தன்னைச் சார்ந்தவர்கள் பிரச்சனையில் சிக்கித் தவிக்கும் போது அதை முழுவதும் அலசாமல் மற்றவர்களால் தான் என்று சிக்கலின் அழுத்தத்தை அடுத்தவர் மீது சுமத்துவது சுலபம்.
முன்னணி சினிமா நடிகனான அஸ்வினை பற்றி தவறான செய்தி போட்டாள் என்று கமலினியை கடித்துக் குதற வருபவன் அவளை வைத்தே தன்னைப் பற்றி நிறைவான செய்தியை வெளியிட்டால் மேலும் பிரபலமாகலாம் என்று உத்தேசித்துத் தன்னுடனே அவளை ஒரு மாதம் இருக்கும் அளவிற்குத் திட்டம் போட்டு அதையும் நிறைவேற்றி விடுகிறான்.
அஸ்வினின் அழகில் அவனிடம் கமலினி வீழ்ந்து போக,கமலினியின் உதாசீனத்தில் தன்னை அஸ்வின் தொலைந்து போனாலும் இருவரும் அதைப் பற்றி வெளிகாட்டாமல் நாட்களை நகர்த்துகின்றனர்.
கார்,பைக் மீது காதல் கொண்டவளை அவளின் பெற்றோர் தடுத்ததால் பத்திரிக்கை துறையை தேர்ந்தெடுத்து தன் திறமையை காட்ட வேண்டும் என்று தனக்கான பெரும் செல்வ சிறப்பு மிக்க பின்னணியில் இருந்து விலகி இருக்கிறாள் என்பதை அஸ்வின் அறிந்து கொண்ட நொடியில் இருவருக்கும் இடையில் இருந்த பொருளாதார ஏற்றத்தாழ்வு மறைந்து அவன் காதலுக்கான பிரச்சனைகள் மாயமாகிறது.
கமலினி போட்ட செய்தியால் தான் தன் நண்பனின் சகோதரி இறந்தால் என்று அவளை மேலும் காயப்படுத்தியவன் உண்மை தெரிந்த பிறகு அவளிடம் ஐக்கியமாகுகிறான்.தன் தாழ்வு மனப்பான்மையைத் தள்ளி வைத்து அஸ்வினை மணக்கிறாள் கமலினி.