கவிஞர் கண்ணதாசன் என் நெஞ்சுக்கு நெருங்கிய எழுத்தாளர்களில் ஒருவர்.
“அர்த்தமுள்ள இந்துமதம்” மதங்களை தாண்டி அனைவரும் படிக்க வேண்டிய ஒரு புத்தகம். ஒரு தனி மனிதன் எப்படி தன் வாழ்க்கையை வகுத்துக் கொள்ள வேண்டும், கடைபிடிக்க வேண்டிய கோட்பாடுகள் என்னென்னவென விளக்கிக் கூறுகிறார்.
குடும்பத்தை நடத்த வேண்டிய முறை, நண்பர்கள் மற்றும் வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுப்பதில் தேவையான கவனம், துன்பத்தை கையாளும் முறை, தனிமனித ஒழுக்கம், இறை நம்பிக்கை, இல்லறம், நம்பிக்கை, தியானம், பாவ புண்ணியம், உணவு உண்ணும் முறை, ஆரோக்கியத்தின் முக்கியத்துவம் என சாதாரண முதல் அசாதாரண மனிதன் வரை அத்தனைப் பேருக்குள்ளும் எழும் கேள்விகளுக்கு பதிலாய் விளங்குகிறது.
அத்தனைக்கும் தன் வாழ்விலிருந்தும், தான் கடந்து வந்த பாதைகளில் ஏற்பட்ட அனுபவங்களையும் பட்டவர்த்தனமாக உரைக்கிறார். மிகச் சில விஷயங்கள், இன்றைய நடைமுறைக்கும், கால மாற்றத்தாலும் பின்தங்கிய கருத்தாக படுகிறது.
புத்தகம் முழுதும் திருக்குறளையும், நாலடியாரையும், பாரதியையும், பகவத்கீதையயும் இன்னும் பிற தமிழ் நூல்களின் பாடல்களையும் மேற்கோள் காட்டி நம்மை பயனிக்க வைக்கிறார்.