ஆத்மாநாமின் கவிதைகள் வெளிவந்த காலத்திற்கும் இன்றைக்குமான இடைவெளியில் அவருடன் எழுதிக்கொண்டிருந்த பல கவிஞர்களின் கவிதைகளில் அந்தக்கால கட்டத்திற்குரிய மங்கிய சாயல் படிந்துவிட்டிருப்பதை அவதானிக்க முடிகிறது. ஆனால் இப்பொழுது படிக்கும்பொழுதும் ஆத்மாநாமின் கவிதைகளில் கிடைக்கக்கூடிய புத்துணர்வினை எந்த ஒரு கூர்ந்த கவிதை வாசகனாலும் மறுக்க முடியாது. அவரது கவிப்பொருள் எல்லைகள் கொண்டதாயிருந்தது என்பது உண்மை. அதிக வகைப்பாடுகளை அவர் முயன்று பார்க்கு முன் அவரது வாழ்வை அவரே முடித்துக்கொண்டுவிட்டார். ஆனால் எழுதப்பட்ட கவிதைகள் யாவும் தொய்வின்றி, செறிவுமிக்கவையாகவே வெளிவந்திருக்கின்றன. அவருடைய கவிதைச் சுயத்திற்கும் அவரது பட்டறிவுச் சுயத்திற்
ஆத்மாநாம் படைப்புகள் - ஆத்மாநாம் தொகுப்பாசிரியர் - பிரம்மராஜன் கனல் வட்டம் - கல்யாணராமன்
பொதுவாகவே ஒரு படைப்பாளனின் படைப்புகளை தனித்தனியா படிக்கும் எனக்கு, இப்போதெல்லாம் ஒரு படைப்பாளியின் ஒட்டு மொத்த தொகுப்பைப் படிப்பதின் வழியாக ஏதேதோ சொல்ல முடியாத ஒரு உணர்ச்சிகளின் எல்லையை அதன் பெரும் பெருக்கை அடைவது மாதிரியான ஒரு உணர்வு.
ஒரு எழுத்தாளனுடைய தனித் தனியான படைப்புகளை வாசிப்பதின் வழியா, ஒரு எழுத்தாளனுடைய ஒரு சில தெறிப்புகளையும், அதன் வழியா ஒரு படைப்பாளனின், படைப்பு உலகத்தின் ஒரு சிறு துணுக்கை மட்டுமே தொட்டுவிட முடிகிறது. ஆனால் ஒரு படைப்பாளனின் ஒட்டுமொத்த படைப்பை வாசிப்பதின் வழியா அந்த படைப்பாளியின் படைப்பு மனதையோ, அவன் அகத்திற்குள் நிகழும் உணர்வெழுச்சியையோ, அது நிகழ்த்திப் பார்க்கிற போராட்டத்தையோ கூட தரிசிக்க முடிகிற ஒரு மாயத்தை நிகழ்த்துகிறது, கிட்டத் தட்ட ஒரு எழுத்தாளனின் கை எதையெல்லாம் எழுதிட துடிக்குமென்று பக்கத்தில் நின்று பார்க்கிற ஒரு அனுபவத்தை கொடுக்கிறது முழு வாசிப்பு.
ஏற்கனவே அப்படியான ஒரு அனுபவத்தை ஜெயகாந்தனின் சிறுகதைகள் தொகுப்பு வழியா உணர்ந்திட்டு இருக்கிற எனக்கு, ஆத்மாநாம் கொடுத்த பாதிப்பும், அவர் கவிதைகள் கொடுத்த அனுபவமும் ஒரு மாதிரி மனதை கனக்க செஞ்சுருச்சுன்னு தான் சொல்லணும்.
