அறம், சட்டம், உரிமை, மனிதநேயம், சுதந்தரம் ஆகிய லட்சியங்கள் அனைத்தையும் உடைத்து நொறுக்கிவிட்டு அந்தச் சிதிலங்களைக் கொண்டு வதைமுகாம்கள் கட்டியெழுப்பப்பட்டன.
‘பலவீனமான, தரமற்ற இனத்தை வலுவுள்ள, உயர்வான ஓரினம் வெற்றிகொள்வது தான் இயற்கை’ என்னும் அச்சுறுத்தும் சித்தாந்தத்தைக்கொண்டு இந்தப் பேரழிவு நிகழ்த்தப்பட்டது. பல்வேறு நாடுகளைச்சேர்ந்த லட்சக்கணக்கான யூதர்களை ஐரோப்பா முழுவலதிலுமுள்ள பலவதைமுகாம்களில் தொகுத்து, மனம் கூசச் செய்யும் கொடூரங்களை நிகழ்த்தி, மிருகத்தனமாக வதைத்தும் சிதைத்தும் கொன்றொழித்தனர் நாஜிகள்.
வதைமுகாம்களில் கொல்லப்பட்டவர்கள் அனைவரும் நம்மைப் போன்ற சாமானியர்கள்.
20-ம் நூற்றாண்டின் மாபெரும் இன அழிப்பு. புத்தகம், சினிமா, ஓவியம், நாடகம் என அத்தனை கலைகளின் மூலமாகவும் மீண்டும் மீண்டும் பேசப்படும் மானிட குலத்தின் மோசமான கருப்பு வரலாறு. யூதர்களை பூண்டோடு அழிப்பதன் மூலமே வலிமையான ஜெர்மனியை உருவாக்கிட முடியும் என்ற தவறான கருத்துடைய ஒரு தலைவனின் தலைமையை ஏற்றுக் கொண்ட ஒரு ஆட்டுமந்தை கூட்டத்தின் ஆதரவோடு நிகழ்த்தப்பட்ட கொடூரங்களை வாசித்திடும் போது கண்ணீரை நிஜமாகவே கட்டுப்படுத்த முடியவில்லை. நிறைய இடங்களில் புத்தகத்தை வாசிப்பதை நிறுத்திவிட்டேன்.
நிறைய திரைப்படங்களிலும், புத்தகங்களிலும் யூத இனவொழிப்பு குறித்து தெரிந்து கொண்டிருந்தாலும் இந்த புத்தகம் அதிகமான பாதிப்பை ஏற்படுத்தியது. யூதர்கள் மீது நாஜிகள் செலுத்திய வன்முறை மிகவும் விலாவரியாக பேசப்பட்டிருப்பது தான் அதிக மன அழுத்தத்தை கொடுத்தது என்று நினைக்கிறேன். மனிதனை விடவும் கீழான மனநிலை கொண்ட ஒரு உயிரினம் உலகில் இருக்கவே முடியாது என்ற என்னுடைய நிலைப்பாட்டினை இப்புத்தகம் இன்னும் வலுவாக்கியது என்று தான் சொல்ல வேண்டும்.
செல்வச் செழிப்போடு, குடும்பத்தோடு அமைதியாக வாழ்ந்த அப்பாவி மக்களை யூதர்கள் என்பதற்காக ஆடு மாடுகளை போல் சரக்கு ரயிலில் பல நாட்களாக உணவு, தண்ணீர் என எதுவுமில்லாமல் இயற்கை உபாதைகளைக் கூட இருக்குமிடத்திலேயே ஆண்களும் பெண்களும் கழித்திடச் செய்யும் நிலைக்கு தள்ளியவர்களை மனிதர்கள் என்று அழைப்பதற்க்கே நா கூசுகிறது. எலும்புகளை உறையச் செய்யும் பணியில் ஆடைகளை களைந்து ஆண் பெண் என பேதமில்லாமல் நிர்வாணப்படுத்தி, அவர்களின் மேல் தண்ணீரைப் பீய்ச்சி அடித்து, முடிகளை மழுங்கச் சிரைத்து, நோய்கள் எளிதாய் பரவிடும் சூழ்நிலையில் எல்லோரையும் தள்ளி என அடுக்கடுக்காக சித்திரைவதைகளை சிரமேற்கொண்டு செய்திருக்கிறார்கள்.
