ரஷ்ய இலக்கியங்களைப் பற்றிய கட்டுரைகள். ஆன்டன் செகாவ். தஸ்தாயெவ்ஸ்கி, டால்ஸ்டாய் உள்ளிட்ட எழுத்தாளர்களின் படைப்புலகினைப் பற்றியது. உலக இலக்கியங்களை அறிந்து கொள்ள விரும்புகிறவர்களுக்கு சிறந்த சாளரமாக விளங்குகிறது.
S. Ramakrishnan (Tamil: எஸ்.ராமகிருஷ்ணன்; born 1966)
is a noted Tamil author and Tamil film dialogue writer. He was born in Mallankinaru, Virudhunagar district, Tamil Nadu.
Ramakrishnan is noted for his column Thunai Ezhuthu in the magazine Ananda Vikatan. His short stories have been translated in German, French, Kannada, Hindi and Malayalam.
His other works include Kadhaa Vilaasam, Desaandri, and Alainthen Tirindhen.
புனைவுகளையே பெரும்பாலும் விரும்பி வாசிப்பவன் நான். அதுவரை நான் வாசிக்காத ஒரு புதிய எழுத்தாளரின் அபுனைவு நூலை வாசிக்க வேண்டுமென்றாலே சிறிது தயக்கத்துடன் தான் தொடங்குவேன். ஆனால் புனைவுக்கு நிகரான சுவாரசியத்தையும் ஆர்வத்தையும் அபுனைவு நூல்களிலும் வாசிக்கும் ஒவ்வொரு முறையும் எனக்கு ஏற்படுத்திடும் எழுத்தாளர்கள் எஸ்.ராமகிருஷ்ணனும், சாருவும் தான்.
எஸ்.ராவின் வழியே தான் பெரும்பாலான ரஷ்ய எழுத்தாளர்களையும் இன்னும் பிற உலக எழுத்தாளர்களையும் தெரிந்து கொண்டேன். டால்ஸ்டாயின் "அன்னா கரீனினா"வை மோசமான மொழிபெயர்ப்பிலும் தஸ்தாயேவ்ஸ்க்கியின் "வெண்ணிற இரவுகளையும்" முன்பே வாசித்திருக்கிறேன் என்றாலும் இரண்டு எழுத்தாளுமைகள் குறித்தும் நிறைய தெரிந்து கொண்டது எஸ்.ரா அவர்களின் கட்டுரைகள் மற்றும் காணொளிகளின் வழியே தான்.
இந்தக் கட்டுரைத் தொகுப்பிலும் டால்ஸ்டாய், தஸ்தாயேவ்ஸ்கி, செகாவ், காஃப்கா, ஐசக் அசிமோவ், தாகூர், வர்ஜீனியா வுல்ப், குர் அதுல் ஐன் ஹைதர் என்று பல எழுத்தாளர்களையும் அவர்களின் எழுத்துக்கள் குறித்த அறிமுகத்தையும் தருகிறார். டால்ஸ்டாயின் "புத்துயிர்ப்பு" நாவல் எழுதப்பட்டதற்கான காரணத்தை எஸ்.ரா பேசிய ஒரு காணொளியின் வழியே தான் தெரிந்து கொண்டேன். அது இந்த கட்டுரைத் தொகுப்பிலும் இடம் பெற்றிருக்கிறது. இந்த கட்டுரைத் தொகுப்பில் "ஆயிரம் கொக்குகள்" என்ற கட்டுரை மிக நெகிழ்ச்சியான ஒன்று. டஞ்சோ எனப்படும் கொக்குகள் ஜப்பானில் மிக புகழ்பெற்றவை. இந்தக் கொக்குகள் ஆயிரம் வருடம் வாழக் கூடியவை என்ற நம்பிக்கை ஜப்பானியர்களிடமிருக்கிறது. டஞ்சோ கொக்கைக் காண்பது நீண்ட ஆயுளைத் தரக் கூடியது என்று ஜப்பானியர்கள் நம்புகிறார்கள். ஜப்பானின் ஹிரோஷிமா நகரில் அணுகுண்டு வீசப்பட்ட போது ஷடாகோ சஷாகி என்ற சிறுமிக்கு இரண்டு வயது. அவள் மிசாஷா என்ற பாலத்தின் அருகில் இருந்தாள். அணுவீச்சின் காரணமாக