ஆத்மாநாம் என்கிற பெயரைத் தவிர வேற எதுவும் தெரியாமல் தொடங்கிய இந்த பயணம் கடைசியில் அவருக்காக, அவரது படைப்புக்காக இப்படியென்று என்னை என்னவெல்லாமோ தேட வைத்து இறுதியில் மீண்டும் ஒரு மகத்தான படைப்பாளியை கண்டுகொண்ட, படைப்பை வாசித்த நிறைவையும், அவர் இருக்கும் போதே ஏன் அவர் படைப்புகள் பெருமளவு கொண்டாடப்படவில்லை என்கிற வருத்தத்தையும் ஒரு சேர கொடுத்தது ஆத்மாநாமின் படைப்புகள்.
ஆத்மாநாமின் கவிதைகளில் இருக்கிற எளிமையும், இருந்தும் அது தாங்கி நிற்கிற கனமும் தான் ஆத்மாநாமை, அவரது கவிதைகளைத் தமிழ் நவீனக் கவிதைகளின் முன்னோடிகளில் ஒருவராகக் நிற்க வைக்கிறது.
இறுக்கமான படிமங்களோ, பகட்டான வார்த்தைகளோ, மிதமிஞ்சிய வர்ணனைகளோ, மதி மயக்கும் வார்த்தை விளையாட்டுகளோ இப்படி எதுவுமே இல்லாமல் எளிய மொழியில் கவிதைகளை எழுதி அதன் நேர்த்தியின் வழியாக மட்டுமே பல திறப்புகளை உருவாக்கி வாசிக்கிற வாசகனின் மனதையும் பல தருணங்களுக்குப் பயணப்பட வைக்கிறது ஆத்மாநாமின் கவிதைகள்.
எளிமையான சொற்களில் தொடங்கி, எளிமையான சொற்களில் தான் முடிகின்றன ஆத்மாநாமின் கவிதைகள், இருந்தும் ஒரே கவிதைக்குள் பல மாயத்தை நிகழ்த்தி விட்டுப் போகின்றன.
ஒரே கவிதைக்குள், முதல் நான்கு வரிகளில் ஒரு அனுபவத்தையும், அடுத்த நான்கு வரிகளுக்குள் வேறொரு அனுபவத்தையும், ஒட்டு மொத்தமாக வாசிக்கையில் முற்றிலும் புதிய பொருள் தந்து வேறு ஒரு புதிதான வாசிப்பனுவத்தையும், முடிவில் உச்சத்தையும் தந்து அகத் தேடலுக்கு அழைத்துச் செல்கிறது ஒவ்வொரு கவிதையும்.
தனித்தனி அனுபவங்களால் கவிதையை நகர்த்தி ஒட்டு மொத்த அனுபவமாய் வேறு ஒன்றைக் கொடுப்பது மட்டுமல்லாமல், முதல் நான்கு வரிக்கும், அடுத்த நான்கு வரிக்கும் இடையேயான இடைவெளியின் வழியாகக் கூட பல திறப்புகளை கொடுக்கிறது ஆத்மாநாமின் கவிதைகள், இந்த இடைவெளியின் மீது எத்தனை மதிப்பீடுகளையும் ஏற்றி வைத்து வாசிக்க முடிகிறது, இருந்தும் எத்தனை மதிப்பீடுகளை ஏற்றி வைத்தாலும் கூட அத்தனையையும் தாங்கி நிற்கிறது ஆத்மாநாமின் கவிதைகள்.
பல தனித்தனி காட்சிகளால் நிறைந்து இருக்கும் ஒரு ஓவியம் முழுமை அடைந்ததும் ஒட்டு மொத்தமாக புதிய உலகத்தை, புதிய அனுபவத்தை நிகழ்த்துவது போல ஒரே கவிதைக்குள் இத்தனையையும் நிகழ்த்திக் காட்டுகிறது ஆத்மாநாமின் கவிதைகள்.
ஆத்மாநாமின் கவிதைகளில் - நான் யார் என்கிற ஒரு தீராத ஒரு அகத் தேடலும், இந்த பரந்து விரிந்த பிரபஞ்சத்தில் தனக்கான இடம் எது, அப்படியான ஒரு இடம் உண்மையிலேயே இருக்கா என்கிற தேடலும், அந்த அந்த தருணத்தில் மட்டுமே வாழவும், ரசிக்கவும் முடியணுங்கிற ஆசையும், எண்ணமும் பார்க்க முடிந்தது.
