தமிழ்நாட்டை பொறுத்தவரை பொதுவாகவே சினிமா நடிகர்கள் அரசியல் பிரவேசம் புகுவது வழக்கமாக நடக்கும் நிகழ்வு தான். எம்ஜிஆர், 'சிவாஜி' கணேசன் தொடங்கி சரத்குமார், கருணாஸ் வரை சினிமா பிம்பத்தை வைத்து அரசியலுக்கு வந்தவர்கள் ஏராளம். ஆனால் முன்பிருந்ததை போல் இப்போது அவர்களின் பிம்பம் மக்களிடையே பெரிய அளவில் எடுபடுவதில்லை, அதற்கு முக்கிய காரணம் அரசியல் மற்றும் சினிமாக்களுக்கு இடையே இருக்கும் விரிசல் அதிகரித்து கொண்டே இருப்பது தான். மேலும் முன்பிருந்ததை போல் பொழுதுபோக்கு என்பது குறுகலாக இல்லை, இப்போது பொழுதுபோக்குக்கு பல வகைகளில் வர தொடங்கிவிட்டன, சினிமா அதில் ஒரு அங்கம்.
சினிமா நடிகர் என்ற பிம்பத்தை வைத்து அரசியலில் பெரியளவிலான தாக்கத்தை ஏற்படுத்தியவர்களுள் முக்கியமானவர் எம்ஜிஆர் தான். அந்த பிம்பம் எப்படி கட்டமைக்கப்பட்டது? அது எளிய மக்களில் தொடங்கி பல எலைட் மக்களின் வரவேற்பை பெற்றது எப்படி? சினிமாவிலும் நிஜத்திலும் அவர் ஒரே நபரா? அந்த பிம்பம் உருவாக காரணியாக இருந்த விசயங்கள் எவை? அவரின் சினிமா பிம்பம் தமிழ் கலாச்சார சூழலோடு எப்படி ஒன்றி போனது அதற்கு அவர் மேற்கொண்ட மெனக்கெடல்கள் என்னென்ன போன்றவை பற்றி எல்லாம் விரிவாக பேசுகிறது, ஆய்வறிஞர் MSS. Pandian அவர்கள் எழுதிய “Image Trap”.
எம்ஜிஆரின் 11 ஆண்டு ஆட்சி காலம் என்பது தமிழகத்தின் இருண்டகாலம் , அது எளிய மக்களின் வாக்குகளை பெற்று பணக்கார வர்க்கத்துக்கும் பெருமுதலாளிகளுக்கும் தொண்டாற்றியது என்று தான் இந்த புத்தகத்தை தொடங்குகிறார் நூல் ஆசிரியர்.
உண்மையிலேயே எம்ஜிஆர் அவ்வளவு நல்லவரா? மூடப்பட்ட மதுக்கடைகளை திறந்தவர், பணக்காரர்கள் மீதான நேரடி வரி குறைக்கப்பட்டு, ஏழைகள் மற்றும் நடுத்தர வர்க்க மக்கள் பாதிக்கும் வகையில் அத்தியாவசிய பொருட்கள் மீதான மறைமுக வரியை உயர்த்தியவர், மேலும் 1981ல் CPI(ML) கட்சியை சேர்ந்த 15 நிராயுதபாணிகளை சுட்டு கொன்றவர்(அதில் 11 பேர் பட்டியல் வகுப்பை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.), அவர் ஆட்சி காலத்தில் தான் மாதம் 50 பேராவது குண்டர் சட்டத்தின் கீழ் தனிமனித காழ்ப்பின் காரணமாக தடுப்பு காவலில் வைக்கப்பட்டார்கள். சாராய ஆலைகளுக்கு கலால் வரி(Excise duty) விலக்கு அளிக்கப்பட்டது. திராவிட இயக்க கொள்கைகளான பகுத்தறிவு, மாநில சுயாட்சி, சுயமரியாதை போன்றவை எல்லாம் காற்றில் வீசப்பட்டு வெறும் ரசிக மனநிலை(Hero Worship) தொண்டர்களிடையே தலைதூக்கியது.
பிரிட்டிஷ் ஆட்சி காலத்திலிருந்தே தமிழர்களின் சினிமா மோகம் அதிகம் தான், சுதந்திர இந்தியாவில் அதிக திரையரங்குகளை கொண்ட மாநிலங்களில் ஆந்திராவுக்கு அடுத்த இடத்தில் தமிழ்நாடு தான் இருந்தது, மேலும் இங்கு நடந்த திராவிட இயக்க நடவடிக்கைகளால் திரை அரங்குகள் எல்லாம் அனைத்தும் மக்களும், சாதி-மத வேறுபாடின்றி தங்களின் வாங்கும் சக்திக்கேற்ப அமர்ந்து ரசிக்கும் வகையில் தான் இருந்தது. இங்கு நிறைய திரைஅரங்கங்கள் இருந்த காரணத்தால் டிக்கெட் விளையும் மலிவாக கிடைத்தது, அனைத்து தரப்பு மக்களாலும் அணுகும் வகையில் தான் சினிமா அமைந்தது. திராவிட இயக்கம் இதனை பயன்படுத்தி கொண்டு கொள்கை பிரச்சாரங்களை சினிமா, நாடகம், இலக்கியம் என அனைத்து தளங்களிலும் மேற்கொண்டது.
