பொதுவாக திரைத்துறை பற்றியோ அல்லது நடிக/நடிகைகளின் வாழ்க்கை வரலாறுகளையோ படிப்பதில்லை. ஏகப்பட்ட மிகைப்படுத்தல்கள் இருக்கும், அல்லது மற்றவருக்கு முதுகு சொறிதல் அதிகமாக இருக்கும். ஆனால் இந்த புத்தகத்தைப் பற்றி Abdul Muthalib அவர்கள் இந்த புத்தகத்திலிருந்து சில பக்கங்களை டிவிட்டர் தளத்தில் பகிர்ந்திருந்தார். நன்றாக இருந்தது. மேலும் ராதா அவர்கள் தீவிர இறை மறுப்பாளர். தான் நடித்த படங்களில் தான் சரியென நினைக்கும் கருத்துகளை எவர்க்கும் அஞ்சாமல் எடுத்துரைத்தவர். இதனால் இந்த புத்தகத்தை படிக்கும் ஆர்வம் ஏற்பட்டது.
பேட்டி பாணியிலான கட்டுரைகள். ஆனாலும் கேள்வி பதிலாக அல்லாமல் ஆசிரியரும் ராதா அவர்களும் சாதாரணமாகவே பேசிக்கொள்வது போல கட்டுரைகள் அமைந்திருந்தன. இதனால் படிப்பதற்கு சுவாரசியமாக இருந்தது. சிறு வயதில் வீட்டை விட்டு ஓடி வந்து பல்வேறு நாடக குழுக்களில் சேர்ந்தது, திரைப்படங்களில் நடித்தது, பெரியார் கொள்கைகளை நாடகமாக எடுத்து சென்றது என எல்லா நினைவுகளையும் பகிர்கிறார்.
பாய்சு நாடகக்குழுவில் ஓரினச் சேர்க்கையாளர்கள் இருந்ததாக குறிப்பிடுகிறார். சமீபத்தில் மொழி படத்தின் நகைச்சுவை காட்சிகளை பார்க்கும் போது கூட இதைப் பற்றி போகிற போக்கில் பிருத்வி சொல்வதாக ஒரு வசனம் வந்தது. மேலும் தமிழ் நாடகத்தின் தந்தையாக சங்கரதாச சுவாமிகள் அவர்களை சொல முடியாது என அதற்கான காரணத்தையும் கூறுகிறார். மேலும் எம்.சி.ஆர் அவர்களின் சில்லறைத்தனங்கள் என பல்வேறு தகவல்களைக் கூறுகிறார்.
ஒரு நல்ல வாழ்க்கை வரலாறை படிக்க விரும்பினால் நிச்சயமாக இந்தப் புத்தகத்தைத் தேர்ந்தெடுக்கலாம்.