வா.மு.கோமுவின் தனித்தன்மையே அவர் ஸ்நேகிதிகளைப் பற்றி துல்லியமாக, ரசிக்கும்படி எழுதுவதுதான். அதிலும் குறிப்பாக நகரமயமாக்கலின் தாக்கங்கள் தீண்டி விட்ட கிராமத்து ஸ்நேகிதிகளைப் பற்றி. முக்கால்வாசி கிராமங்கள் தங்களின் அப்பாவித்தனத்தை இழந்து விட்டன. நகரமயமாகிக் கொண்டிருக்கும் கிராமத்தார்களின் சிக்கல்கள் நகரத்திலிருப்பவர்களின் சிக்கல்களைவிடவும் புதிரானவை. சிக்கலானவை. சுவாரசியமானவை. இந்தச் சிக்கல்களும் புதிர்களும்தான் வா.மு.கோமுவிற்கு களம் அமைத்துக் கொடுக்கிறது. இந்த நாவலின் ஒரு டிராக் நம்மை டவுசர் போட்ட காலத்துக்கு இழுத்துச் செல்லும். ஒன்னொரு டிராக் உறங்கிக் கொண்டிருக்கும் ஹார்மோன்களை உசுப்பி விடும்.
வா. மு. கோமு ஈரோடு மாவட்டம் வாய்ப்பாடியைச் சேர்ந்த சிறுகதை, புதின எழுத்தாளர். கொங்கு மண்டல வட்டார வழக்கில் கிராமம் சார்ந்த பாலியல் கதைகளையும் எதார்த்த இலக்கியத்தையும் படைப்பவர். தமிழின் அனைத்து முன்னணி பத்திரிக்கைகளிலும் இலக்கிய பத்திரிக்கைகளிலும் இவரது கதைகள் வெளியாகியிருக்கின்றன. இவரது தவளைகள் குதிக்கும் வயிறு என்ற சிறுகதைத் தொகுப்பு 2008ம் ஆண்டின் சிறந்த சிறுகதைத் தொகுப்புக்கான விகடன் விருதை பெற்றது.