புத்தகம் : வைகை நதி நாகரிகம்
ஆசிரியர் : சு. வெங்கடேசன்
தமிழ் மீது பற்றுடைய அனைவரும் அறிந்த விடயம் கீழடி அகழாய்வு. மத்திய தொல்லியல் துறையால் 2014 ஆம் ஆண்டு, வைகை நதி தொடங்கும் இடத்திலிருந்து கடலில் கலக்கும் இடம் வரை இருகரைகளிலும் 293 கிராமங்கள் தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களாக கண்டறியப்பட்டுள்ளன. அவற்றில் ஒன்று கீழடி!
அடுத்த இரண்டு ஆண்டுகள் செய்யப்பட்ட அகழாய்வில் கீழடியில் 5300க்கு மேற்பட்ட தொல் பொருட்கள் கிடைத்துள்ளன. இவற்றின் சிறப்பம்சம் என்னவென்றால், அனைத்தும் மதசார்பற்ற பொருட்கள். ஆம்…2500 ஆண்டுகளுக்கு முன் மதங்களின் ஆதிக்கம் இல்லாத ஒரு நகரம் இருந்திருக்கிறது. அவற்றில் அந்துவன் என்றொரு வீரனுக்கு வைக்கப்பட்ட நடுகல், அசோகரின் ஸ்துபங்களை விட பழமையானதும், தமிழ் பிராமி எழுத்துக்கள் பொறிக்கப்பெற்ற இந்தியாவின் முதன்மையானதும் கூட. யவனர்களின் உடைந்த மதுக்குவளை மற்றும் ரோமாபுரி கப்பல் வரையப்பட்ட பானை ஓடு பாண்டியர்களுக்கும், யவனர்களுக்கும் நடந்திருக்கும் வணிகத்தைக் குறிப்பிடுகிறது. இவை மட்டுமல்ல, ஆப்கானிஸ்தானின் பவளங்கள், தந்தத்தால் ஆன தாயக்கட்டை, உடைந்த ஈட்டி முனைகள், தங்கக்கட்டிகள் போன்ற பல பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன.
இந்த அகழாய்வின் சிறப்பம்சம் என்னவென்றால் சிந்துசமவெளி, ஹரப்பா போன்று கீழடியும் ஒரு நாகரிகநகரம் என்று தெரியவந்துள்ளது. இங்கு அடுக்குமாடி குடியிருப்புகள், நெசவு தொழிலகங்கள், கால்வாய்கள், வடிகால்கள், உலைகள் போன்ற கட்டமைப்புகள் இருந்ததற்கான சான்றுகள் கிடைத்துள்ளன. இவை 2500 ஆண்டுகளுக்கு முன் வணிகம், கலை, தொழில்நுட்பம் மற்றும் எழுத்தறிவிலும் கீழடி சிறந்து விளங்கிய நகரம் என்று நமக்கு அடையாளம் காட்டுகிறது. என்னை மெய்சிலிர்க்க வைத்த விடயம் என்னவென்றால், எழுத்தாளர் வணிகம் பற்றிய அத்தியாயத்தில் மெகஸ்தினஸ் கிரேக்கத்தில் எழுதிய இண்டிகா புத்தகத்தில் உள்ள ஒரு குறிப்பை சுட்டிகாட்டுகிறார். அது பாண்டிய நாட்டைப் பற்றியும், இங்கு விளையும் முத்துக்களின் பிரகாசத்தையும் கூறுவதோடு, பாண்டிய நாட்டை ஒரு பெண்ணரசி ஆட்சி செய்தார் என்றும் குறிப்பிடுகிறது.
இதை எல்லாம் நினைத்து நாம் பெருமிதப்படும் நிலையில், இரண்டு ஆண்டுகளுக்குப் பின் அகழாய்வில் நடந்த அரசியல் சூழ்ச்சிகளை விவரித்து நம்மைக் கலங்கடிக்கிறார் ஆசிரியர். சிறப்பாக ஆய்வு செய்த அதிகாரி அமர்நாத் ராமகிருஷ்ணன் பணிமாற்றம், அருங்காட்சியகம் அமைக்க இரண்டு ஏக்கர் கிடைத்த நிலையில் அந்த பணியைத் துவங்காத மத்திய அரசு, புதிய குடியிருப்புகள் மற்றும் தொழிற்சாலைகளினால் புதைந்து கிடக்கும் வரலாற்று ஆவணங்கள் அழியக்கூடிய வாய்ப்பு எனப் பல சிக்கல்களும் முன் வைக்கப்படுகிறது.
கீழடியின் கண்டுபிடிப்புகள் பற்றி மட்டும் நான் அறிந்துக்கொள்ளவில்லை. 2500 ஆண்டுகளுக்கு முன் நம் தமிழ் சமூகம் வாழ்ந்த வாழ்வையே கண்டுகளிக்கலாம். வரலாற்றின் மீது பற்றுள்ள ஒவ்வொருவரும் படித்து மகிழவேண்டிய புத்தகம் இது. இதை நமக்கு குடுத்த சு.வெங்கடேசன் அவர்களுக்கும், அவரை எழுத தூண்டிய அகழாய்வு நிபுனர் அமர்நாத் ராமகிருஷ்ணன் அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்!