ஒரு சிறு இசை - வண்ணதாசன்
இசையில் சிறிதென்ன, பெரிதென்ன? இசை அவ்வளவு தான்.
ஒரு சிறு இசை போதும் பெரும் அறையின் நிசப்தத்தைக் கலைக்க, சிறு இசை போதும் மெல்லத் ததும்பிக் கடக்கும் இளந்தென்றலை ரசிக்க, சிறு இசை போதும் அசைய மறுக்கும் மனதை லேசாக அசைக்க, ஒரு முணுமுணுப்பைத் துவக்க, ஒரு சிறு இசை போதும் ஆழ்மனதில் புதைந்து கிடக்கும் நினைவுகளை அள்ளி எடுக்க.
அப்படி மனதின் ஆழத்தில் சிறு இசையாக எப்போதும், எந்த ஆரவாரமும் இல்லாமல் ஒளிந்து கிடைக்கும் மனிதர்களும், உணர்வுகளும், நினைவுகளும், சொல்லப்படாத கதைகளும், திறக்கப்படாத ரகசியங்களும், அன்றாட வாழ்வில் இயல்பாய் கடக்கும் தருணங்களும், மரங்களும், செடிகளும், பறவைகளும் - கதையாய், கவிதையாய் வடித்த 15 சிறுகதைகளின் தொகுப்பு தான் ஒரு சிறு இசை.
ஒரு சிறிய இசையாக மட்டுமே தொடங்கி, அன்றாட நிகழ்வுகளாக விரிந்து, ரசித்து, கதாபாத்திரங்களின் அகத்திற்குள் பயணித்து மெல்ல மெல்ல ஒரு மலர் மலர்வதைப் போல ரகசியங்கள் மலர்ந்து கதையின் இறுதியில் வேறொன்றாகக் கனிந்து, நினைவுகளின் வழியாக வேறொன்றை எக்கிப் பிடிக்கிறது ஒவ்வொரு கதைகளும்.
இத்தனை கவித்துவமாய் ஒரு கதையை நகர்த்தி, முடிவில் ஒரு சிறு வரிக்குள் அத்தனை ஆழத்தைக் கடத்தி, அதே கதையை வேறொன்றாய் நிகழ்த்திக் காட்டுவது வண்ணதாசனுக்கு மட்டுமே சாத்தியம் போலும்.
கனியான பின்னும் நுனியில் பூவைப் பார்க்கிற, உடைந்த கண்ணாடி துண்டில் வெயிலின் வாசத்தை நுகர வைக்கிற, வெயிலுக்கு மினுக்கும் இலையின் பளபளப்பை ரசிக்க வைக்கிற, எங்கோ சுவரின் ஓரத்தில் தொங்கும் நூலாம்படையின் நிழலில் அரூப சித்திரங்களை வரைந்து பார்க்க வைக்கிற அதே சமயத்தில் மனிதர்களின் கைப்பிடித்தும், தோல் சாய்ந்தும் அவர்களின் அகத்திற்குள்ளும், உணர்வுகளுக்கும் சேர்த்தே பயணப்பட வைக்கிறது வண்ணதாசனின் எழுத்து.
எல்லா கதைகளும் எப்போதோ ஒரு சிறு இசையாக மீட்டப்பட்டு இன்னமும் ஆழத்தில் அடங்காத ஒரு ஒலியாக ஏதோ ஒரு ரகசியத்தை சுமந்துகொண்டே இருக்கு, அந்த ரகசியங்கள் மெல்ல உடைபடும் தருணமும், அப்படி உடைபட்ட தருணத்தைக் கூட அத்தனை எளிதாய் கடக்கும் மனிதர்களும் என ரசிக்க வைக்கிறது ஒவ்வொரு கதைகளும்.
ஒரு சில கதைகளை வாசிக்கும் போது -வண்ணதாசனின் கதைகளில் காற்று கூட அத்தனை பலமாக வீசுவதில்லை என்று எழுத்தாளர் இமயம் ஒரு முறை சொல்லிக் கேட்ட அந்த வார்த்தைகள் எவ்வளவு சரியானதென்று யோசிக்க வைக்கிறது.
காற்று மட்டுமா, அவரின் கதைகளில் வரும் மனிதர்களும் கூட அத்தனை இலகுவாகவும், அன்பாகவும்.
