இவரின் அறிமுகம் எனக்கு இந்த புத்தகத்தில் தான் கிடைத்தது. புத்தகத்தின் தொடக்கத்தில் இவர் எழுதியிருக்கும் "என்னுரை" வாசித்த போதே இவரின் எழுத்துக்கள் வெளிப்படையாக இருக்கும் என்று தோன்றியது.
இந்த புத்தகம் சிறுகதைகளின் தொகுப்பு. பெரும்பாலும் சிறுகதைகள் அனைத்திலும் காம உணர்வுகள் மேலோங்கி நிற்கின்றன. காமத்தை அணுகும் போது, அதனை வெறும் விவரணைகள் என்று மட்டுமில்லாமல் அருவெறுப்பாக இல்லாமல், நுணுக்கமான விசயங்களை காட்டிவிட முடிவது சற்று சிரமமான காரியமாக என்று தோன்றுகிறது.
யாக்கை என்பதன் பொருள் என்னவென்று தேடும் பொழுது, அது உடம்பை குறிக்கும் சொல் என்று தெரிந்து கொண்டேன். பல கதைகள் காமத்தை தழுவி, உடல் சார்ந்து எழுத்துக்கள் மிக வெளிப்படையாக, அப்பட்டமாக இருப்பதனால், எல்லாரும் முகம் சுளிக்காமல் வாசிக்க முடியும் என்று தெரியவில்லை.
ஒவ்வொரு கதையும், வித்தியாசமாக தனித்து நிற்கிறது. உடலின் வெட்கைகள், ஆழ்ந்த காம உணர்வுகள், இவையெல்லாம் இதுவரை நான் வாசித்திராத ஒரு புதிய கோணத்தில் வியக்கும் படியாக நிறைய இடங்களில் மனதில் தங்கியது.
மொத்தத்தில் ஒரு வித்தியாசமான அனுபவமாக தான் இருந்தது.