"சூல்" - சோ.தர்மன்
இந்நாவல் பற்றிய முன்னுரையான "நாவல் உருவான கதை"யிலயே தெரிந்துவிடும், இதனின் உட்கரு என்ன என்று. தாம் படித்த ரஷ்ய புத்தகமாம், பிரஷ்னேவின் "தரிசுநில மேம்பாடு"விலிருந்த கதையொன்றில் விவசாய விதைப்பாடு பற்றிய சிறுகுறிப்பை உந்துதலாக கொண்டு, நமது முன்னோர்கள் காலம் காலமாக பாரம்பரிய முறையில் மழையை கணிப்பது , பயிர் விதைப்பாடு, ஏர்சால் மற்றும் பல இயற்கை முறையை, கதையின் ஊடாக ஆவணபடுத்தியிருக்கிறார், திரு சோ.தர்மன் எனும் சோ.தர்மராஜ்.
உதாரணமாக, சாக்குருவியின் மனிதர்களின் மரணத்தை கணிக்கும் கூப்பாடு,
தூக்கணாங்குருவி கூடுகளை கட்டும் முறையை கொண்டு, அந்த ஆண்டின் மழை அளவை கணிப்பது,
மாடப்புறா தன் கூடுகளை முட்டைகள் வெளிதெரிய கட்டுவது
ஆண் பனை, பெண் பனை மரங்களின் வித்தியாசத்தை கண்டுபிடிப்பது என இப்படி பலவற்றில் முன்னோர்கள் கணிக்கும் முறையை நயம்பட வட்டார வழக்கில், வேளாண் குடிகளின் கேலி நகைச்சுவை பேச்சுகளினூடே சொல்லிச் செல்கிறார்.
ஆங்கிலேய ஆட்சியில்
தென்கோடி தமிழகத்தின் எட்டயபுரம் சமஸ்தான
பகுதியிலுள்ள, உருளக்குடி கிராமமும் அதன் நிறைசூலாய்(நீர்) கெதக் கெதக்கென நிறைந்திருக்கும் கண்மாயுமே கதைக்களம்.
இப்புதினத்தை வாசிக்கையில் இதன் 500 பக்கங்களும் கிராமிய மண்வாசனை மிக்கதாய் உணர்வீர்கள். அவரவர்க்கான கிராமவாழ்க்கைகளும் கிராம பயணங்களும் மனக்கண்முன் நிழலாடியபடியே வரும்.
20 அத்தியாயங்களால் ஆன நாவல் என்றாலும், தொடர்ந்து படிக்க கூடிய கதைவடிவமாய் இல்லாது, இயற்கையையும் வேளாண்மை தொழிலையும் கொண்ட வர்ணனைகளாகவே செல்கிறது இப்புதினம்.
அதேவேளையில் ஒவ்வொரு அத்தியாயத்திற்குள்ளும் கிராமவாசிகளின் கதைகளை சுமந்தவாறு அமைந்திருக்கிறது.
வேளாண்மை குறித்து பல தகவல்களும் இதில் காணக்கிடைக்கிறது. அதாவது,
பல்வேறு வகையான பயிர்களை பற்றியும், அதன் விதைப்பு,நடவு, அறுப்பு பதங்கள் பற்றிய கூறுகள் மிகத்தெளிவான வர்ணனைகளின் மூலம் அறியலாம்.
உதாரணமாக, வெற்றிலை பயிர்- கண்மாய் நீர் பாய்ச்சினால் வெற்றிலையில் காரம் கிடைக்காது என்றறிந்து, காரம் பெற, கண்மாய் நீர் கிடைத்தாலும் கிணறு தோண்டி, அக்கிணற்றுநீரை வெற்றிலைக்கு பாய்ச்சுவதாக கதையில் வருகிறது.
