இந்திய துணைக்கண்டத்தில், புராணங்களில் இது போன்றதொரு நட்பு வேறெங்கும் விவரிக்கப்பட்டதில்லை. கர்ணன் துரியனின் நட்பு செஞ்சோற்று கடனால் ஏற்பட்டதன்று. இந்த நட்பு அதிகம் போற்றப்படாமல் போய் விட்டது. இருவரும் அதிர்ஷ்டமில்லாதவர்கள். கர்ணனின் ஆற்றலும், துரியனின் அன்பான குணமும் கடைசிவரை பாராட்டு பெறாமல் போய்விட்டன.
துரியோதனனும் கர்ணனும் தத்தமது நட்பையே தர்மமாய் கொண்டவர்கள்.
கர்ணனில்லா துரியனை கற்பனை செய்து பார்ப்பதும் கொடூரமாய் உள்ளது !
தான் தானம் செய்ய முதல் விதையென துரியனையே கைக்காட்டுகிறான் கர்ணன். அன்று பெரும் அரங்கில் அதிரதன் தன்னை பெருமையோடு "கர்ணா" என்று ஆரத்தழுவிய நேரத்தில் "இவன் தேரோட்டியின் மகனா" என்று ஏற்பட்ட சலனத்திற்கு இடையே கர்ணனை ஆதரித்தவன் துரியனாவான். கர்ணனுக்கு அங்க தேசத்தை தானமளித்து பெரும் அரசியல் சிக்கலுள் சிக்கினான். அணிகள் உருவாயின. நிர்ணயிக்கப்பட்டது குருஷேத்திரத்திர்க்கான களம்.
பானுமதியோடு கர்ணன் சொக்கட்டான் ஆடுகையில், துரியனை கண்ட பானுமதி மரியாதை செலுத்த எழுந்து திரும்ப, தோல்வியை மறைக்க அவள் செல்வதாய் எண்ணி பானுமதியின் மார்பை மறைத்திருந்த முத்துச்சரத்தை கர்ணன் வெடுக்கென பிடித்திழுக்க, அது அறுந்து முத்துக்கள் சிதற, எதேச்சையாய் உள்நுழைந்தும் "எடுக்கவா கோர்க்கவா ?" என்று இருவர் மேலும் நம்பிக்கையை வெளிப்படுத்தியவன் துரியன்.
மரணம் தன்னை நெருங்கும் என்னும் நிலையிலும் ஒருவர் மற்றவரை விடவில்லை.
நூறு சகோதரர்களும் மடிவர் என்று தெரிந்தும் கர்ணனின் சொல் கேட்டு போரில் இறங்கினான் துரியன்.
பாண்டவர்கள் சகோதரர்கள் என்றறிந்தும், தான் மடிய போவது சாஸ்வதம் என்று அறிந்தும் சேனையை வழி நடத்தினான் கர்ணன்.
கர்ணனின் கணைகள் துரியனுக்காகவே அம்பிலிருந்து புறப்பட்டன.
துரியனின் சேனையில் அவனுக்காக போரிட்ட ஒரே வீரன் என்று கர்ணனை மட்டுமே காட்ட முடியும்.
பூமி தாயோடு சூரியன் கொண்ட நட்பே உயிர்களுக்கு பிரதானம். கர்ணனும் நட்பில் சோரம் போகவில்லை. "செஞ்சோற்று கடன்" என்ற சொற்தொடர்கள் கர்ணனையே வாழ்வுள்ளவரை நினைவுக்கூற வைக்கும் ! _/\_