்டுரையின் முடிவிலும் "ஆதலினால்" என்று ஒரு பொதுநலக் கருத்து வெளிப்படுவதைக் குறிக்கும் விதத்தில் புத்தகத் தலைப்பு அமைந்துள்ளது. எஸ்ரா நம்மையும் ஒரு பயணி போல அவரது பயணங்களில் கூட்டிச் செல்கிறார். ஆனால் பயணத்தின் இன்னல்களைத் தவிர்த்து, இன்பங்களையும் ஆழ்ந்த அவதானிப்புகளையும் மட்டுமே நமக்கு அனுபவிக்கத் தருகிறார். எந்தவொரு விடயத்தையும் நுணுக்கமாக நோக்கி அதை உணர்வுபூர்வமாக அலசி ஆராயும் விதத்தில் கவர்கிறார். எறும்புகளைப் பற்றி, பிரசவம் பார்க்கும் பெண் மருத்துவர்-செவிலியர் பற்றி, உணவகங்களில் சமைப்பவர்கள் பற்றி, இரவெல்லாம் விழித்து காவல் காக்கும் கூர்காக்கள், தமிழ்நாட்டில் இருந்து இமாலயத்தில் கடை நடத்துபவர் மற்றும் அவரது குடும்பம் பற்றி, நெடுஞ்சாலைத் துறையில் வேலை செய்யும் வடநாட்டவர் குறித்து, ரிஷிகேசத்தில் குளிர் நிறைந்த இரவில் உணவிற்காக அலைந்த அனுபவங்கள், முடி திருத்துபவர்கள் வாழ்க்கை பற்றி, காகங்கள்/குருவிகள் பற்றி,மனைவி கிரிக்கெட் விளையாடுவதை ஆதரிக்கும் வாசகக் கணவனையும் அவர்களது கதையைப் பற்றி, புத்தக வாசிப்பு குறைவதைப் பற்றி, உடல் குறைப்பாட்டாளர்கள் பொது இடங்களில் படும் துயரங்கள் பற்றி என பரந்து பட்ட தளத்தில் மனித நேயத்தை முன்னிறுத்தி எழுதப்பட்ட இந்தக் கட்டுரைகள் நிச்சயம் எல்லோராலும் வாசிக்கப்பட வேண்டியவை.
சில குறிப்புகள்: * கடைசியாக எப்போது எறும்பைப் பார்த்தேன் என நினைவில்லை. இந்தியப் பயணத்தின் போது என நினைக்கிறேன். எறும்புகள் இல்லாத உலகில் வாழ்வது வித்தியாசமாக உள்ளது. வீடெல்லாம் உணவுப் பொருட்கள் சிதறிக் கிடந்தும் எறும்புகள் இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது.
நாம் நம் வாழ்க்கையில் கண்டுகொள்ளாத ஆனால் அவசியமான பல விஷயங்களை பொட்டில் அடித்தால் போல் சொல்லிருக்கிறார் எஸ்ரா அவசியம் எல்லோரும் படிக்கச் வேண்டிய புத்தகம்
குங்குமம் வார இதழில் வெளி வந்த 25 கட்டுரைகளின் தொகுப்பு.
நாம் நமது அன்றாட வாழ்வில், சந்திக்கும் மனிதர்கள், கடக்கும் சம்பவங்கள்/அஃறிணைகள்.,
அதேவேளையில், எந்த நிலையிலும், எந்த கோணத்திலும், நமது பார்வையில் பட்டாலும், மனதில் உள்வாங்கப்படாமல் தவற விட்ட தருணங்கள்,
இப்படி பல விஷயங்களை கூர்ந்து கவனித்து, அதனை எண்ணற்ற முறை யோசித்து, அதன் பொருட்டு மென்மேலும் கேள்விகளை எழுப்பி, அதற்குறிய மதிப்பும் மரியாதையும் செய்தோமா, என வாசிப்பவரை சுயபரிசோதனைக்கு உள்ளாக்கும் கட்டுரைகள்.
கட்டுரைகள் ஒவ்வொன்றும் முத்துக்கள்..
பொருள் பொதிந்து எழுதப்பட்டிருப்பதால், ஒருமுறை படித்த பின், அதன் படிதான் நாம் இருக்கிறோமா? என சீர்தூக்கிப்பார்க்க, மீண்டும் ஒருமுறை படிக்க தூண்டும்படி உள்ளது.
அதில் சில கட்டுரைகள், பின்வரும் இவைகள்/இவர்களை பற்றி:
எறும்பு மகப்பேறு மருத்துவர் உணவு சமைப்பவர் கூர்க்கா கல் கடவுள் ஆசிரியர் பொதுநல வக்கீல் முடிதிருத்துபவர் உடல் ஊனமுற்றவர் கல்லறை, நினைவில் வாழ்பவர் கார்ட்டூன் மனிதர்கள் நடிகச் சிறுமி அழியும் நூலகம் மரங்களை தேடி பராமரிப்பவர் பறவைகளை கவனிப்பவர்
இப்படி மேலும் சில கட்டுரைகளை கொண்டுள்ளது.
