தலைப்பு ஒரு சம்பிரதாயம். இவை அனைத்துமே என் மனதைத் தொட்டத் கவிதைகள் என்பதில் மாற்று இல்லை. இதுபோன்று இன்னும் பலரும் தங்களது ரசனைக்கேற்றபடி தொகுக்க இது முன்மாதிரியாக இருக்கவே எனது விருப்பமும். மற்றபடி இவர்கள் மட்டுமே சிறந்த கவிஞர்கள். இவை மட்டுமே சிறந்த கவிதைகள் என்பது அல்ல. தொகுப்புக்கு வெளியில் இன்னும் பலர் கவிஞர்கள் உள்ளனர். என் கைக்குக் கிடைத்த மட்டிலுமாக இந்தத் தொகுப்பை உருவாக்கியுள்ளேன். மற்ற தொகுப்பில் விடுபடல்கள் சரி செய்யப்படும். ஆசிரியர்
25.09.1947ல் பிறந்த கவிஞர் விக்ரமாதித்யனின் இயற்பெயர் நம்பிராஜன். தென்காசியில் வசிக்கும் இவரது சொந்த ஊர் திருநெல்வேலி. PUC படித்த இவர், மளிகைக்கடைப் பையன், சித்தாள், இட்லி-வடை விற்பவன், சலவை நிலைய எடுபிடி, மெத்தைக்கடைப் பையன், காயலான்கடை உதவியாள், ஓட்டல்-கிளீனர், கட்பீஸ் ஸ்டோர் பணியாள், சர்வர், குன்றக்குடி ஆதீன அட்டெண்டர், ஜலகன்னி-தம்போலா-வளையமெறிதல் ஸ்டால்களில் கேஷியர், சீட்டு-கிளப் கேஷியர், ஊர் ஊராய்ப் போய் புத்தக வியாபாரம், அச்சக உதவியாளர், பிழை திருத்துபவர், துணையாசிரியர், பொறுப்பாசிரியர் போன்ற பல தொழில்களைச் செய்திருக்கிறார். சோதனை, விசிட்டர், அஸ்வினி, மயன், இதயம் பேசுகிறது, தாய், தராசு, நக்கீரன், தளபதி ஆகிய பத்திரிகைகளில் பணிபுரிந்திருக்கிறார். முழுநேர எழுத்தாளரான இவர், தமது மாணவப் பருவத்தில் 1964ல் எழுதத் தொடங்கினார். இவரது எழுத்து முதன்முதலில் சுதேச மித்திரன் மாணவர் இதழில் வெளியாயிற்று.
விளக்கு, மஹாகவி, சாரல் முதலான விருதுகளைப் பெற்ற இவரது கவிதைகள் ஆங்கிலம், இந்தி, மலையாளம், கன்னடம், ஆகியவற்றில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.