நகரமே மாபெரும் அழிவை சந்தித்தது. சஷாகி அதில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிவிட்டாள். ஆனால் அணுவீச்சின் பாதிப்பு அவள் உடலில் இருந்து கொண்டே இருந்தது. அவள் வளர வளர நோயும் கூடவே வளர்ந்தது. முதலில் உடலில் நீலப்புள்ளி தோன்றத் தொடங்கின. உடல் மெலிவுற்றது. அவளது சிறுநீரகங்கள் பாதிக்கப்பட்டன. கால் முடக்கமானது. அதன் உட்சபட்சமாக பனிரெண்டாவது வயதில் அவள் லுகேமியா எனப்படும் ரத்தப்புற்று நோயால் பாதிக்கப்பட்டாள். இந்த நோயை அணுசக்தியின் நோய் என்றே சொல்கிறார்கள். ரத்தத்தில் கலந்து ஆளைக் கொஞ்சம் கொஞ்சமாக கொல்லக்கூடியது. பனிரெண்டு வயது சிறுமியான ஷடாகோ சஷாகியை 1955ம் ஆண்டு பிப்ரவரி 21ம் நாள் மருத்துவமனையில் அனுமதித்தார்கள். ஒரு வருடம் தான் அவளது வாழ்க்கை என்று மருத்துவர் கெடுவிதித்து போனார். படுக்கையில் நோயாளியாக வெளி உலகை ஏக்கத்துடன் பார்த்தபடி படுத்துக் கிடந்த சஷாகியை அடிக்கடி பார்த்து விளையாடிப் போகும் சிசுகோ என்ற அவளது தோழி ஒரு நாள் ஒரு காகித கொக்கினை தருகிறாள். கொக்கு நீண்ட ஆயுளைக் குறிக்க கூடியது.. நீ ஆயிரம் கொக்குகள் செய்து முடித்துவிட்டால் கட்டாயமாக பிழைத்துவிடுவாய் எனக் கூறுகிறாள். அதனை நம்பும் சஷாகி பகல் முழுவதும் கொக்குகள் செய்கிறாள். காகிதம் இல்லாத போது மருந்து புட்டியின் உறையை கிழித்து கொக்குகள் செய்கிறாள். ஆனால் 664 கொக்குகள் செய்து முடித்தபோது நோய் முற்றி அவள் இறந்து போகிறாள். இந்த செய்தி அறிந்த பள்ளி மாணவர்கள் மீதி 336 காகித கொக்குகள் செய்து அவளோடு புதைகின்றனர். இந்த செய்தி ஜப்பான் முழுவதும் பரவி காகித கொக்குகள் சமாதானத்தின் அடையாளமாக, ஆயிரம் காகித கொக்குகள் செய்தால் நோயாளி குணமாகிவிடுவார் என்ற நம்பிக்கை வலுப்பெற்றது. ஹிரோஷிமாவில் சஷாகிக்கு ஒரு நினைவிடம் அமைக்கப்பட்டு ஆண்டு தோறும் பள்ளி மாணவர்கள் ஆயிரக் கணக்கில் ஒன்று சேர்ந்து காகித கொக்குகளை செய்து அங்கே காணிக்கை ஆக்குறார்கள்.
எழுத்தாளர்களையும் அவர்களின் எழுத்துகளையும் மட்டும் அறிமுகப்படுத்திவிட்டு நகர்ந்து விடாமல் மேலே குறிப்பிட்டதை போன்ற சில சுவாரசியமான விஷயங்களையும் அறிமுகப்படுத்தி இருக்கிறார் எஸ்.ரா. விஞ்ஞான புனைவு மற்றும் அபுனைவு நூல்களை எழுதிய ஐசக் அசிமோவ் எழுத்தாளர் ஆக அவரை தூண்டிய காரணங்களையும், சொந்த வாழ்க்கையில் துன்பத்தில் உழன்றாலும் சிறுவர்களை மகிழ்விக்கும் Charlie and the chocolate factory, The BFG, Matilda போன்ற நாவல்களை எழுதிய ரொவால்ட் டால் என்று பல தரப்பட்ட எழுத்தாளர்களை இந்த சிறிய கட்டுரைத் தொகுப்பின் வழியே தெரிந்து கொள்ள முடிந்தது.
