கம்பர் வடமொழிக் காவியத்தைத் தென் தமிழ் மொழியில் கவிதைச் சொற்களைக் கொண்டு காவியம் படைத்துத்தந்திருக்கிறார். கம்பர் காவியத்துக்கே அவர் எடுத்தாளும் சொற்கள் தனிச் சிறப்பைத் தருகின்றன. “செஞ் சொற் கவி இன்பம்” அவர் ஊட்டியது. அவ்வின்பம் சிறிதும் குறையாது உரைநடையில் இந்நூல் படைக்கப்பட்டுள்ளது. கம்ப ராமாயணக் கதை மட்டும் எடுத்துக் கூறுவது இவ்வுரைநடை நூல். கதைக் கோவை கெடாமல் நிகழ்ச்சிகளைச் சித்திரிக்கிறது இந்நூல்; உரைநடை இதற்குத் தனிச்சிறப்புத் தருகிறது. - ரா.சீனிவாசன்
டாக்டர் ரா. சீனிவாசன் பச்சையப்பன் கல்லூரியில் 1940 முதல் 45 வரை மாணவர்; 1945 முதல் 1981 வரை தமிழ்த்துறைப் பேராசிரியர், தலைவர். மொழியியல், தமிழ் இலக்கணம், கட்டுரை நூல்கள், நாவல்கள், நாடகம், புதுக்கவிதை எனப் பல துறைகளிலும் அவர் நூல்கள் வெளிவந்துள்ளன; ‘சங்க இலக்கியத்தில் உவமைகள்’ என்னும் ஆய்வு நூல் மூன்று பதிப்புகளைக் கண்டது; மொழியியல் பத்துப் பதிப்புகளைக் கண்டது; அவர் எழுதிய உரைநடை நூல்களுள் ‘அணியும் மணியும்’ இன்னும் பாராட்டப்படுகிறது. அக்கட்டுரை நூலும், ‘சொல்லின் செல்வன்’ என்னும் நாடக நூலும், ‘வழுக்கு நிலம்’, ‘நனவோட்டங்கள்’ என்னும் நாவல்களும் பல்கலைக் கழகப்பாடநூல்களாக அவ்வப்பொழுது வைக்கப்பட்டு வருகின்றன; எழுத்து, அவர் தொடர் பணியாய் இருந்துவருகிறது. 1991 முதல் கம்பராமாயணம், மகாபாரதம், சீவக சிந்தாமணி முதலிய காவியங்கள் உரைநடையாக்கம் பெற்றன.