வென்வேல் சென்னி 1 - வேண்மானின் வீரம் ❤️ • கலிங்கப் போரின் கொடூரங்களையும் போரில் மாயந்து கிடந்த பிணக்குவியலையும் கண்டு மனம் வருந்திய அசோகன் புத்த மதத்திற்கு மாறினார் என்று வரலாறு கூறுகிறது. ஆனால் கலிங்க யுத்தம் முடிந்து ஒன்றரை ஆண்டிற்கு பின்னரே அசோகனின் மதமாற்றம் நிகழ்ந்துள்ளது. இடைப்பட்ட காலத்தில் நடந்தது என்ன? மறைக்கப்பட்ட உன்மை என்ன? எனும் போது தெற்கே தமிழகத்தை கைப்பற்றி குமரி வரை மௌரியரின் ஆதிக்கம் நிலைக்க வேண்டும் என்ற பேராசையில் நிகழ்த்தப்பட்ட போர் ஒன்றே விடையாகிறது. அதையே மையமாக வைத்து புனைக்கப்பட்டதுதான் இந்த வென்வேல் சென்னி முத்தொகுப்பு நாவல். • முதல் பாகமான இது துளு நாட்டு மன்னன் கொங்கணக் கிழான் நன்னன் வேண்மானை மையமாக கொண்டு அமைந்திருக்கிறது. போருக்காக ஆயத்தமாகும் தென்னாட்டு வீரர்கள் வென்வேல் சென்னி மற்றும் வேண்மான் ஒருபுறமும் கலிங்கத்தின் மீதும் தென்னகத்தின் மீதும் படையெடுப்பை நகர்த்தும் ஆயத்தத்தில் அசோகரின் பக்கமும் என நகரும் முதற்பாகம் இறுதியில் மௌரியப்படை துளு நாட்டின் பாழி மீது தாக்குதலை நடத்துவதோடு முடிவடைகிறது. • கதாப்பாத்திரங்கள் அறிமுகமாகும் விதம், ஏற்ற பாத்திரங்களின் ஆழம், கதை நகரும் போக்கு, தந்திரங்கள், துரோகங்கள், வீரம், காதல், காமம், சூழ்ச்சிகள், போர் காட்சிகள் என விறுவிறுப்பாக அத்தியாயத்திற்கு அத்தியாயம் திருப்பங்களை வைத்து 800 க்கும் மேற்பட்ட பக்கங்களை நேரம் போவதே அறியாமல் புரட்ட வைத்திருக்கிறார் எழுத்தாளர் சி.வெற்றிவேல். • நீண்ட நாட்களுக்கு பின்னர் சிறந்ததொரு வரலாற்று நாவலை வாசிக்கத் தொடங்கிய திருப்தி. சரி இப்புடியே போனா சரிவராது, இரண்டாவது பாகத்தை வாசிக்க தொடங்குவம்… 😍
அசோகன் காலத்தில் மெளிரியப் படை தமிழகம் நோக்கிப் படையெடுத்த கதை இது. கலிங்கப் போரில் வென்ற பிறகு அங்கு நடந்த பிணக் குவியல்களைப் பார்த்துத் தான் அசோகன் மனம் துவண்டு புத்த மதத்திற்கு மாறினார் என வட இந்தியர்கள் வரலாற்றை எழுதி வைத்திருக்கிறார்கள். ஆனால் கலிங்கப் போரின் முடிவிற்கும் மத மாற்றத்திற்கும் நடுவே ஒன்றரை வருட கால இடைவெளியுள்ளது. அசோகன் தெற்கு நோக்கி வந்ததே தமிழகத்தை அடக்கத் தான்! தன் தந்தை பிந்துசாரரால் முடியாததை தான் எப்படியாவது செய்ய வேண்டும் என்ற உந்துதலில். அதை வைத்து, எழுத்தாளர் போர் நடந்ததாகவே புனைந்த காவியம் தானிது. அதிலும் மறக்கப்பட்ட/மறைக்கப்பட்ட வரலாறு எனும் போது கூடுதல் ஆர்வம் எனக்கு.
இது முதல் பாகமல்லோ! ஆதலால், நாயகர்களாக வரப்போகும் கதாபாத்திரங்கள் பல வடிவமைக்கப்படுகின்றன.
முக்கியமாக கொங்கணக் கிழான் நன்னன் வேண்மான். துளு நாட்டு மன்னர் கம்பீரமாக அறிமுகமாகிறார். இப்பாகத்தை அதிகம் நடத்தப் போகிறவர்களோ மௌரிய ஒற்றர் தலைவன் ருத்ரதாமனும் தமிழக ஒற்றர் அன்னி மிஞிலியனும் படைத்தலைவர் இரும்பிடத்தலையரும். ஒற்றர்களின் கதையோட்டம் அதி சுவாரசியமாகவிருக்கும்.
அவர்கள் மட்டுமா? கதையின் பிரதான வில்லியாக வரும் இந்திரசேனையும் அறிமுகமாகிறாள். மெளிரிய அசோகனும் அவனது கூட்டமும் அறிமுகமாகிறது. அசோகன் ஆட்சியமைத்த வரலாறும் வியப்பாக வெளிப்படும். சூழ்ச்சி! சூழ்ச்சி! சூழ்ச்சி!
இன்னும் எத்தனையோ சிறந்த மாந்தர் இந்தக் கதையில். 'கணிகையின் மகன்', நித்திலவல்லி, தேரதரன், அன்னி மிஞிலி, வஜ்ரதத்தன், சுசீமன், சாருமித்ரன் மற்றும் பலர்.
அவர்கள் அப்படியென்றால் தமிழரென்ன சளைத்தவர்களா? அறிமுகமாகிறான் கதாநாயகன் வென்வேல் சென்னி. சென்னி என்பது ஒருவரா என்றால் இல்லை. அது ஒரு ஆச்சரியமூட்டும் விடயமாக வெளிப்படும். இவன் தான் மூவேந்தரையும் போரில் வழிநடத்தப் போகிறவன். அதி நுட்ப மதி யூகி. இவனின் சாகசங்கள் பாகம் 2ல் அதிகம் எழுதப்படுமென நினைக்கிறேன்.
800 பக்கங்களுக்கு மேல் செல்கிறது இப்பாகம். பல கோணங்கள். வியப்பூட்டும் கதையோட்டம். அதீத விறுவிறுப்பு. அருமையான போர்க் காட்சிகள். அழகான விவரிப்பு! இதொரு காவியமாக அமைவதில் ஐயமில்லை.
ஒரேயொரு வேடிக்கை. பெண்ணின் மார்பகங்களை விவரிக்க எழுத்தாளர் எடுத்த சிரத்தை இருக்கிறதே! அப்பப்பா! பெண்ணின் மார்பகங்களுக்கு இவ்வளவு ஒத்த சொற்கள் இருக்கிறதா? நூல் தொடங்குவதே அந்த ரசத்தில் தான். கடந்திடுங்கள்! நூல் நல்ல நூல் தான்.
அருமையான நடை.. போர் காட்சிகள் சில இடங்களில் மிகைப்படுத்தப்பட்டு இருப்பினும், நாவலின் கதாநாயகனின் உருவகப்படுத்துதலுக்கு நியாயம் சேர்ப்பதாகவே இருக்கிறது.