சின்ன மகனுக்குக் குழந்தை குட்டி இல்லைனு சொல்ல வருத்தப்பட்டுட்டு, எழுவது வயசாகிடுச்சு இனிமே நம்மலே குழந்தை மாதிரி தானப்பானு சொல்லற அப்பா, ஒரு முறை குனிந்து நிமிர்வதுக்குள் சோமு சார் கண்களில் முத்தம் வைக்கிற ஜான்சி, நீ என்னோட நிலைக்கண்ணாடி மாதிரி மாப்பிள்ளைன்னு சொல்ற பூரண லிங்கம் மாமா, கனியான பின்னும் நுனியில் பூவை பார்க்கிற தினகரியின் அப்பா, பல நாள் கழித்து சுப்புவை பார்த்ததும் அவளை தன் பக்கம் இழுத்து அவ தோலில் முகத்தை வைத்து குனிந்து நின்னுக்கிற சுந்தரி, கைலாசம் காலில் வீக்கம் இருக்கதை பார்த்துட்டு சட்டுன்னு குனிந்து தொட்டுப் பார்க்கிற பிரமு, அவனையும், அவளையும் ஒரு போட்டோ எடுத்து கல்பனா ஸ்டுடியோல வைக்கணும்னு நினைக்கிற கைலாசம், எல்லாரோட கையையும் இருக்கமா பிடிச்சுக்கிற மூக்கம்மா ஆச்சி இப்படி இன்னும் எத்தனையோ தருணங்களும், மனிதர்களும் இயல்பாய��, இலகுவாய், அன்பாய், நேசமாய்.
தொகுப்பில் இருக்கிற எந்த கதையிலும் கவித்துவத்துக்குப் பஞ்சமே இல்லை, இருந்தாலும் தொகுப்பிலேயே எனக்கு மிகவும் பிடித்த கதை கனியான பின்னும் நுனியில் பூ.
படித்து முடித்ததும் ஒரு கவிதையே தனக்கென ஒரு உரையை எழுதிக்கிட்டு தவறி இந்த தொகுப்பில் விழுந்துருச்சோ அப்படின்னு யோசிக்க வச்ச ஒரு கவிதை - ஆமாம் நிச்சயம் அது கதை இல்ல கவிதை தான்.
ஒரு சிறு இசையாய் வர மூக்கம்மா ஆச்சியின் கதையை வாசித்து முடித்ததும் எனக்கென்னமோ அது கர்ணன் படத்துல வர மஞ்சணத்தி புருசா காட்சியை ஞாபகப்படுத்திட்டுப் போச்சு. காட்சியும், மனிதர்களும் தான் வேரையே தவிர இரண்டும் கடத்துற உணர்வு என்னமோ ஒன்னு தான்.
இப்படி இன்னும் திறக்கவே படாமல் எத்தனை மூக்கம்மா ஆச்சிகளின் அன்பும், காதாலும், ரகசியங்களும் - தாழம்பூ வாசனையோடு இன்னும் விடாமல் ஒரு சிறு இசையைத் தொடர்ந்து மீட்டிட்டே இருக்கும்ன்னு யோசிக்க வச்ச சிறுகதை.
அப்படித் திறக்கவே படாத அந்த பெட்டிகளுக்குள் கிடக்கும் மூக்கம்மா ஆச்சிகளின் சிரிப்பும், தங்கப் பொத்தான்களும் அப்படி எத்தனை காலத்திற்கு தான் தங்களுக்குள் ஒரு சிறு ரகசியத்தை பேசிச் சிரித்துக் கொண்டு இருக்குமோ தெரியல.
மொத்தமா இப்படித் தொடுதலும், அன்பும்,பிரிவும், நினைவுகளும், ரகசியமும், நேசமுமாய் ஒரு சிறு இசையாக தொடங்கி பெரும் இசையாக மாறி இன்னும் மனதின் ஆழத்தில் ஒலிச்சுட்டே இருக்க ஒரு தொகுப்பு.
இறுதியா - அவர் கொய்யாப் பழம் வாங்க வந்திருக்காரு. நாம மாதுளை வாங்க வந்திருக்கிறோம். அவ்வளவு தான் மா.
நிச்சயம் அவ்வளவு தான் வாழ்க்கை, அவ்வளவே தான் வாழ்க்கை.