தொடக்கத்தில் காங்கிரஸ் காரரான எம்ஜிஆர் 1953 இல் தான் திமுகவில் இணைகிறார், அவரின் திரைப்படங்கள் எல்லாம் கொள்கை பிரச்சார ஊடகமாக பயன்பட்டது. மக்களும் அதை வரவேற்றார்கள், இயக்கம் வளர்ந்தது - நடிகர்களும் வளர்ந்தார்கள்.
இந்த பிம்ப கட்டமைப்பில் ஏற்கனவே தமிழ் பண்பாட்டில் ஊறி போன சில பொது புத்தி(Common-sense) பழக்கவழக்கங்கள் பயன்படுத்தப்பட்டது,
1 . நீதிமானாக இருப்பது
2 . கல்வியை முதன்மையாக கருதுவது
3 . பெண்களை மதிப்பது போன்றவை எல்லாம் எளியமக்களிடையே(Subaltern) நல்ல வரவேற்பை பெற்றது, மேலும் அவரின் திரைப்படங்களில் வரும் எம்ஜிஆர் கதாபாத்திரம் தன்னை பெரும்பாலும் எளியவனாகவும், இந்த மூன்று பண்புகளை கொண்டவனாகவும், எளிய உடையிலும் காட்சி அளிப்பதால் மக்கள் எல்லாம் தங்களுக்குள் ஒருவனாக தான் எம்ஜிஆரை பார்த்தார்கள். பாடல்கள், வசனங்கள், சண்டை காட்சிகள் எல்லாம் எம்ஜிஆரின் தணிக்கைக்கு பிறகு தான் காட்சியாக வைக்கப்பட்டன.
எளிய மக்களிடையே இருந்த நாட்டுப்புற பாடல் மற்றும் கதையாடல்களில் வரும் கதாபாத்திரங்களின் பெயர்களையும் அந்த கதாபாத்திரங்களின் பண்பான மானம்/வீரம்/அன்பு/தியாகம் போன்றவை பல திரைப்படங்களில் காட்சியாக வைக்கப்பட்டன.
பெண்கள் மத்தியில் வரவேற்பை பெற இவர் பயன்படுத்திய யுக்தி, கதையில் ஒன்றுக்கும் மேற்பட்ட நடிகைகள் இருப்பர், அவர்கள் எம்ஜிஆரை நினைத்து உருகி பாடல்கள் பாடுவார்கள், அனைத்து பெண்களையும் தாயாகவும், தங்கையாகவும் பாவித்து எடுக்கப்படும் காட்சிகளும் இருக்கும். மாடர்னாக உடை அணிந்திருந்தால் அவர்களை சேலை கட்ட சொல்வதும், கர்வம்மிக்க கதாபாத்திரங்களுக்கு பாடம் புகட்டி திருந்தி வாழ சொல்வதுமான காட்சிகள் எல்லாம் பெரும்பான்மை மக்களிடம் வரவேற்பை பெற்றது. Boomer uncleகளுக்கு தலைவனாக புரட்சி நடிகர் இருந்துள்ளார்.
இவர் பேசும் பெண் விடுதலை எல்லாம் பெரும்பாலும் ஆணாதிக்கத்திற்கு உட்பட்ட பழமைவாத தன்மை கொண்டதாக தான் இருக்கும். ஆண்கள் மற்றும் பெண்கள் அனைத்து தரப்பினர் இடையேயும் நல்ல வரவேற்பை பெற்றது இவரின் திரைப்படங்கள்.
இவரின் திரை பிம்பம் தான் உண்மையானது என ரசிகர்கள் நம்ப தொடங்கினார்கள், 1972 இல் திமுகவில் இருந்து விலகிய எம்ஜிஆர், தனது கட்சி அமைப்பை வலுப்படுத்த ரசிகர் மன்றங்களை பயன்படுத்தி கொண்டார். கொள்கை என்ன என்று கேட்டால் "அண்ணாயிசம்" என்று மழுப்பினார். மேலும் கட்சி தொண்டர்களை எல்லாம் கையில் பச்சை குத்த சொன்னார். ஹிட்லர் சொல்வதை எல்லாம் கேட்ட நாஜிகள் போல் இவர் சொல்வதை எல்லாம் கேட்க ஒரு கூட்டம் இருக்க தான் செய்தது. மேலும் அந்த சமயத்தில் நிலவிய பொருளாதார நெருக்கடியும், வேலைவாய்ப்பின்மையும் மக்களிடையே தங்களை காக்க ஒரு தேவ தூதன் வர மாட்டானா என்கிற ஏக்கம் என எல்லாம் சேர்த்து ஒரு நடிகரை முதல்வராகியது.