நேசநாட்டு படையினரிடம் பிடிபட்ட எஸ்.எஸ். (வதைமுகாம்களை கவனித்துக் கொண்ட காவல் படை) அதிகாரி ஹோஸ் என்பவரை நீதிமன்றத்தில் விசாரித்த போது, "ஜெர்மானியர்களின் பிரச்சனைகளுக்கு யூதர்கள் தான் காரணம் என்று எப்படி நம்பினீர்கள்?" எனக் கேட்டார்கள். அதற்கு ஹோஸ் பொறுமையாக, "எல்லோருமே அப்படி தான் சொன்னார்கள். ராணுவத்தில் அப்படி தான் சொல்லிக் கொடுத்தார்கள். எங்களுக்கு சித்தாந்த பயிற்சிகள் கொடுத்த போதும் அப்படி தான் சொல்லிக் கொடுக்கப்பட்டது. செய்தித்தாள்களிலும் அப்படி தான் எழுதப்பட்டிருந்தது. யூதர்களிடமிருந்து ஜெர்மானியர்களை காப்பாற்ற வேண்டும் என்று தான் எங்களுக்கு மீண்டும் மீண்டும் சொல்லப்பட்டது. எல்லாம் முடிந்த பிறகு தான் வேறு மாதிரியான பார்வையை நாங்கள் தெரிந்து கொண்டோம். நாங்கள் நினைத்தது உண்மையில்லை என்று சொல்லப்பட்டது. ஆனால் அப்போது அப்படி யாருமே சொல்லவில்லை." என பதிலளித்தார்.
ஒரு சித்தாந்தத்தை கண்மூடித்தனமாக எந்த எதிர் கேள்வியும் கேட்காமல் அப்படியே ஒப்புக்கொண்டத்தின் விளைவு பல உயிர்களை காவு வாங்கியது. முகாம்களிலிருந்து மீண்டவர்களும் மனச்சிதைவுக்கு ஆளாகி பல ஆண்டுகள் போராடியிருக்கிறார்கள். இத்தனை அழிவுகளையும் பலரது வாழ்க்கையையும் கனவுகளையும் குடும்பங்களையும் சிதைத்த ஹிட்லர் இறுதியில் என்ன சாதித்தான். தோல்வியினை எதிர் கொள்ள முடியாமல் தற்கொலை செய்து இறந்து போனான். அவன் எத்தனை சாதித்து இருந்தாலும், எத்தனை சாதூர்யமானவனாக இருந்தாலும் மிக மோசமான ஒரு காரணத்திற்காகவே இன்றும் நினைவு கொள்ளப்படுகிறான்.
குற்றமிழைத்தவர்கள், குற்றத்திற்கு துணைபோனவர்கள் போலவே அமைதியாக நடந்த குற்றங்களை வேடிக்கைப் பார்த்த மக்களுக்கும் குற்றத்தில் பங்குண்டு, அரசாங்கத்திற்கு எதிராக அவர்களால் ஒன்றும் செய்ய முடியாமல் கையறு நிலையில் இருந்திருந்தாலும், என்பது மறுப்பதற்கில்லை.
இப்படி ஒரு இன ஒழிப்பினை கண்ட பிறகும் அதன் பாதிப்புகளை, அதனால் ஏற்படும் இழப்புகளை உணர்ந்த பிறகும் மனித இனம் கொஞ்சமும் மாறவில்லை என்பது மனிதம் என்ற ஒன்றை கேள்விக்குள்ளாக்குகிறது. ஈழத் தமிழர்கள், பாலஸ்தீனியர்கள், பர்மா ரோஹிங்கிய முஸ்லிம்கள் என்று இன ஒழிப்பு தொடர்ந்து கொண்டே இருப்பது வரலாற்றில் இருந்து மனித இனம் எதையுமே கற்றுக் கொள்ளாது என்பதை நிரூபிக்கிறது.
"இதைவிடவும் கீழான ஒரு நிலைக்குச் செல்வது சாத்தியமில்லை அப்படி ஒரு நிலையை கற்பனை செய்து கூடப் பார்க்க முடியாது. எதுவும் இனி எங்களுடையதில்லை. எங்கள் ஆடைகளை எடுத்துக் கொண்டு விட்டார்கள். எங்கள் காலணிகளை எடுத்துக் கொண்டு விட்டார்கள். தலை முடியை அகற்றி விட்டார்கள். எங்களுடைய பெயர்களைக் கூட அழித்துவிட்டார்கள்."