புத்தகம் : எனதருமை டால்ஸ்டாய் எழுத்தாளர் : எஸ்.ராமகிருஷ்ணன் பதிப்பகம் : தேசாந்திரி பதிப்பகம் பக்கங்கள் : 142 நூலங்காடி : சப்னா புக் ஹவுஸ் விலை : 85
🔆சமகால எழுத்தாளர்களில் நான் விரும்பி வாசிக்கும் எழுத்தாளர்களில் எஸ்.ராமகிருஷ்ணனும் ஒருவர். தனது அத்தனை மேடை பேச்சுகளிலும் , அவர் தவறாமல் பரிந்துரைக்கும் இரு எழுத்தாளர்கள் : டால்ஸ்டாய் மற்றும் தஸ்த்யேவ்ஸ்கியும்.
🔆அவ்விறு எழுத்தாளர்களின் முக்கியமான படைப்புகள் , சமூகத்தின் மீது அவர்களுக்கு இருந்த பார்வை , ஒவ்வொரு படைப்பை எழுதும் போதும் அவர்கள் இருந்த சூழல் எல்லாத்தையும் அறிய முடியும் . அவர்கள் இருவரின் புத்தகங்கள் இல்லாது , இன்னும் பல புத்தகங்களை பரிந்துரை செய்திருக்கிறார்.
🔆சுயமுன்னேற்ற புத்தகங்கள் எவ்வளவு முக்கியமோ , அதே போல நாவல்களும் முக்கியமே. நான் அன்னா கர்னியாவையும் , தஸ்த்யேவ்ஸ்கியையும் தெரிந்துக் கொண்டது எஸ்.ரா மூலமாகத் தான் .
எனக்கு மிகவும் பிடித்த புத்தகம் . வாசித்து பாருங்கள்.
புத்தகங்களை படிப்போம் , பயன் பெறுவோம், புத்தகங்களால் இணைவோம் , பல வேடிக்கை மனிதரைப் போலே , நான் வீழ்வேனென்று நினைத்தாயோ – மகாகவி
உலக இலக்கியம் பக்கம் அவ்வளவாக தலைகாட்டாத எனக்கு உலக இலக்கியம் பற்றியும் எழுத்தாளர்கள் பற்றியும் அறிவதற்கான ஓர் சிறந்த ஆரம்பப்புள்ளியாக இப்புத்தகம் இருந்தது.
இந்த நூலை வாங்கியபோது, டால்ஸ்டாய் குறித்த எஸ். ராமகிருஷ்ணனின் பார்வைகளும், அவரது வாழ்க்கை மற்றும் படைப்புலகம் குறித்த விரிவான பதிவுகளும் இடம்பெற்றிருக்கும் என்றுதான் நினைத்தேன். நூலின் பின்குறிப்பைப் படிக்காமல் வாங்கியதால், வாசிக்கத் தொடங்கிய பிறகுதான் இது உலக இலக்கியத்தின் பல்வேறு ஆளுமைகளைப் பற்றிய இருபது கட்டுரைகளை உள்ளடக்கிய கட்டுரைத் தொகுப்பு என்பதை அறிந்துகொண்டேன். டால்ஸ்டாயைத் தேடி வாங்கிய நூல், உலக இலக்கியத்தின் பல கதவுகளைத் திறந்துவிட்டது.
ஒரு படைப்பின் வெற்றியையும் தோல்வியையும் எதை வைத்து முடிவு செய்கிறோம்? வாசகர்களின் வரவேற்பையா, விமர்சகர்களின் மதிப்பீட்டையா, அல்லது அது சமூகத்தில் ஏற்படுத்திய தாக்கத்தையா? இந்தக் கேள்வியுடன் டால்ஸ்டாயின் புத்துயிர்ப்பு குறித்த கட்டுரை தொடங்குகிறது. தனது முதுமையிலும், பத்தாண்டுகளுக்கும் மேலாகப் புதினம் எழுதாமல் இருந்த நிலையிலும், டுகோபோர் மக்களின் விடுதலைக்காக அவர் தனது இறுதிப் புதினத்தை எழுதினார். ரஷ்ய அரசின் எதிர்ப்பையும் மீறி, உடல்நலம் குன்றிய நிலையிலும் அம்மக்களுக்காகத் தொடர்ந்து உழைத்தார். அவர்களின் கொள்கைகளை காந்தியடிகளும் வழிமொழிந்திருந்தார் என்பது கூடுதல் வியப்பு. ரஷ்ய இலக்கிய உலகம் புத்துயிர்ப்பு புதினத்தைப் பெரிய தோல்வியாக விமர்சித்திருந்தாலும், அதன் பின்னணியில் இருந்த மனிதநேய நோக்கத்தையும் சமூக அக்கறையையும் பார்க்கும்போது அதன் மகத்துவத்தை உணர முடிகிறது. ஒரு படைப்பின் இலக்கிய வெற்றிக்கும் அதன் மானுடப் பெறுமதிக்கும் இடையே உள்ள வேறுபாட்டை இந்தக் கட்டுரை அழகாக உணர்த்துகிறது.