புத்தகத்தின் பெயருக்கேற்ப ஒவ்வொரு கட்டுரையின் முடிவின் கடைசி பத்தியில், "ஆதலினால்" எனத் தொடங்கி, கட்டுரையில் சொல்லப்பட்ட விஷயத்தில், தனது நிலைப்பாட்டை நமக்கு தெரிவிக்கிறார், #எஸ்_ராமகிருஷ்ணன்.
நாம் விரும்பும் எழுத்தாளர்களில் ஒருவராக இவர் இருக்க காரணம், அவரின் ஆழ்ந்த, ஆனால் மெல்லிய எழுத்துக் கோர்வை.
ஒரு மென் சிறகால் வருடி அல்லது அந்த மென் சிறகாகவே நம்மை இலகுவாக உணரச் செய்து, சுயபரிசோதனைக்கு உட்படுத்தும், மந்திர எழுத்தை படைக்கும் ஒரு தேசாந்திரி, #எஸ்_ராமகிருஷ்ணன்.
அதனை இந்த புத்தகத்தின் மூலமும் நாம் உணர்கிறோம். இந்நூலை படிப்பதற்கு நமது வலுவான பரிந்துரைகள். _/\_
சில எழுத்தாளர்களின் எழுத்துக்கள் மட்டுமே இதயம் வரை போய்ச் சேரக் கூடியன. அங்கிருந்து நகர மறுப்பன. எனக்காகவே இவர் எழுதுகிறார் எனத் தோன்ற வைப்பன. அப்படி ஒரு எழுத்து தான் எஸ்.ரா-வுடையது. அவரது எழுத்துக்கள் நான் கேட்க நினைக்கும் எழுத்துக்கள், நான் பேச நினைக்கும் எழுத்துக்கள், நான் எழுத நினைக்கும் எழுத்துக்கள். (நான் எழுதி வெளியிட காத்திருக்கும் முதல் புத்தகம் கூட ஒருவேளை அவருக்குப் பிடிக்கலாம்.)
முதல் கட்டுரையிலேயே ஆசிரியர் சொல்லியிருப்பார், யானைகளைப் பார்த்து ஆச்சரியப்படுவதற்கு எவ்வளவு காரணங்கள் உள்ளனவோ அதேபோல எறும்புகளைப் பார்த்து ஆச்சரியப்படுவதற்கும் அவ்வளவு காரணங்கள் உள்ளன என்று. நம்மைச் சுற்றி இருக்கும் சாதாரண மனிதர்களை நம்முடைய அன்றாட வாழ்வின் ஓட்டத்தின் காரணமாய் மறந்து போகிறோம். அவர்களைப் பற்றிச் சிந்திக்க நம் கடிகாரத்தில் இடம் இருப்பதில்லை. அவர்களைப் பற்றிய பதிவுதான் ஆதலினால் என்ற இக்கட்டுரைத் தொகுப்பு.
1) கொஞ்சம் கண்ணீர்த் துளிகள் 2) எங்கள் வீதியில் உலா வந்த பழைய கூர்க்காவின் ஞாபகம் 3) சுற்றியிருக்கும் பொருட்கள் என் கைக்கு வந்து சேர யார் யார் உழைத்திருப்பார்கள் என எழுந்த கேள்விகள் – இவையே இப்புத்தகத்திற்கு நான் அளித்த அன்பளிப்பு. இப்புத்தகத்தின் ஒவ்வொரு கட்டுரையும் ஒருவிதமான ஏக்கத்தை மறக்காமல் ஏற்படுத்திச் செல்லும். இப்புத்தகத்தை வாசிக்கும் போதும், வாசித்த பின்பும் உங்களுக்குள் உங்களை அறியாமலேயே தேடல்கள் தொடங்கியிருக்கும்.
தள்ளுவண்டி மூலம் பூந்தொட்டி விற்கும் நபர், இன்னமும் கண்ணாடி வளையல்கள் விற்கும் பாட்டி, தலையில் கூடையைச் சுமந்தபடி தெருத் தெருவாய் சமோசா விற்கும் அண்ணா, நீங்கள் படுத்திருக்கும் பாயை விற்றுப் போயிருந்த காலில் செருப்பு கூட போடாத அக்கா – இவர்கள் எல்லோரும் உங்கள் ஞாபகத்திற்கு வருவார்கள். கூர்க்காவும் தான். இது தான் இப்புத்தகத்தின் வெற்றியும் கூட.
எளிதாக கடந்து விடுகிற மனிதர்களின் வாழ்வின் உணர்ச்சிகளை தெரிவிக்கும் புத்தகம். ஒவ்வொரு கட்டுரையும் வாசித்து விட்டு எளிதில் அதை கடந்து செல்லுதல் அரிதான செயல். அந்த அளவிற்கு தாக்கம் நிறைந்த வார்த்தைகள். அனைவரும் நிச்சயம் வாசிக்க வேண்டிய புத்தகம்.