நம்மைப் போல கல்கி ஐயாவின் எழுத்தில் மயங்கித் திளைத்த எழுத்தாளர் தான் அபிராமி பாஸ்கரன். அவரின் முதல் ஆக்கம் இது. கொப்பத்துப் போர் பற்றிய கல்வெட்டுப் பதிவைப் படித்து அதிலிருந்து தான் இந்த நூலை ஆக்க எத்தனித்தார் அவர்.
இராஜதிராஜ சோழர் காலத்தில் நடக்கும் கதை இது. அவரே முக்கிய கதாபாத்திரம். இரண்டாம் இராஜேந்திர சோழர், பெரிய பல்லவர் என அறியப்படும் பல்லவராசன் என்போரும் முக்கிய கதாபாத்திரங்கள். பல்லவராசன் யார் தெரியுமா? பிற்காலத்தில் கருணாகரத் தொண்டைமான் என கலிங்கத்துப்பரணியில் வலம் வரப்போகிறவனின் தமையன் அவர். ஏன். குலோத்துங்கச் சோழன் எனப் பிற்காலத்தில் புகழ் பெறப் போகும் விஷ்ணுவர்தனும் வலம் வருகிறார் இக்கதையில்.
கீழைச் சாளுக்கியத்தை அச்சுறுத்தும் ஆகமவல்லனின் மேலைச் சாளுக்கியத்தை சோழர்கள் போரில் சந்திக்கும் கதை தான் இந்நூலின் மையம்.
சிறப்பாக எந்தவொரு தொய்வில்லாமல் செல்கிறது கதை. ஒற்றர்கள், ரகசியங்கள், சூழ்ச்சிகள், சதித் திட்டங்கள் எனப் பல கோணங்களில் பயணிக்கிறது கதை.
பெரிய பல்லவனின் காதல் கதையும் நன்று. அவர் காதலிக்கும் கார்குழல் நங்கையின் காட்சிகளும் அழகானவை.
சதுரங்க வல்லபன், உடையத்தேவர் என பிற சுவாரசியமான நபர்களும் உண்டு கதையில்.
ஆனை மேல் துஞ்சிய தேவர் என்றழைக்கப் படும் இராஜாதித்தரைப் போலவே ஆனை மேல் மாள்கிறார் இராஜாதிராஜர். என்ன வீர வரலாற்றுக் கதை அவரின் கதை. அபாரம்!
அபிராமி பாஸ்கரனை பாராட்ட வேண்டும். முதல் முயற்சியே வெற்றிகரமாக அமைந்ததற்கு அவரின் எழுத்துத் திறமை தான் காரணம்.
சோழ வரலாற்று நாவல் என்றாலே இராசராச சோழர் அல்லது இராசேந்திர சோழர் பற்றித் தான் வரும். இது அவர்களின் காலத்திற்குப் பிறகு வந்த சோழ மன்னர்களின் காலத்தில் நடக்கும் கதை.
இந்நூல் பாராட்டப் படவேண்டிய ஒன்று. படித்து மகிழுங்கள்.
அபிராமி பாஸ்கரனுக்கு வாழ்த்துக்கள்! சில இடங்களில் அடிக்குறிப்புக்களை இட்டு வாசகர் அனுபவத்தை இலகாக்கியதற்கு எனது நன்றிகள்.
ஆனை மேல் துஞ்சிய இரண்டாவது தேவருக்கு எனது வணக்கங்களும் மரியாதையும்!