மதுக்கடைகளை திறக்கமாட்டேன் என தாய் மீது ஆணையிட்டு ஆட்சிக்கு வந்த எம்ஜிஆர் , மதுக்கடைகளை திறந்ததும் அவரின் தொண்டர்கள் எல்லாம் "அவர் செய்தல் சரியாக தான் இருக்கும்" என்னும் நிலைக்கு மாறிபோனார்கள். ஊழல் கீழ்மட்டத்தில் தலைவிரித்து ஆடியது, ஆனால் மக்கள் எம்ஜிஆர் வந்து காப்பாத்துவார் என்று தங்களை தாங்களே சமாதான படுத்தி கொண்டார்கள். இப்படி அவரின் சினிமா பிம்பம் அவரை மூன்று முறை வெற்றி பெற வைத்து முதலமைச்சர் ஆக்கியது.
அவரின் ரசிகர்களை பற்றி படிக்கும் போதெல்லாம் பாவமாக தான் இருக்கும், அவர் MR. ராதாவால் சுடப்பட்ட போது தீக்குளித்தவர்களும், கோவில் கட்டியவர்களும், தற்கொலை செய்து கொண்டவர்களும் ஏராளம். மேலும் 1980களில் அவர் மருத்துவமனையில் அனுமதித்திருந்த போது , தமிழகத்தில் கோவில்களின் எணிக்கை அதிகமானது, மூன்று முறை பிறந்து எமனை ஏமாற்றியவர் என்று அவரை ஒரு கடவுளாகவே பாவித்தார்கள். இதற்கு பண்பாட்டு ரீதியான காரணங்களும் இருக்கதான் செய்கிறது பொதுவாகவே தமிழ் மக்கள் சிறுதெய்வ வழிப்பாட்டில் ஆர்வம் கொண்டவர்கள் தங்க���ின் முன்னோர்களை சிலையாக்கி வழிபாடும் வழக்கம் இருந்து வந்தது, எம்ஜிஆர் அதை பயன்படுத்திக்கொண்டார் அல்லது தமிழ் சமூகம் அப்படி செய்து ஏமாந்து போனது.
அவரின் இறப்பை எல்லாம் தங்கள் வீட்டில் ஒருவரின் இழப்பாக நினைத்தார்கள், மறைவை அடுத்து வந்த படங்கள் எல்லாம் அவர் கடவுள் வடிவில் நம்முடன் தான் இருக்கிறார் என்கிற அளவிற்கு மிகப்படுத்தப்பட்டு எடுக்கப்பட்டது, இன்றும் அந்த எம்ஜிஆர் factor தேர்தல்களில் ஆதிக்கம் செலுத்தி தான் வருகிறது. ஒரு சர்க்கஸ் கம்பெனியின் நிறுவனர் கடவுளானார் அதை பார்த்து ரசித்த மக்கள் எல்லாம் கோமாளி ஆனார்கள் என்று தான் அவரின் 11 ஆண்டு கால ஆட்சியை வரலாறு பதிவு செய்யும்.
அவரின் தனிப்பட்ட வாழ்க்கையை பற்றி பேசினால் கொடூரங்களுக்கும், ஆபாசங்களையும் தவிர எதுவும் மிஞ்சாது. அவரின் சுயசரிதைகள் எல்லாம் விலைபோன எழுத்தாளர்களால் எழுதப்பட்டது.
சினிமாவும்- அரசியலும் பிரிக்கமுடியாத துருவங்களாக தான் தமிழ்நாடு அரசியலில் இருந்து வந்தது, இப்போது நிலை மாறி இருந்தாலும் அதனால் நாம் இழந்தவை ஏராளம். முற்போக்கு சமுதாயம் என்று தம்பட்டம் அடித்துக்கொண்டாலும் நம்மை அறியாமலே ஏமாந்து போய்விடுகிறோம்.
ஜெயலலிதா செய்ததை விட எம்ஜிஆர் செய்தது தான் மிக பெரிய ஊழல், இவர் செய்தது கருத்தியல் ஊழல்(Ideological Corruption), மக்களின் மூளையை மழுங்கடித்து ஜாம்பிகள்(Zombies) போல் மக்களை அலையவிட்டது. மிகைப்படுத்தாமல் கூறவேண்டும் என்றால் மக்கள் தலையில் 11 வருடம் மிளகாய் அரைத்து 3 முறை சொகுசு வாழ்க்கையை அனுபவித்த பெருமை வாத்தியரையே சேரும்.
ஆய்வு சூழலில் திரு. MSS Pandian அவர்களது பங்கு அளப்பரியது அவர் விட்டு சென்ற பணியை நாம் தொடர்ந்து செய்வோம்.
வாய்ப்புள்ள நண்பர்கள் இந்த புத்தகத்தை அவசியம் வாசித்து அறிவு தெளிவு பெறவும், இன்னும் பல எம்ஜிஆர்கள் வரிசையில் காத்து கொண்டிருக்கிறார்கள்.
ஜாக்கிரதை!