டால்ஸ்டாயின் குடும்ப வாழ்க்கை குறித்த பதிவுகளும் நெகிழ்ச்சியூட்டுகின்றன. குறிப்பாக, அவரது மனைவி சோபியா, டால்ஸ்டாயின் தெளிவற்ற கையெழுத்தைப் புரிந்துகொண்டு, அவரது படைப்புகளை அழகாகப் படியெடுத்து வெளியீட்டிற்குத் தயாரித்தார் என்பதை வாசித்தபோது மார்க்ஸின் மனைவி ஜென்னியின் நினைவு வந்தது. ஒரு படைப்பாளியின் எழுத்துலகப் பயணத்தில் அவருக்குப் பின்னால் இருந்து துணைநிற்கும் ஒருவரின் உழைப்பு பல நேரங்களில் வெளிச்சத்திற்கு வருவதில்லை. அந்த உழைப்பையும் உறவின் ஆழத்தையும் இக்கட்டுரை நினைவுபடுத்துகிறது.
செக்காவைப் பற்றிய கட்டுரை இந்தத் தொகுப்பில் எனக்கு மிகவும் பிடித்த பகுதிகளில் ஒன்று. செக்காவையும் புதுமைப்பித்தனையும் ஒரே பார்வையில் இணைத்து, இருவரின் எழுத்துலக ஒற்றுமைகளையும் வாழ்க்கை அனுபவங்களையும் எஸ். ரா. எடுத்துரைக்கும் விதம் சிறப்பு. செக்காவின் கதைகளைப் புதுமைப்பித்தன் மொழிபெயர்த்திருப்பது நமக்குத் தெரிந்த செய்திதான். ஆனால் இருவருக்கும் இடையிலான படைப்புத்தன்மை சார்ந்த ஒற்றுமைகள், இளமைக் காலத் துயரங்கள், வன்முறை நிறைந்த குடும்பச் சூழல்கள், அவற்றைக் கடந்து எழுத்தில் வெளிப்பட்ட தனித்துவம் எனப் பல செய்திகளை ஒன்றோடொன்று பொருத்திப் பார்க்கும்போது வியப்பாக இருக்கிறது.
செக்காவின் சிறுவயது வாழ்க்கை மிகவும் கொடுமையானது. பெற்றோரின் கடனை அடைக்க முடியாத சூழலில், அவர் சில ஆண்டுகள் அடமானம் வைக்கப்பட்டிருந்தார் என்ற செய்தி அதிர்ச்சியளிக்கிறது. அத்தகைய துயரங்களைக் கடந்து மருத்துவராக உயர்ந்ததோடு, தனது கதைகள் மற்றும் நாடகங்கள் வழியாக ஆயிரக்கணக்கான கதாபாத்திரங்களை உருவாக்கியிருக்கிறார். இத்தனை துயரங்களுக்கிடையிலும் இறுதிவரை அவரைக் காப்பாற்றியது அவரிடமிருந்த நகைச்சுவை உணர்வுதான் என்று எஸ். ரா. குறிப்பிடுகிறார். அந்த ஒரு வரி செக்காவின் வாழ்க்கையை மட்டுமல்ல, மனிதர்கள் துயரங்களைக் கடந்து வாழ்வதற்கான ஓர் உளவியல் உண்மையையும் உணர்த்துகிறது.
"டால்ஸ்டாய், தஸ்தாயெவ்ஸ்கி ஆகிய இருபெரும் சிகரங்களுக்கு நடுவே பொங்கி நுரைத்துப் பாய்ந்த பேராறு தான் செக்காவ்" என்ற எஸ். ரா.வின் வரிகள் எவ்வளவு அழகானவை! ஒரு எழுத்தாளரின் இடத்தைச் சில வரிகளில் இவ்வளவு நேர்த்தியாகச் சொல்லிவிட முடியுமா என்று வியக்க வைக்கிறது.