அவரோட கவிதைகள் சிலதுல, ஒரே நகரத்தில் இரு வேறு மனநிலையோடு உலவுகிற மனிதர்கள் பற்றிய பார்வை இருக்கு அதுல ஆத்மாநாம் தன்னையே ஒரு மனிதரா நிலைநிறுத்தி பார்க்கிறாரோன்னு யோசிக்க வைக்கிறது, சில கவிதைகளில், இருபதாம் நூற்றாண்டு குறித்து பெரும் கவலையும், அரசியல் மற்றும் சமூகம் மீதான கோவமும், வெறுப்பும், சீற்றமும் அதை நேரடியா, பூடகமா, பகடியா சொல்கிற கோபமும் இருந்தும் எல்லாம் மாறும் என்கிற நம்பிக்கையும் இருக்கு, எல்லாவற்றையும் அவதானித்து, நிறுத்தி நிதானித்துப் பார்க்கிற பார்வையும், இசை, ஓவியம், கவிதை குறித்தான குறிப்புகள், சித்திரங்கள் இருக்கு, ஒரு சில கவிதைகளில் கலைஞன் படும் துயரத்தையும், இருந்தாலும் கலை கொடுக்கிற நிம்மதியையும் பார்க்க முடிகிறது. புல் தரை, வண்ணாத்திப் பூச்சி, கடற்கரை, ரோஜா பதியன்கள், பறவைகள் இப்படின்னு எல்லாத்தோடும் உரையாடலை நிகழ்த்திப் பார்க்கிற தருணங்களும் கூட நிறைந்து கிடைக்கிறது ஆத்மாநாமின் கவிதைகளில்.
ஆத்மாநாமின் கவிதைகளை முழுத் தொகுப்பாக வாசிக்கும் போது, இரு வேறு ஆத்மாநாமை அவரின் கவிதைகளின் வழியா பார்க்க முடிந்தது.
ஒன்று புறம் சார்ந்து, அரசியல், சமூகம் சார்ந்து இருந்த ஆத்மாநாம். இந்த புறம் சார்ந்த சமூகம் சார்ந்த பார்வையில் அவருக்கு நிறையக் கோபமும், அறச் சீற்றமும், கேலியும், கிண்டலும், பகடியும், சமூகத்தின் எந்த தரப்பு மேலயும் பாரபட்சம் பாக்காம அதிகாரத்தின் மேலயும், அதை எல்லாம் எளிதா கடந்துகொண்டு போகிற மந்தை மனிதர்கள் மேலயும் கோபமும், சீற்றமும் பொங்கி வழியுறே அதே சமயத்தில் அதே கவிதைகளின் இறுதியில் எளிய மக்கள் மீதான கரிசனமும், இந்த நிலை எல்லாமும் மாறும் அப்படிங்கற நம்பிக்கையும் இல்லாமல் எந்த கவிதைகளும் முடிவதே இல்ல. சமூகத்தின் மீதான கோவமா தொடங்குகின்ற கவிதைகளும் கூட நாளையைப் பற்றிய நம்பிக்கையா தான் உருப்பெற்று நிற்கிறது.
இன்னொரு ஆத்மாநாம், அகம் சார்ந்த, நான் என்கிற தேடல் சார்ந்த ஆத்மாநாம். ஆனால் அது எதுவும் இருப்பின் துயரத்தையோ, இருத்தலியல் துன்பங்களையோ பிரதிபலிக்கிற கவிதைகள் அல்ல. அவரின் அகம் சார்ந்த கவிதைகளின் இயங்குதளம் கூட இந்த பரந்து விரிந்த பிரபஞ்சத்தில் தனக்கான இருப்பைத் தேடுகிற, அதன் பிரமாண்டத்தில் நானும் ஒரு சிறு மணல் துகள் என்கிற,
இங்கு இருக்கிற கடல், ஏரி, தாவரங்கள், பறவைகள் இப்படி எல்லாமும் மாதிரி நானும் ஒரு நான் என்கிற பிரபஞ்சத்தின் எல்லையில் தன்னை நிறுத்திப் பார்க்கிற கவிதைகளாக தான் அது விரிந்து நிற்கிறது.