இப்படித்தான் தொடங்குகிறது இந்த புத்தகத்தின் முன்னுரை. முன்னுரையை கடந்த புத்தகத்திற்குள் சென்றால் புத்தகம் முழுவதும் அவ்வளவு கொடுமை, கொடூரம், சொல்வதற்கு வார்த்தைகளே இல்லாத அளவிற்கு மனதை மிகவும் பாதித்த கொடூரங்களை ஆசிரியர் விலாவரியாக விவரிக்கிறார். 20 ஆம் நூற்றாண்டின் ஒரு மிகப்பெரிய இனப்படுகொலையான யூதர்களின் படுகொலையை நிகழ்த்தியது ஜெர்மனி. யூதர்களை அழித்து ஒழிப்பதே ஜெர்மனியின் உயர்வுக்கு உதவும் என்பதே ஹிட்லரின் கருத்தாக்கம். இந்த கருத்தாக்கத்தை ஏற்றுக்கொண்ட நாஜிகள், யூதர்களை வதை முகாம்களில் வைத்து கொடுமை செய்து கொன்ற வரலாறு தான் இந்த நூல்.
பள்ளிக்கூட வரலாற்று புத்தகங்களில் இரண்டாம் உலகப் போரின் போது ஹிட்லர், யூதர்களை படுகொலை செய்தார் என்று படித்திருப்போம். ஆனால் அப்போது வெறும் எண்ணிக்கை மட்டும் தான் மனதில் நின்றது. ஆனால் 60 லட்சதிற்க்கும் மேலான யூதர்களை எப்படி ஹிட்லரின் நாஜி வீரர்கள் கொன்றொழித்தார்கள் என்ற கேள்விக்கு எனக்கு இந்த புத்தகத்தின் மூலமே விடை கிடைக்கிறது.
வதை முகாம்களுக்கு ரயில் வண்டிகளில் யூத கைதிகளை அழைத்துச் செல்லும் அத்தியாயத்திலிருந்து தொடங்குகிறது வதை முகாம்களின் கொடூரம். கொடூரம், கொடுமை, மனிதத்தன்மையற்ற செயல், மிருகத்தனமான, இது போன்ற வார்த்தைகளால் வதைமுகாமின் கொடூரத்தை சொல்லமுடியாவிட்டாலும், இதைத் தவிர அந்த கொடூரத்தை சொல்வதற்கு நம் தமிழில் வார்த்தைகளே இல்லை என்று கூறலாம்.
ஆண்களும், பெண்களும், குழந்தைகளும், முதியவர்களும் மிகவும் கொடூரமான, மனிதத்தன்மையற்ற முறைகளால் வதைக்கப்பட்டு கொல்லப்படவேண்டும் என்பதற்காகவே வதைமுகாம்கள் உருவாக்கப்பட்டன. வலுவில்லாத ஆண்களையும், பெண்களையும், வேலை செய்யமுடியாத குழந்தைகளையும் முதலிலேயே பிரித்தெடுத்து அவர்களை கேஸ் சேம்பரில் அடைத்து கொல்லும் முறையை நாஜிகள் கையாண்டுள்ளனர். வலிமையான ஆண்களுக்கும் பெண்களுக்கும் உடனடி மரணம் இல்லாவிட்டாலும் நாஜிகள் அவர்களை நடத்திய விதம் சிறிதுசிறிதாக அவர்களுக்கு மரணத்தைக் கொடுத்தது. மரணத்தையும் மரத்துப் போகச் செய்யும் கொடூரத்தையும் கொடுத்தது.
நூலை வாசிக்கும் பொழுதுதான் கிட்டத்தட்ட நூறு ஆண்டுகளுக்கும் குறைவான கால கட்டத்தில் ஒரு உலகம் எப்படி இருந்தது என்பதை வருத்தத்துடன் உணரமுடிகிறது.