நாட்டார் தெய்வ வழிபாடுகள் முறைமையும் அறியகிடைக்கிறது. நாட்டார் தெய்வங்கள் எனப்படுவது முன்னோர்கள் வழிபாடாகவே அறியமுடிகிறது. அந்த ஊர் பொருட்டு ஏதோ ஒரு காலத்தில், ஒருபெரும் நற்காரணத்திற்காக தன்னால் இயன்றதை ஊருக்காக செய்து, அதனால் இறந்தவர்களுக்கு மரியாதை செய்யும் விதமாக, அவர்கட்கு சிலைவைத்து, மாலை மரியாதை, பொங்கல் படைத்தல் என வருடந்தோறும் வணங்குகின்றனர். அவ்வாறாக, கண்மாய் நீர் அடைப்பை நீக்க, ஊரின் வேளான் போகம் செழிக்க, கண்மாய் நீருக்குள் மூழ்கி, மதகு அடைத்த கட்டையை பிடித்து கொண்டே உயிர்விட்ட நீர்பாய்ச்சி மடைகுடும்பன் முன்னோர்களில் ஒருவர் தெய்வமாக உருளக்குடி அய்யனார் கோவிலில் வணங்கப்படுகிறார்.
மழை வேண்டி நேமிக்கம் போடும் கிராம மக்களே, கண்மாய் நிறையும் அளவு மழை பெற்றவுடன்,
மழையை வழியனுப்பும் தூள்மாவு சாங்கியமுறை கொண்டு மழை நிறுத்தும் கலையும் பெற்றிருக்கின்றனர்.
அக்காலங்களில் தன்னலமற்ற பொதுநலம் எந்த அளவிற்கு மனிதர்களுள் வேர்விட்டு இறங்கியிருக்கிறது என்பதற்கு
கொப்புளாயியும், வழிபோக்கர்களுக்கு அவளின் மோர் தாழியும், அவள் நட்டு வைத்த மரங்களுமே சாட்சி என கதையாடல் செல்கிறது.
கிராமங்கள் தற்சார்பு கொண்டவை என்பதற்கு, உருளைக்குடி கிராமத்திலுள்ள இணக்கமான
பள்ளர் விவசாயிகள், விவசாயத்திற்கு பயன்படும் கலன்களை செய்யும்/மாடுகளுக்கு லாடம் அடிக்கும் ஆசாரிகள், பானை செய்யும் வேளார்கள், பனையேறிகள், தொழில்/வியாபாரம் செய்யும் நாடார்கள் மற்றும் செட்டியார்கள் என அனைவரும் ஒருவொருக்கொருவர் உதவும் விதமான தொழில்களை கொண்டவர்கள். பணபரிவர்த்தனைகள் குறைந்த தானிய கொடுக்கல் வாங்கல் கொண்ட சமூகம். பதுக்கல்கள் அற்ற சமூகம். அருமையில்லையா!!!
போலவே ஆசாரிகள் தொழில்முறை,
வேளான் கலன்களான ஏர், மாட்டு வண்டிகள், மம்பட்டி, கத்தி போன்ற வேளான் பொருட்கள் செய்யவும், மாடுகளுக்கு லாடம் அடிக்கவும், பொன்நகைகள் செய்யவும் என ஒவ்வொரு கிராமத்திலும் இருந்திருப்பதை அறியமுடிகிறது.
ஒவ்வொருக்கும் அவர் சார்ந்த தொழிலின் குணமும் அப்படியே வந்துவிடும் என்பதற்கு குயவர்களான வேளார்களின் குணத்தையும் படம்பிடித்து காட்டபடுகிறது. அவர்களுக்கு மட்டுமல்ல அவர்களின் அஃறிணைகளுக்கும் அக்குணம் வந்துவிடுகிறது. உதாரணமாக, மிருதுவான மண்ணை கொண்டு பதமான முறையில் பானை செய்பவரின் குணம், அதிரந்து பேசாது அமைதியானதாக இருப்பதில் ஆச்சரியமில்லை. போலவே அவர்களின் வண்டிமாடுகளும். எளிதில் உடையக்கூடிய பானைகள் வண்டியில் உள்ளதை உணர்ந்து, கரடு முரடான பாதைகளிலும் பதவிசாக இட்டு செல்லும்.