நான் என்கிற இருத்தலியல் தேடலா தொடங்குகின்ற ஆத்மாநாமின் தேடல் இந்த பிரமாண்ட பிரபஞ்சத்தில் நானும் ஒருவன் என்கிற பெரிய எல்லையைத் தான் தொடுதே தவிர அது ஒரு போதும் அதுலேயே தங்கி நிற்கிறது இல்ல.
இன்னும் கொஞ்சம் ஆழமா அந்த அகம் சார்ந்த கவிதைகளில் பயணப்பட்டா ஒரு தியானம் மாதிரி இருக்கு. ஒரு தியானத்திலேயோ, தவத்திலேயோ, அந்த தருணத்துக்குள்ள இருக்கப்போ, அப்போது நிகழ்கிற மாற்றத்தையோ இல்ல அதன் வழியா ஒன்றை அடைவதையோ இல்ல அதன் வழியா தன்னை, சுயத்தைத் தரிசிக்க முடிவதையோ ஒரு கவிதையா சுருக்க முடிந்த��ல் அது இப்படி தான் இருக்கும்ன்னு தோணுச்சு அவரின் சில அகம் சார்ந்த கவிதைகள்.
எப்படி இந்த இரு வேறு எல்லைகளுக்குள்ளும் சமமாக ஆத்மாநாமால் பயணிக்க முடிஞ்சதுன்னு யோசிக்க வைக்கிறது அவரின் கவிதைகள். ஒரு புறம் சமூகத்தின் அழுக்குகளை, அரசு இயந்திரங்களைச் சீண்டிப் பார்க்கிற அதே சமயத்தில் பிரமாண்ட பிரபஞ்சத்தில் தன்னுடைய இருப்பை தேடுகிற மனநிலையையும் - இந்த இரண்டிலும் அதிதீவி���மாய் இயங்க முடிந்ததும் நிச்சயம் பிரமிக்க வைக்கிறது.
இந்த இருவேறு எல்லைகளில் தீவிரமாய் இயங்கியதும் அதில் ஒன்றில் நிலை கொள்ளாமையும், அதோடு தன் வாழ்வில் நடந்த சில தோல்விகளும், இலக்கிய குழுக்களுடன் ஏற்பட்ட சில கசப்புகளும் தான் - ஒரு மிகச் சிறந்த படைப்பாளியைப் பிறழ்வின் பாதைக்கு இட்டுச் சென்று தன்னுயிரைத் தானே மாய்த்துக் கொள்ளும் நிலைக்குக் கொண்டு போனது என்னமோ.
ஒரு சில படைப்பாளிகளின் இழப்பு ஏதோ ஒரு வகையில் அந்த இழப்பின் வலியை நமக்குள்ளும் கடத்தி, ஒரு மாதிரி நம் மனசுக்கு நெருக்கமான ஏதோ ஒன்றை இழந்த ஒரு மனநிலைக்குக் கொண்டு போய் நிருத்திருது. அவர்களின் படைப்பு வழியாகவே அவர்களோடு ஏதோ ஒரு நெருக்கத்தை ஏற்படுத்தி அவர்கள் இருக்கும் போதே கொண்டாட முடியலையேன்னு யோசிக்க வைக்கிறது சில நேரங்களில்.
பிரான்சிஸ் கிருபாவை வாசிக்கும் போது அந்த மாதிரி ஒரு மனநிலையில் தான் வாசிக்க முடிந்தது, ஆத்மாநாமை வாசித்து முடித்த போதும் கிட்டதட்ட அதே மனநிலை தான்.
