சில நேரங்களில் கண் கட்டு வித்தைகள் என்று கூறக் கேட்டிருப்போம். ஆனால் அவை அப்படிதான் என்பதற்கான ஆதாரங்கள் இல்லாமல் போகக்கூடிய சூழ்நிலைகள் உருவாகும் பொழுது, ஒன்று அவை பொய்கள் என்று புறக்கணிப்போம் அல்லது உண்மையாக இருக்கலாம் என்ற நிலைப்பாட்டை எடுத்து கடந்து செல்வோம். இப்படியான ஒரு நிலைப்பாட்டின் உருவமே இந்த உலகினை ஆட்டிப் படைப்பதாய் சொல்லப்படுகின்ற, இந்த உலகத்தினை நோட்டமிட்டு எப்போதும் அவர்கள் விரும்புகிறபடி இவ்வுலகத்தை ஆட்டுவிக்கும் 13 குடும்பத்தினரை உள்ளடக்கிய ஓர் அமைப்புதான் இல்லுமினாட்டி என்கிற அமைப்பு.
இந்த புத்தகம் இல்லுமினாட்டி என்ற அமைப்பின் நோக்கம் என்ன என்பதையும், அதன் தோற்ற வரலாறையும், அதில் அங்கத்தினராய் இருக்கின்ற குடும்ப உறுப்பினர்களையும் ஓர் எளிய அறிமுகமாக நமக்கு கடத்தும் நூல் என்று வைத்துக் கொள்ளலாம். இந்த இல்லுமினாட்டி பற்றியும் அதன் செயல்பாடுகள் பற்றியும் சில வருடங்களுக்கு முன்னர் ஒரு காணொளி பார்த்திருக்கிறேன். அதற்கு மேல் அதில் பெரிய அளவில் ஈடுபாடில்லை. இந்த புத்தகம் கண்ணில் பட்டவுடன் சரி வாங்கி படிக்கலாம், என்னதான் செய்கிறார்கள் இந்த இல்லுமினாடிகள் என்பதை தெரிந்து கொள்ள படிக்க ஆரம்பித்தேன். லூசிபெரியனிசம் என்ற கொள்கை கொண்ட இவர்கள், அறிவை தான் மிகப்பெரும் ஆயுதமெனவும், கடவுளெனவும்(சாத்தன் என்பதே பொருத்தம் என்கிற வகையில் ஆசிரியர் விளக்கியுள்ளார்) நம்பும் குழு.
ஜெர்மனியின் பவேரியாவில் தொடங்கி இன்று உலகம் முழுக்க ஆக்கிரமித்து இருப்பதாக சொல்லப்படும் இந்த இல்லுமினாட்டிகள் யார்? இவர்களின் நோக்கம் என்ன? ஏன் சட்டென்று நம் கவனத்தை எளிதில் திசை திருப்பும் செயல்கள் நடக்கின்றன. அப்படி ஒன்று நிகழும் பொழுதினில் மனிதர்கள் நாம் எப்படிப்பட்ட நிகழ்வுகளில் தொலைந்து போகிறோம்? விளம்பரங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், போர்கள், வங்கிகள் என்று அனைத்தையும் தன் கைப்பிடிக்குள் வைத்திருக்கும் இல்லுமினாட்டிகள் யார் ஏன் இப்படி செய்கிறார்கள்? குறிப்பாக இரண்டாம் உலகப்போருக்கு பிறகான இவர்களின் ஆயுதம் எதுவாக மாறியது?
யார் பணப்புழக்கத்தை கட்டுப்படுத்துகின்றனர்? யார் தொலைக்காட்சியைக் கட்டுப்படுத்துகின்றனர்? நாம் எடுக்கும் முடிவுகள் நாமாகவே எடுக்கிறோமா அல்லது ஒரு மாய காட்சி நம் முன்னால் எப்போதும் பின்னப்படுகிறதா? அமெரிக்கா தான் இதை செய்கிறது என்று, இன்று வரை நினைத்திருந்த அனைத்து நினைவுகளையும் தூளாக்கி பதை பதைக்க செய்கிற புத்தகம். இல்லுமினாட்டிகளின் உலகம் என்ன, அவர்கள் ஏன் உருவானார்கள்? எண்ணிப் பார்க்க முடியாத பணத்திற்கும், செல்வத்திற்கும், அதிகாரத்திற்கும் நிழல் உலகின் சொந்தக்காரர்கள் இவர்கள்.
