காதலில் வெற்றி பெறுவது ஒரு சுகம். ஆனால் அந்த வெற்றி நிலைத்ததா நம் கதாநாயகிக்கு? அவளது குழந்தைக்கு யார் தகப்பன் எனச் சொல்லப் போகிறாள்? தனித்து வாழப் போகிறாளா? இல்லை அவளது வாழ்வில் வசந்தம் வீசுமா? ஒரு பெண்ணின் வாழ்க்கைப்போரட்டத்தை மிக அழகாக எழுதியுள்ளார் ஸ்ரீஜா வெங்கடேஷ். நம் வாழ்வில் அன்றாடம் சந்திக்கும் ஒரு பெண்ணின் கதை இது.
காதலிக்கும் போது உணர்ச்சிகளுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்துவிட்டு பின்பு உணர்வுகளுக்கான மரியாதையைத் தேடத் துவங்கும் போது உண்மை முகம் தன் அகோரத்தைக் காட்டத் தொடங்கும்.
தான் விரும்பியவனைச் சண்டைப் போட்டு மணந்த அர்ச்சனா திருமண வாழ்க்கையில் இருக்கும் கஷ்டங்களால் துவண்டுபோகிறாள். பணக்கார வீட்டு மகனான சரவணனுக்குக் கணக்குப் போட்டு வாழும் இத்திருமண வாழ்வு வெறுத்து போய் மீண்டும் தந்தையிடமே அடைக்கலமாகிறான். சோம்பேறியானவன் மீண்டும் ஒரு செல்வந்தர் வீட்டு மகளைக் கட்டிக் கொண்டு அவளிடம் அடிமைப்பட்டுப் போகிறான்.
பெற்றவர்கள் பேச்சை கேட்காமல் குழியில் விழுந்தவளுக்கு ஒரே பிடிப்பாக மகன் வந்து சேர்கிறான். ஐந்து வருட இடைவெளிக்கு பிறகு அர்ச்சனாவை பார்த்த சரவணனுக்கு மனைவியின் உதாசீனம் கண் முன் வந்து போக மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைக்குமா என இவளிடம் வருகிறான். அதற்கு மறுப்பவளிடம் மகனை காட்டி மிரட்டவும் செய்கிறான்.
சரவணனின் மனைவியால் தான் இப்பிரச்சனைகளைச் சரி செய்ய முடியும் என்று அனைத்து உண்மைகளையும் அவளிடத்தில் சொல்லிவிட்டுத் தனக்காகக் காத்திருக்கும் சங்கரை கைப்பிடிக்கிறாள் அர்ச்சனா.