"வேலை செய்வதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட கைதிக���ை தாக்கியும், நிர்வாணப்படுத்தியும், மொட்டை அடித்தும், பச்சை குத்தியும் பிடித்து செல்வதற்கு காரணம், அவர்களின் மீது வன்முறையைப் பிரயோகிக்க வேண்டிய அவசியம் இருக்கிறது. முகாமின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு நடக்க வேண்டுமானால் தொடக்கத்திலேயே வன்முறையை அவர்களுக்கு அறிமுகப்படுத்துவதே சரி. காஸ் சேம்பருக்கு அழைத்து செல்லப்படுபவர்கள் எப்படியும் சில நிமிடங்களில் இறந்து விடுவார்கள். முகாமின் விதிகளை அவர்கள் தெரிந்துகொள்ள வேண்டியதில்லை. மரணமே அதிகபட்ச வன்முறை என்பதால் மேற்கொண்டு அவர்களுக்குத் தீங்கு ஏற்படுத்த வேண்டிய தேவையும் இல்லை." இவ்வாறு கூறுகிறார் ஒரு எஸ் எஸ் அதிகாரி.
" வதை முகாமில் போர் தயாரிப்புகளுக்கு யூதர்கள் தேவைப்பட்டார்கள் என்பது போக, தற்கொலையின் மூலமும் யூதர்கள் உடலுழைப்பை அளிக்காமல் தப்பித்து செல்வதாக நாஜிகள் கருதினர். இந்த தப்பித்தலை விழிப்புடன் இருந்து தடுக்க விரும்பினார்கள். யூதர்களுக்கு நஞ்சு அளிக்கக்கூடாது என்று மருந்தகங்களுக்கு உத்தர விடப்பட்டன. தற்கொலை கிரிமினல் குற்றமாக கருதப்பட்டது. தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு மீண்டவர்கள் தண்டிக்கப்பட்டனர். அவர்களுக்கு உணவு நீர் எதுவும் அளிக்காமல் வதைமுகாமில் தள்ளப்பட்டனர்". இவ்வாறு யூதர்கள் தற்கொலை செய்து கொள்வதை கூட விரும்பாமல் அவர்களின் உழைப்பை சுரண்டி விட்டு அவர்களை வதை முகாமில் போட்டு உணவும் நீரும் கொடுக்காமல் அவர்களது குடும்பத்தை அவர்களிடம் இருந்து பிரித்து உடலையும் மனதையும் சிதைத்து, கொன்றார்கள் நாஜிகள்.
இரண்டாம் உலகப் போர் இறுதிக் கட்டத்தை எட்டிய பொழுது நேச தேசங்களும், அமெரிக்க படையும், ரஷ்யா படையும், ஜெர்மனியின் வதை முகாம்களை மீட்டெடுக்கப் போவதை அறிந்த நாஜிகள், யூத கைதிகளை வேறு இடத்திற்கு மாற்றுவதற்காக நடத்தியே கூட்டி சென்றனர். கடும் குளிரும், உணவு பற்றாக்குறையும் உடலின் பலவீனமும் பல யூதர்களை பயணத்தின் பாதியிலேயே கொன்றது. உணவு பற்றாக்குறையை பற்றி மீட்டெடுக்கப்பட்ட ஒரு கைதி கூறும் வரிகள் பின்வருமாறு, " பசி கைதிகளை மதி இழக்கச் செய்தது. ஒருவர் சொல்கிறார், ' ஒருமுறை விழுந்து கிடந்த எங்கள் தோழர்களின் உடல்களில் இருந்து சதைகளை பிய்த்து தின்றோம். கை, பின்புறம் ஆகிய பகுதிகளில் இருந்து சதைகளை கிழித்து எடுத்து நெருப்பில் வாட்டி சாப்பிட்டோம். எப்பொழுதும் ஓய்வுக்காக நிறுத்தப்படும் அப்போதெல்லாம் வாந்தி எடுத்தும் சிலர் அதை அள்ளி எடுத்து விழுங்கினார்கள்.'"
இவ்வாறு நூல் முழுக்க கொடூரமும் இரக்கமற்ற தன்மையும் இரத்த வாடையும் நிறைந்து கிடக்கிறது. இளகிய மனம் உடையவர்கள் கண்டிப்பாக இந்த புத்தகத்தை வாசிக்க முடியாது. நம்மில் பலரும் இந்த புத்தகத்தை வாசித்து தான் ஆக வேண்டும். இந்த வரலாற்றை நாம் தெரிந்து கொண்டுதான் ஆக வேண்டும். இரண்டு காரணங்களுக்காக. ஒன்று நாம் வாழும் உலகின் வரலாற்றை நாம் தெரிந்துகொள்ள வேண்டும். இரண்டு இதே மாதிரி பிழை வருங்காலத்தில் நடத்தப்படாமல் தடுத்தே ஆக வேண்டும்.
This entire review has been hidden because of spoilers.