படிப்பின் மூலம் கண்டடைந்த அறிவை தான் செய்த குற்றங்களை மறைக்கவே பெருவாரியான மக்கள் முயலுகின்றனர். சிலர் அதில் வெற்றி பெற்றாலும் நுனி இழையில் அகப்பட்டுக் கொள்பவர்களே அதிகம்.
பேருந்து விபத்தில் படுகாயமடைந்த ஒருவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாலும் உயிர் ஊசலாட்டம் ஆடுகிறது. அவன் ஒரு ஓவியன் என்பதைப் பெட்டியில் இருக்கும் காகிதங்கள் மூலம் காவல்துறை அறிந்து கொண்டாலும் அந்த ஓவியத்தில் விபரீதம் இருப்பதாக அவர்களுக்குப்படுகிறது. அது உண்மை என்று சொல்வது போல் அடுத்தடுத்து இரு கொலைகள் நிகழ்ந்தேறுகிறது.
முதல் கொலையாக இறந்த பெண்ணின் கருப்பு பக்கத்தைப் புரட்டும் போது அது கள்ளக்காதல் என்று முடிவாக , இரண்டாவது கொலை காவல்துறை உயரதிகாரி என்பதால் பழிவாங்கும் செயல் என்ற கோணத்தில் விசாரணையை முடுக்கி விடும் போது விபத்தில் படுகாயமடைந்தவனுக்கு மருத்துவம் பார்க்கும் மருத்துவர் பக்கம் நியாய முள் வந்து நிற்கிறது.