“பாரும் பாபு, நம்மில் ஆறில் ஒரு பங்கு ஜனங்களை நாம் தீண்டாத ஜாதியாக வைத்திருப்போமேயானால் நமக்கு ஈசன் நல்ல கதி கொடுப்பாரா?”
‘பாரதியார்’ எழுதிய ‘ஆறில் ஒரு பங்கு’ சிறுகதையிலிருந்து…
உலகில் இதுவரை எந்த ஆயுதங்களும் தடை செய்யப்படவில்லை, ஆனால் புத்தகங்கள் தடை செய்யப்பட்டுள்ளன. அப்படி இந்தியாவில் முதன் முதலில் பிரிட்டிஷ் அரசால் தடை செய்யப்பட்ட புத்தகம் தான் இது. இதுவே தமிழின் முதல் சிறுகதை.
1910ஆம் ஆண்டு பாரதி இந்தப் பிரதிகளை தாமே பிரசுரித்து மூன்று அனாக்களுக்கு விற்று வந்தார். அப்படி பிரிட்டிஷ் அரசாங்கமே தடை செய்யுமளவிற்கு இந்தக் கதையில் என்ன சொல்லப்பட்டுள்ளது?
நூறு வருடங்களுக்கு முந்தையை ஒரு சராசரி இளைஞன். பிரம்மசமாஜத்தில் ஈடுபட்டு துறவறம் மேற்கொண்டு சுதந்திர போரில் தன்னை இணைத்துக் கொள்ள விரும்புகிறான். ஆனால், அவன் சிறு வயதிலிருந்தே ஒரு பெண்ணை காதலித்துக் கொண்டிருக்கிறான்.
இப்போது துறவு செல்லவா? அல்லது அந்தப் பெண்ணை மணந்து கொள்ளவா? என்று குழம்பிக் கொண்டிருக்கையில், அந்தப் பெண்ணிற்கு அவளது அப்பா வேறொரு மாப்பிள்ளையுடன் திருமண ஏற்பாடுகள் செய்கிறார். இதற்கிடையே அந்தப் பெண் தற்கொலை செய்து கொண்டுவிட, அந்த இளைஞன் துறவு மேற்கொண்டு தேச சேவை செய்ய கிளம்புகிறான்.
இரண்டு வருடங்கள் கழித்து அந்த இளைஞனுக்கு அந்தப் பெண் சாகவில்லை, மரணப் படுக்கையில் இருக்கிறாள் என்ற செய்தி தெரிய வருகிறது. பின்னர் முடிவு.
ஒரு மிகச் சாதாரணமான காதல் நாடகமாக இருக்க வேண்டிய கதையை, தனது அரசியலை இந்தக் கதையின் மீது ஏற்றியதன் மூலம் ஒரு அரசே தடை செய்யுமளவிற்கு வீரியமான கதையாக மாற்றி இருக்கிறார் பாரதி.
இந்தக் கதை தமிழின் முதல் சிறுகதை என்று சொல்லப்பட்டாலும், ஒரு சில வார்த்தைகளை தவிர்த்து ஏதோ நேற்று எழுதிய கதை போலவே வாசிப்பதற்கு எவ்வித தடையும் இல்லாமல் இருக்கிறது. ஏதோ நமது நண்பன் பேசுவது போல இந்தக் கதை சொல்லி நம்மிடம் பேசுகிறார். பல இடங்களில் சுஜாதா நடை இருந்தாலும், பாரதி சுஜாதாவிற்கு முன் காலத்தவர் என்பது ஒரு வரலாற்று முரண்.
இதனை சிறுகதை என்று சொன்னாலும் இது ஒரு குறுநாவல் வடிவிலேயே இருக்கிறது.
கதை என்கிற வடிவத்தை தாண்டி இது பேசுகிற அரசியல் என்பது, இந்தக் காலத்திற்கு ஏற்றது அல்ல என்றே தோன்றுகிறது.
உதாரணமாக, தான் துறவறம் சென்ற பின்பு தன்னைக் காதலித்த பெண்ணும் இல்லற வாழ்வை விடுத்து அவனுக்காக காத்திருந்து இறக்க வேண்டும் என நாயகன் நினைப்பது அல்லது நாயகன் வழியாக பாரதி நினைப்பது எவ்விதத்தில் சரி?
துறவறம் போவது நாயகனின் விருப்பம் அதற்காக தன் கருத்தை காதலி மீது திணிப்பதும் அதற்கு புனித பிம்பம் கட்டமைப்பது என்பது அறிவுடமை ஆகாது. அது நூறு வருடங்களுக்கு முந்தைய கால கட்டமாக இருந்தாலும் சரி.
‘கோ மாமிசம் உண்ணாதபடி அவர்களைப் பரிசுத்தப்படுத்தி, அவர்களை நமது சமூகத்திலே சேர்த்து அவர்களுக்கு கல்வியும், தர்மமும், தெய்வமும் கொடுத்து நாமே ஆதரிக்க வேண்டும்’
இந்த மொத்தக் கதையின் நோக்கமும் தாழ்த்தப்பட்ட மக்களை ஒன்றிணைத்து அந்நிய அரசாங்கத்திற்கு எதிராக போரிடுவது தான். அது மேற் குறிப்பிட்ட வரிகளிலும் தெரிகிறது. ஆனால், மாட்டுக்கறி தின்னும் ஒருவன் பரிசுத்தமற்றவன் என்பது அந்த தனிமனிதனின் உரிமையை அவனது உணவை கேலி செய்வதாகும்.
தாழ்த்தப்பட்ட மக்களுக்கு உதவ வேண்டும் என்று இந்தக் கதை சொல்வது போல இருந்தாலும், அது அவர்களின் மீது பரிதாபப்பட்டோ அல்லது சமத்துவம் வேண்டியோ அல்ல. இந்த தாழ்த்தப்பட்ட மக்களை இந்துக்கள் சரிசமமாக நடத்தாமல் போனால், அவர்கள் சுயமரியாதையும் கல்வியும் கொடுக்கும் பிற மதங்களுக்கு மாறிவிடுவார்கள். அதனால், இந்துக்களின் மக்கள் தொகை குறையும் என்ற பயம் தான் காரணமாக இருக்கிறது.
‘சாதிகள் இருக்கலாம் ஆனால் சாதி ஏற்றத்தாழ்வுகள் இருக்க கூடாது’ என பாரதி கூறுகிறார். ஆனால், சாதிகள் இருக்கும் வரை சாதிய ஏற்றத்தாழ்வுகள் இருக்கும் என்பதே நடைமுறை எதார்த்தம்.
எந்தவொரு அரசியல் கொள்கைகளும் காலம் கடந்து நிற்கும் என்று சொல்ல முடியாது. ஆனால், கலை காலம் கடந்து நிற்கும். நூறு வருடங்களுக்கு முன��னர் வாசித்த ஒரு வாசகனுக்கு உணர்ச்சி கொந்தளிப்பை தந்திருக்க கூடும். ஆனால், தற்போதையை வாசகனுக்கு ஒரு சராசரி பொழுதுபோக்கு கதை தரும் உணர்வையே தருகிறது.