தஸ்தாயெவ்ஸ்கி குறித்த கட்டுரை அவரது எழுத்துலகின் தனித்துவத்தைப் பல கோணங்களில் அறிமுகப்படுத்துகிறது. அவரது எழுத்துகள் வாசிக்க வாசிக்க ஈரக் களிமண்ணைப் போல நம்மோடு ஒட்டிக்கொள்கின்றன. அவரது புதினங்களில் பெண் கதாபாத்திரங்களில் தாயின் சாயலைப் பதிவுசெய்திருப்பது, முதன்மைக் கதாபாத்திரங்களுக்கு இணையாக உப கதாபாத்திரங்களை உருவாக்குவது, வாழ்க்கை அனுபவங்களின் வழியாகப் புதிய உண்மைகளை அடையாளம் காண்பது என அவரது படைப்புலகின் பல நுட்பங்களை எஸ். ரா. எடுத்துரைக்கிறார்.
அசடன், குற்றமும் தண்டனையும், கரமசோவ் சகோதரர்கள் ஆகிய புதினங்களைப் பற்றிய விரிவான பார்வையும் இடம்பெற்றுள்ளது. அதோடு, உலகின் தலைசிறந்த இலக்கியப் படைப்புகள் காமிக்ஸ் வடிவத்தின் வழியாக அடுத்த தலைமுறையினருக்குக் கடத்தப்படுவது குறித்தும் பேசுகிறார். இலக்கியத்தை வாசிப்பதற்கான வழிகள் காலத்திற்கு ஏற்ப மாறினாலும், அதன் அடிப்படையான சாரம் அடுத்த தலைமுறையைச் சென்றடைய வேண்டும் என்ற எண்ணம் பாராட்டத்தக்கது.
புகழ்பெற்ற எழுத்தாளர்களின் இறுதிக்காலம், அவர்களது கடைசி நிமிடங்கள் ஆகியவற்றைப் பற்றிய பதிவுகளும் சுவாரசியமானவை. ஒரு படைப்பாளியின் வாழ்நாள் முழுவதும் எழுத்தால் நிரம்பியிருந்தாலும், அவரது இறுதி நாட்கள் எப்படியிருந்தன என்பதை அறியும்போது அந்த ஆளுமையை இன்னும் நெருக்கமாக உணர முடிகிறது.
ரோவால்ட் டால் என்ற பெயரை இந்த நூலின் வழியாகத்தான் முதன்முதலில் அறிந்துகொண்டேன். சிறுவர்களுக்கான எழுத்தாளராக அவரை அறிமுகப்படுத்தும் எஸ். ரா., சார்லியும் சாக்லேட் தொழிற்சாலையும் கதையை விவரிக்கும் விதம் அருமை. வெறும் நான்கு பக்கங்களில் ஓர் எழுத்தாளரின் படைப்புலகின் மீது வாசகருக்கு ஆர்வத்தை ஏற்படுத்திவிடுகிறார். இதுவரை அறியாத ஓர் எழுத்தாளரின் நூல்களைத் தேடி வாசிக்க வேண்டும் என்ற ஆவலை என்னுள் உருவாக்கியதே இந்தக் கட்டுரையின் வெற்றி.
உலக இலக்கிய ஆளுமைகளைப் பற்றிய கட்டுரைகளுக்கு இடையே, மகேந்திரவர்மன் எழுதிய மத்தவிலாசப் பிரகசனம் குறித்த பதிவும் இடம்பெறுகிறது. ஏழாம் நூற்றாண்டுக் காஞ்சிபுரத்தின் சமூகச் சூழலையும் மக்களின் வாழ்வியலையும் அங்கதச் சுவையுடன் பதிவுசெய்திருக்கும் அந்த நாடகத்தைப் பற்றிய எஸ். ரா.வின் பார்வை சிறப்பானது. குறிப்பாக, கேரளத்தில் இன்றளவும் நாடகக் கலைக்குக் கிடைக்கும் மதிப்பையும் வரவேற்பையும் அவர் பாராட்டுகிறார். பல நூற்றாண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட ஒரு படைப்பு இன்றும் கலை வடிவமாக உயிர்ப்புடன் தொடர்வது நமது மரபின் செழுமையை உணர்த்துகிறது.
