எனது சொந்த ஊர் திருச்செந்தூருக்கு அருகில் உள்ளது. வருடம் இரண்டு முறை என் சொந்த ஊருக்கு செல்வது வழக்கம். திருநெல்வேலி ரயில் நிலையத்தில் இறங்கி, திருச்செந்தூருக்கு காரில் செல்வோம். சில வருடங்களுக்கு முன், அவ்வாறு செல்கையில், முதுமக்கள் தாழி என்று குறிப்பிட்ட ஒரு வளைவைக் கண்டேன். பின் அதை மறந்துவிட்டேன். கீழடி பற்றிய செய்தி வெளியான போது ஆதிச்சநல்லூர் பற்றி குறிப்பிட்டனர்.
ஆதிச்சநல்லூர் பற்றி Google Mapsல் தேடிய பொழுது, அந்த ஊர் நாங்கள் செல்லும் வழியில்தான் உள்ளது என்பதை தெரிந்து கொண்டேன். எனது அண்ணனிடம், அந்த இடத்திற்கு ஒரு முறை செல்வோம் என்று கூறினேன்.
ஆதிச்சநல்லூர் என்பது 114 ஏக்கர் மயான பூமி. இந்த ஒரு வரி போதும் பரபரப்பை ஏற்படுத்த.
சிறிது நாட்களுக்கு முன் நடந்த புத்தக் கண்காட்சியில், இந்த புத்தகத்தை வாங்கினேன். எனது அம்மாவின் சொந்த ஊரான தேரிக்காடு பற்றியும் நூல் ஆசிரியர் குறிப்பிட்டுள்ளார். நாங்கள் சிறுவர்களாக இருந்த பொழுது, உணவு சாப்பிடும் சமயம், என் அம்மா பல கதைகளைக் கூறுவார். வயதான முதியவர்கள் தங்களது இறுதி நாட்களில் பெரிய மண் பானைக்குள் வைக்கப்படுவர், புதையல், மாய வித்தைகள், சாபங்கள் என்று தன் ஊரில் நடந்ததாகத் தான் சிறு வயதில் கேள்விப்பட்டவைகளைக் கூறுவார். மிகவும் சுவாரசியமாக இருக்கும்.
இந்தப் புத்தகத்தைப் படிக்கும் பொழுது அவற்றை தொடர்புபடுத்த முடிகிறது. கிருஷ்ணாபுரம், கொற்கை, குலசேகரப்பட்டினம் போன்ற ஊர்களும் புத்தகத்தில் இடம் பெறுகின்றன.
ஆதிச்சநல்லூர் மற்றும் கீழடியில் உள்ள பொக்கிஷங்களை ஆராய்ந்து மக்களிடையே விழிப்புணர்ச்சி ஏற்படுத்த வேண்டும். எகிப்தில் இருக்கும் மம்மிகளைக் கண்டு வியந்துள்ளேன். ஆதிச்சநல்லூர் அதைவிட பிரம்மாண்டமானது என்பதில் பெருமிதம் கொள்கிறேன்.
எனது வீட்டில் உள்ள அனைவரையும் இந்தப் புத்தகத்தைப் படிக்கும்படி கூறியுள்ளேன்.