சகமனிதர்களை நேசிக்க எல்லையில்லை என்று சொல்பவர்கள் கூட அவனை சொந்தமாக்கிக் கொள்ள ஜாதியின் பின்னே தான் ஒளிந்துக் கொள்கின்றனர்.
தான் செய்த தவறுதலால் பெற்றவர்களை இழந்து போன அறிவை தன் வீட்டிலே வளர்த்து வருகிறார் கவுண்டர்,கீழ்ஜாதி பையன் என்று மற்றவர்கள் சொல்வதைப் பொருட்படுத்தாமல் அறிவை தன் மகளுக்குத் தோழனாக்குகிறார்.
பிறந்த முதலே அறிவின் அன்பில் வளர்ந்து வரும் கலைச்செல்வி பருவ வயத்தைத் தொட்டபிறகு அவனுடனே இருக்க விரும்புவதைக் கவுண்டர் அறிந்து கொண்டாலும் அறிவின் ஜாதி அதற்குத் தடையாக வந்து தன் சொந்தத்திலே இருக்கும் மூர்த்திக்கு மகளைக் கட்டிவைத்துவிடுகிறார்.
கலைச்செல்வியின் மீது பாசத்தை வைத்திருக்கும் அறிவு அதை அப்படியே உள்ளுக்குள் விழுங்கிப் போகிறான்.
திருமணத்திற்குப் பிறகு அறிவிடம் அன்பை காட்டும் கலைச்செல்வியின் மீது கோபம் கொண்ட மூர்த்தி வெளியிடும் தகாதவார்த்தை அவனை விட்டு அவளை விலகச் செய்துவிடுகிறது.
தான் பேசிய வார்த்தையின் பொருளில் இருக்கும் தவறை உணர்ந்த மூர்த்தியின் மன்னிப்பை ஏற்க தயாராக இல்லாத கலைச்செல்வியிடம் அவனுக்காகத் தூது போகிறான் அறிவு.