எஸ். ரா.வின் இலக்கியப் பயணத்தைப் பற்றிய சில குறிப்புகளும் என்னை வியப்பில் ஆழ்த்தின. கல்லூரியில் படித்த காலத்திலேயே உலக இலக்கியங்களை வாசித்து, அவற்றை உள்வாங்கி, தொடர்ந்து விவாதிக்கும் சூழல் அவருக்கு அமைந்திருந்திருக்கிறது. கோவில்பட்டியில் அன்றைய காலத்திலேயே நண்பர்கள் ஒன்றுகூடி உலக இலக்கியங்களை வாசித்தும் விவாதித்தும் வந்திருக்கிறார்கள் என்பது வியப்பான செய்தி. அந்த வாசிப்புக் குழுவின் மையப்புள்ளியாகக் கவிஞர் தேவதச்சன் விளங்கியிருக்கிறார். இன்று வாசிப்புக்கே நேரம் ஒதுக்க முடியாமல் தவிக்கும் நமக்கு, அன்றைய தலைமுறையினரின் இந்த உலகஇலக்கிய முன்னெடுப்பு ஒரு நல்ல முன்னுதாரணம்.
ஆல்பர்ட் காம்யூவுக்குக் கிடைத்த நோபல் பரிசு, தனக்குக் கிடைத்திருக்க வேண்டியதில்லை, கசான்சாகிஸுக்குக் கிடைத்திருக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்ட செய்தி மற்றொரு முக்கியமான பதிவு. தனக்குக் கிடைத்த அங்கீகாரத்தைக் கொண்டாடுவதோடு நின்றுவிடாமல், மற்றொரு படைப்பாளியின் தகுதியையும் வெளிப்படையாகப் பாராட்டிய காம்யூவின் பெருந்தன்மை வியக்க வைக்கிறது. படைப்புலகில் போட்டியையும் பொறாமையையும் தாண்டி சக எழுத்தாளர்களின் ஆளுமையை மதிக்கும் பண்பு எவ்வளவு முக்கியமானது என்பதை இது உணர்த்துகிறது.
சோர்பா என்ற கிரேக்கன் என்ற புதினம் தமிழில் மொழிபெயர்க்கப்பட வேண்டும் என்று எஸ். ரா. இந்தக் கட்டுரையில் தனது விருப்பத்தைப் பதிவு செய்திருக்கிறார். அந்த விருப்பம் பின்னாளில் நிறைவேறியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. ஒரு வாசகராக அவர் கொண்டிருந்த இலக்கிய வேட்கை, மற்றொரு வாசகரின் வாசிப்புப் பட்டியலையும் தீர்மானிக்கிறது.
கவிஞர் தாகூரைப் பற்றிய கட்டுரையில், அவர் லத்தீன் அமெரிக்கக் கவிதைகளுக்கு ஒரு வகையில் ஊன்றுகோலாக இருந்திருக்கிறார் என்றும், விக்டோரியா ஒகாம்போ தாகூரைத் தனது மானசீக குருவாகக் கொண்டிருந்தார் என்றும் குறிப்பிடுகிறார். இந்திய இலக்கிய ஆளுமை ஒருவரின் தாக்கம் புவியியல் எல்லைகளைக் கடந்து வேறொரு கண்டத்தின் படைப்புலகில் எதிரொலித்திருக்கிறது என்பதை அறியும்போது பெருமையாக இருக்கிறது.
வர்ஜீனியா வுல்ஃப் குறித்த கட்டுரை தனித்துவமானது. அவரைத் தனது மூத்த சகோதரியாகவே கருதுவதாக எஸ். ரா. குறிப்பிடுகிறார். வாசிப்பின் வழியாக ஓர் எழுத்தாளருடன் இவ்வளவு நெருக்கமான உறவை உருவாக்கிக்கொள்ள முடியுமா என்பதற்கு இந்தப் பதிவு சான்றாக இருக்கிறது. குறிப்பாக, வர்ஜீனியா வுல்ஃப் எழுதிய Street Haunting: A London Adventure என்ற கட்டுரையை எஸ். ரா. விவரிக்கும் விதம் மிகச் சிறப்பு. ஒரே நகரத்தைப் பலரும் பார்த்தாலும், ஒவ்வொருவரும் காணும் நகரம் வேறுபட்டதாக இருக்கிறது. காந்தியடிகள் லண்டனில் வாழ்ந்திருந்தாலும், வர்ஜீனியா வுல்ஃப் பார்த்த லண்டனை அவர் பார்க்கவில்லை, அதைப் பற்றி எழுதவுமில்லை என்ற எஸ். ரா.வின் ஒப்பீடு ரசிக்கத்தக்கது. ஒரு நகரத்தின் உண்மையான அடையாளம் அதன் கட்டடங்களில் மட்டுமல்ல, அங்கு வாழும் மனிதர்களின் பார்வையிலும் அனுபவங்களிலும்தான் இருக்கிறது என்பதை உணர்த்துகிறது.
