கர்பக்கிரகம் கட்டிய பின்னரே தஞ்சை பெரிய கோயில் கட்டப்பட்டுள்ளது. எல்லாக் கோயில்களிலும் முகப்பில் இருக்கும் ராஜ கோபுரம் உயரமாகவும், கருவறை கோபுரம் சிறியதாகவும் இருக்கும். ஆனால், தஞ்சை பெரிய கோயிலில் ராஜ கோபுரம் சிறியதாகவும், கருவறை கோபுரம் (ஸ்ரீ விமானம்) உயரமாகவும் உள்ளது.
ஸ்ரீ விமானத்திற்கு பொன் தகடுகள் வேயப்பட்டுள்ள செய்தி கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. பிற்காலப் படையெடுப்புகளின் போது அவை சூறையாடப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. ஸ்ரீ விமானத்தின் நிழல் கீழே விழாது என்று பல இடங்களில் படித்துள்ளேன். ஆனால், படங்கள் பக்கம் 56இல் ஸ்ரீ விமானத்தின் நிழல் தரையில் விழும் படம் இடம்பெற்றுள்ளது.
கருவறை போன்ற இடங்களில் சுவரின் மேல் அமைக்கும் கூரையினைப் பிரஸ்தரம் என்பர். தமிழகத்தின் திருக்கோயில்களில் பிரஸ்தரத்திற்கு மேலே செங்கற்களால் கட்டப்பட்டவையாகும். இராஜராஜ சோழன்தான் முதன் முதலில் கருங்கல்லால் ஆன விமானத்தைப் பெரிய கோயிலில் அமைத்தான்.
கட்டுமானத்தில் சுண்ணாம்புக் கலவை கூட பயன்படுத்தாமல், பல்கோணப் பிணைப்பு முறையில் கற்களைப் படிமானமாக அடுக்கி, இடைவெளியில்லாமல் கட்டப்பெற்றுள்ளது (படங்கள் பக்கம் 9).
வண்ணப் படங்கள் நிறைய உள்ளதால் தஞ்சை பெரிய கோயிலுக்கே சென்று வந்தது போல் உள்ளது.
பாலகுமாரன் எழுதிய உடையாரைப் படித்தால் மேலும் பல விஷயங்களை அறியலாம்.