சமண பௌத்த மதங்களுக்கும் வைதீகமதங்களுக்கும் வடக்கே நடந்த போராட்டத்தில் இரு தரப்பார்களுடைய சாஸ்திர உருவாக்கங்கள் தலையான இடம் பெற்றன. ஒரு தரப்பாரின் சொல்லாடல்களை மறுதரப்பார் தங்களது சமயச் சொல்லாடல்களாக கிரகிக்கும் உத்தி பரவலாகச் செயல்பட்டது. அதோடு நாட்டுப்புறக் கதைகளைத் தத்தம் சமயங்களைச் சேர்ந்த இல்லறத்தார்க்கு சமய கடமைகள், வழிபடும் முறைகள், படைக்கும் பொருட்கள், பின்பற்றத்தக்க சீலங்கள், நடத்தைகள், தருமங்கள் ஆகியவற்றை உடப்தேசிப்பதற்காகப் பயன்படுத்தினார்கள். அத்தகைய பயன்பாட்டின் வெளிப்பாடுகளாக சமணர்களுடைய ‘கதைக் கருவூலம்’ அமைந்துள்ளது. வைதீகர்களுடைய நளன் தமயந்தி கதை, நளன் தமயந்தி என்ற பெயரில் சமணக் கதையாக மாற்றப்பட்டதா, அல்லது சமண நளன் தமயந்தி என்ற பெயரில் சமணக் கதையாக மாற்றப்பட்டதா என்று சந்தேகப்படும் அளவிற்கு இத்தொகுப்பிலுள்ள இறுதிக் கதை அமைந்துள்ளது. இத்தகைய கதைகளை ஆய்வு செய்வோருக்கு ‘கதைக் கருவூலம்’ ஒரு அற்புதமான கருவூலமாகும்.