அருண் ஷோரி எழுதிய Does He Know a Mother's Heart? நூலைப் பற்றிய எஸ். ரா.வின் பார்வையும் அந்த நூலை வாசிக்க வேண்டும் என்ற ஆவலை ஏற்படுத்துகிறது. அதேபோல, பாரதிதாசனின் மனைவி அளித்த நேர்காணல் குறித்த பதிவும் கவனிக்கத்தக்கது. நிகழ்ச்சித் தொகுப்பாளர் அவரிடம் மகாகவி பாரதியாரைத் தெரியுமா என்று கேட்கும் நிகழ்வு, அக்கால இலக்கியச் சூழலையும் அதன் மனிதர்களையும் நினைவுபடுத்துகிறது. அந்த நேர்காணலைக் கட்டாயம் வாசிக்க வேண்டும் என்று தோன்றுகிறது.
ஐசக் அசிமோவின் தந்தையைப் பற்றிய கட்டுரை மிகவும் நெகிழ்ச்சியானது. அறிவியல் புனைகதைகளிலும் அறிவியல் சார்ந்த நூல்களிலும் உலகப் புகழ்பெற்ற எழுத்தாளரான அசிமோவ், தனது தந்தையைப் பற்றி உருக்கமாக எழுதியிருக்கிறார். ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதிய அவரது தந்தை, ரஷ்யாவிலிருந்து அமெரிக்காவிற்குக் கையில் ஒரு பைசாவும் இல்லாமல் புலம்பெயர்ந்தவர் என்ற செய்தி வியப்பளிக்கிறது. ஒரு தலைமுறையின் போராட்டமும் அடுத்த தலைமுறையின் சாதனையும் எவ்வாறு ஒன்றோடொன்று தொடர்புபட்டிருக்கின்றன என்பதை இந்தப் பதிவு உணர்த்துகிறது.
கடந்த ஐம்பது ஆண்டுகளில் வெளியான இந்தியப் புதினங்களில் தனக்கு மிகவும் பிடித்த படைப்பு எது என்று கேட்டால், ஒரு நிமிடம்கூட யோசிக்காமல் அக்னி நதியைச் சொல்வேன் என்று எஸ். ரா. குறிப்பிடுகிறார். ஒரு படைப்பாளியின் வாசிப்பு அனுபவமும் ரசனையும் எந்தப் படைப்பை நோக்கி அவரை இட்டுச் செல்கின்றன என்பதை அறிந்துகொள்ளும் வாய்ப்பாக இந்தக் கட்டுரை அமைந்துள்ளது.
இந்தக் கட்டுரைத் தொகுப்பை வாசித்து முடித்தபோது, உலக இலக்கியத்தின் பல்வேறு ஆளுமைகளைப் பற்றிய இருபது கட்டுரைகளை வாசித்த நிறைவு மட்டுமல்லாமல், ஒரு நல்ல வாசகர் எப்படிப் பிற எழுத்தாளர்களை அணுகுகிறார், அவர்களின் வாழ்க்கையை எப்படிப் புரிந்துகொள்கிறார், ஒரு படைப்பின் பின்னணியில் இருக்கும் மனிதர்களையும் சமூகத்தையும் எப்படிக் கவனிக்கிறார் என்பதையும் கற்றுக்கொள்ள முடிந்தது. ஒவ்வொரு கட்டுரையிலும் எஸ். ரா. எழுத்தாளர்களின் படைப்புகளை மட்டும் பேசுவதில்லை. அவர்களது குழந்தைப் பருவம், குடும்பப் பின்னணி, துயரங்கள், நட்புகள், காதல், சமூகப் பங்களிப்பு, இறுதிக்காலம் எனப் பல தளங்களுக்குள் நம்மை அழைத்துச் செல்கிறார். அதனால்தான் இவை வெறும் இலக்கிய அறிமுகங்களாக இல்லாமல், மனிதர்களைப் பற்றிய ஆழமான வாசிப்பு அனுபவமாக மாறுகின்றன.