ஆத்மாநாமின் கவிதைகளை வாசித்த யாராலும் - நிச்சயம் அவர் தற்கொலை செய்து கொண்டார் என்பதை நம்பவே முடியாது, தன் கவிதைகள் முழுவதும் நம்பிக்கையை மட்டுமே சாரமாய் வைத்திருந்த தூய ஆத்மா அதையெல்லாம் விடுத்து தற்கொலை செய்து கொண்டார் என்கிற செய்தி உண்மையில் மனதில் ரணமாய் தான் வலிக்கிறது. கவிஞனும், பித்து மனநிலையும் ஒருவரை ஒருவர் ஒரு போதும் விட்டு விலகுவதே இல்லை போலும்.
ஆத்மாநாமின் கவிதைகள் தன்னளவிலேயே பெரும் தாக்கத்தைக் கொடுத்த போதிலும், கல்யாண ராமனின் ஆத்மாநாமின் கவிதைகள் பற்றிய பகிர்தலும், புரிதலும் -அவரின் கவிதைகளை வேறு ஒரு தளத்தில் வைத்து அணுகிப் பார்ப்பதற்கான ஒரு திறப்பை கொடுக்கிறது. ஒரு சில மதிப்பீடுகளின் மீது மாற்றுக் கருத்து இருந்தாலும், போதாமை இருந்தாலும்,
ஒரு சில மதிப்பீடுகளிலும், அவர் தொகுத்துக் கொடுத்த ஒட்டுமொத்த தரவுகளிலும் நிச்சயம் பிரமிக்கவும் வைக்கிறார். கனல் வட்டம் - நிச்சயம் ஒரு மகத்தான கவிஞனின் கவிதைக்கு இப்படியான கட்டுரைகளின் தேவையையும் உணர்த்துகிறது.
ஒரு போதும் என்னை அழித்தாலும் என் எழுத்தை அழிக்க முடியாது என்று இருக்கும் போதே எழுதி, என்றும் அழிக்க முடியாத எழுத்தாகிப் போன மிகச்சிறந்த கவிஞன் - ஆத்மாநாம்...❤️
#167 Book 8 of 2023- ஆத்மாநாம் கவிதைகள்:முழுத்தொகுப்பு Author- ஆத்மாநாம்
“என் காலடியில் கொஞ்சும் நாய்க்குட்டிக்காக இன்னும் எனது நம்பிக்கை நசித்துப் போகவில்லை.இன்னமும் கொஞ்சம் அன்பு மீதமிருக்கிறது.”
“தரிசனம்” என்ற தலைப்பில் ஆத்மாநாம் எழுதிய கவிதையை “தேசாந்திரி” புத்தகத்தில் படித்தேன்.அன்று தான் ஆத்மாநாம் கவிதைத் தொகுப்பை நிச்சயம் படிக்க வேண்டும் என்ற ஆர்வம் எழுந்தது. மூன்று மாதம் கழித்து இந்த புத்தகத்தையும் படித்தாகி விட்டது.
இதில் இருக்கும் ஒவ்வொரு கவிதையும் “ஆத்மாநாம்” என்ற மனிதனையே நமக்கு அடையாளம் காட்டுகிறது. Serious-ஆக தொடங்கி sarcasm-ஆக முடியும் கவிதைகள் எல்லாம் இன்றைய அரசியலுக்கும்,சமூகத்துக்கும் கூட அப்படியே பொருந்துகிறது. எதார்த்தமான விஷயங்களைக் கொண்டே எதார்த்தமான கவிதைகளை எழுதியிருக்கிறார்.
சில கவிதைகள் சிந்திக்க வைக்கும். சில கவிதைகள் சிரிக்க வைக்கும். சில கவிதைகள் சிலிர்க்க வைக்கும்.நிறைய complex and complicated விஷயங்களை நான்கே வரிக்குள் அடக்கியிருக்கிறார்.
“அவர் பேனா அவர் காகிதம் தான் ஆனால்,அவர் கவிதை நமக்கானது,உலகுக்கானது.”