கதைமாந்தர் பெயர்களாக முத்துவீரன், மடைக்குடும்பன் நீர்ப்பாய்ச்சி, கள்ளாளன், நங்கிரியான், மாதாயி, கொப்புளாயி, செண்பக வேளார், குப்பாண்டி, எலியன், பிச்சை ஆசாரி, முத்து, சித்தரை, மூக்கன் என பல்வேறு தனித்துவ பெயர்களை கொண்டதாக இருக்கிறது.
எலியன், பிச்சாசாரி எனும் கதைமாந்தர்கள் தங்களுடைய உதவிக்கு கைமாறாக, கட்டபொம்மன் வகையறாவிடமிருந்து பொன் நகைகள் பெற்று, அதை புதையலாக காத்துகொண்டு, ஆங்கிலேய ஆட்சி முடியுமென தலைமுறை தலைமுறையாக காத்து கொண்டிருந்தனர். அதையும்
புதையல்காக்கும் முனி என்ன செய்தது என சுவாரசியமாக சொல்லப்பட்டிருக்கிறது.
கிராமிய மாந்தர்களின் உரையாடல்கள் என்பது மெத்த படித்த நாசூக்கதனங்கள் கொண்டவையல்ல. அவரகளது பேச்சுகளில் அந்தரங்க விஷயங்கள் கேலியும் கிண்டலுமாய் வெளிப்படும் இருப்பினும் விரசம் இருக்காது. அதனை இந்நாவலிலும் காணலாம்.
உருளக்குடி கிராமத்தின் இயற்கையின் குளுமையை அனுபவித்தபடி வந்த நமக்கு கண்முன்னேயே அக்கிராமம் அழிவதாகவும�� காட்டப்படுகிறது.
ஆங்கிலேயன் ஊக்குவித்த மதமாற்றம்,
அவன் கொணர்ந்து விட்டு சென்ற ஜிலேபி கெண்டை, கருவேலம், பயிர் உரங்கள்.
இதனால் கண்மாயில் வேறெந்த நாட்டு மீன்களும் இல்லாமல் பறவைகள் உண்ணாத இந்தகெண்டை மீன்கள் மட்டுமே பல்கி பெருகியது,. கருவேலமரங்களின் வளர்ச்சி மற்றும் பிறமரங்களின் அழித்தொழிப்பினாலும், பராமரிப்பில்லாத கண்மாயாலும் மேடேறி போய், சூல் வற்றி அழிந்தது நிறையற்ற கண்மாய்.
கண்மாய் வற்றி கிணற்று பாசனமும் இல்லாது, விவசாயமும் அழிந்தது.
மேலும்,
சுதந்திரத்திற்கு பின்னான அரசியல் நாசங்கள் உருளக்குடியை கிட்டத்தட்ட சுடுகாடாகவே மாற்றிவிட்டிருந்தது என முடிகிறது நாவல்.
இதயம் கனக்கும்படியான முடிவு.
ஆனால் இன்றைய காலகட்டத்தில் கிராமங்களின் நிலை இதுதான் என பட்டவர்த்தனமாக படம்பிடித்து காட்டப்பட்டிருக்கிறது.
சாதிகள் பல இருந்தாலும் ஒற்றுமையாக வாழ்ந்த கிராமங்கள், இப்போதைய காலகட்டத்தில் சிலரின் தன்னலங்களாலும் பேராசைகளாலும் ஏதுமற்ற வனாந்திரங்களாக மாறிவருகின்றது. அதனை மிகத் தெளிவான முறையில் பெருநாவலாக வடித்திருக்ருக்கிறார், திரு சோ.தர்மன். இந்நாவல் நான்கு விருதுகள் பெற்றதில் ஆச்சரியமில்லை. அதற்கும் மேலான தகுதியுள்ளதே.
தனது ஊர் மண்ணை விட்டு குடிபெயர்ந்து வந்தவர்களுக்கு, மீண்டும் தனது ஊர்வாசம் நுகர ஓர் அறியவாய்ப்பு இந்நூல்.
சென்ற சென்னை புத்தக கண்காட்சியில்(2020),
இப்புத்தகத்தை எழுதிய திரு சோ.தர்மன் கையாலேயே இப்புத்தகத்தை பெற்றதில் பெரு மகிழ்ச்சி.
🙏🏻