ஒரு புத்தகத்தை வாசித்து முடித்ததும் அது குறித்த நமது புரிதல் நிறைவடைய வேண்டும் என்பதில்லை. சில புத்தகங்கள் வாசிப்பை முடித்த பிறகுதான் புதிய தேடல்களைத் தொடங்கிவைக்கின்றன. இதுவரை அறியாத எழுத்தாளர்களின் படைப்புகளைத் தேடவும், ஏற்கெனவே வாசித்த படைப்புகளை மீண்டும் ஒருமுறை வேறொரு பார்வையில் அணுகவும் இந்த நூல் தூண்டுகிறது.
டால்ஸ்டாயை வாசிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் வாங்கிய நூல், செக்காவ், தஸ்தாயெவ்ஸ்கி, ரோவால்ட் டால், வர்ஜீனியா வுல்ஃப், அசிமோவ் எனப் பல எழுத்தாளர்களை நோக்கி என்னை அழைத்துச் சென்றிருக்கிறது. சில நூல்கள் நமக்குத் தகவல்களைத் தருகின்றன; சில நூல்கள் புதிய வாசிப்புப் பாதைகளைத் திறக்கின்றன. எனதருமை டால்ஸ்டாய் இரண்டாவது வகையைச் சேர்ந்தது. ஒரு நல்ல வாசிப்பு இன்னொரு நல்ல வாசிப்பிற்கு வழிகாட்ட வேண்டும் என்பதற்கு இந்த நூலே அழகான சான்று. வாழ்த்துகள் தோழர் S Ramakrishnan ❤️
The title of the book should be changed as it not only talks about tolstoy..it's great read all together the writer might be a voracious reader he takes from Russian literature to English literature then Greek then Asia.
தமிழ் மொழி அல்லாமல் பிற மொழி இலக்கியங்களைப் பற்றி அறிந்து கொள்ளும் ஆர்வம் உள்ளவர்களா நீங்கள் அப்படி என்றால் இந்தப் புத்தகம் உங்களுக்குப் பிடிக்கக் கூடும். இருபது உலக இலக்கியங்களைப் பற்றிய சிறிய தொகுப்பு தான் இந்த புத்தகம்.
இதில் சில உலகப் புகழ்பெற்ற பிற மொழி இலக்கியங்களைச் சுருக்கமாகவும் அழகாகவும் எஸ். ராமகிருஷ்ணன் அவர்கள் கூறியிருக்கிறார்.
குறிப்பாக தஸ்தாயெவ்ஸ்கியின் குதிரை, ஜோர்பா எனும் உல்லாசி, மத்தவிலாசம், எனது அப்பா ஐசக் அசிமோவ், வீடில்லாத புத்தகங்கள், பீட்டர் புருக் மகாபாரதம், ஆயிரம் கொக்குகள்.
இந்தப் புத்தகத்தில் எனக்கு ஆச்சரியமாக இருந்தது #மத்தவிலாசம், ஏழாம் நூற்றாண்டில் காஞ்சிபுரத்தின் அன்றைய மத சூழலை வைத்து கேலி செய்து மகேந்திரவர்மன் எழுதிய நாடகம். இந்த நாடகத்தை ஒரு சாதாரணப் புலவர் எழுதியிருந்தால் அது இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு பேசப்படுமா என்பது சந்தேகம், ஆனால் இது ஒரு மன்னன் எழுதிய நாடகம் என்பதனால் என்னவோ இந்த நாடகம் இக்காலத்திலும் மேடையேற்றம் செய்யப்பட்டு வருகிறது.
வெறும் 142 பக்கங்களுக்குள் எத்தனை இலக்கியங்களையும் இலக்கியவாதிகளையும் அடக்கிவிட முடியும். எஸ். ராமகிருஷ்ணன் இந்தப் புத்தகத்தில் உலகில் சிறந்த, இறப்பதற்குள் ஒரு தடவையேனும் படித்து விட வேண்டும் என நினைக்கும் பல இலக்கியவாதிகளையும் அவர்கள் படைப்புக்கள் பற்றிய சிறு சுருக்கங்களும் கொடுத்துள்ளார். டால்ஸ்டாய் தொடங்கி ஐசக் அசிமோவ் வரை எத்தனையோ எழுத்தாளர்களின் எழுத்துப்பாணியை அறிமுகம் செய்திருக்கிறார். ஒரு சிறந்த புத்தகம் இன்னும் சில சிறந்த புத்தகங்களை நமக்கு அறிமுகம் செய்யும். அந்த வகையில் இது மிகச்சிறந்த புத்தகம்.