உண்மையில் இந்த புத்தகம் இந்த உலகத்தினை பார்க்கும் விதத்தை மற்றும் வகையில்தான் அமைந்திருந்தது. இவர்களைப் பற்றி பல ஆண்டுகளைக் கடந்தும் ஆராய்ச்சிகள் நிகழ்ந்து கொண்டிருக்கிறன. ஆனால் உண்மைகள், பொய்கள் என்று பிரித்தறிய முடியாதபடிக்கு கொட்டி கிடக்கின்றன இவர்களைப் பற்றிய செய்திகள். ராட்சீல்டு குடும்பம் தொடங்கி ராக்பெல்லர் குடும்பம் என்று மொத்தம் 13 குடும்பங்கள்தான் இந்த உலகத்தின் ஒவ்வொரு அசைவுகளையும் நிகழ்த்திக் காட்டுவதாய் சொல்லப்படுகிறது. வால்ட் டிஸ்னி குடும்பம், லீ குடும்பம், டூபாண்ட் குடும்பம் என்று ஒவ்வொரு துறைக்கும் ஒவ்வொரு குடும்பம் இயல்பாகவே சக்தி மிக்கதாக உள்ளது.
ஆனால் இவர்களுக்கெல்லாம் முத்தாய்ப்பாக இருப்பது பிரிட்டிஷ் ராஜவம்ச குடும்பத்தினர் என்று கூறப்படுகிறது. 2ஆம் உலகப்போருக்கு பின்னர் தொடங்கப்பட்ட ரகசிய திட்டம் Mind Control எனப்படுவதாகும். உலகைக் கட்டுப்படுத்த வந்த மாபெரும் சக்தியாக உருவெடுத்தது பொழுதுபோக்கு துறை. உலகத்தை கட்டிப்போட இவர்களால் எடுக்கப்பட்ட ஆயுதம் ஒன்று பொழுதுபோக்கு இன்னொன்று பணம். பல நாடுகள் சட்டென உள்நாட்டு போரில் அழிந்து போவதும், சில நாடுகளின் பொருளாதாரம் சட்டென பொங்கிப் பெருகுவதும், இப்படி எல்லா செயல்களையும் திட்டமிட்டு செய்வது இல்லுமினாட்டிகள் என்று இந்த புத்தகம் கூறுகிறது. நாடுகள் கடந்த மனிதர்கள் இதன் அங்கத்தினராய் இ��ுப்பதாய் தெரிகிறது. ஒரே நோக்கம் உலகம் தங்களின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்பதே. அது யாருக்கும் தெரிந்து செய்யப்படுவதில்லை என்றும் எல்லாமே மறைமுகமாய் நடைபெறும் தன்மையில் தான் இவர்களின் வெற்றியே இருப்பதாய் எழுத்தாளர் தெரிவிக்கிறார்.
இவை அனைத்தும் கட்டுக்கதை என்று எளிதில் கடந்து போகவும் செய்யலாம். அல்லது ஆமாம் என்று ஒத்து கொள்ளவும் முடியும். இவர்களை என்ன செய்ய முடியும்? அல்லது இவர்கள் உண்மையில் இருக்கிறார்களா? என்பது போன்ற கேள்விகளை முன் வைத்தவர்கள் பலரும் இங்கு தற்போது இல்லை என்பதிலிருந்து, கற்பனையில் கடந்து போக முடிகின்ற ஒற்றை சொல் இல்லுமினாட்டி அல்ல என்பது மட்டும் விளங்குகிறது. மற்றவை பற்றி தெரியவில்லை. வாசிக்கலாம், தெரிந்து கொள்ளலாம். படித்துப் பாருங்கள்...