எங்கும் எப்போதும் படியுங்கள், உங்கள் இலவச Kindle app இல்.
அரசர் காலத்து நாவல்கள் என்றாலே சோழ மன்னர்கள் அல்லது பாண்டிய மன்னர்கள் பற்றிய கதைகளே என்றாகிவிட்ட நிலையில், தஞ்சாவூர் நாயக்க மன்னர்களைப் பற்றிப் பேசுகிறது இந்நாவல். உண்மைச் சம்பவங்கள் எல்லாம் அழகான கற்பனைகள் மூலம் இணைக்கப்பட்டுள்ளன. மனத்தை வருடும் எளிமையான மொழியில் அழகாகப் புனையப்பட்டுள்ளது இந்நவீனம்.கிருஷ்ணதேவ ராயரின் பேரரான அச்சுத ராயர் காலத்தில் நடக்கும் இந்த நவீனம், தஞ்சைப் பெரிய கோவிலில் செவ்வப்ப நாயக்கரால் நந்தி நிறுவப்படும் வரை, மிக அழகாகப் புனையப்பட்டுள்ளது. இன்று தஞ்சைப் பெருவுடையார் கோவிலில் நாம் காணும் பெரிய நந்திக்குப் பின்னே உள்ள கதை நம்மைச் சிலிர்க்க வைக்கிறது.
தமிழ்நாட்டில் முகமதியர்களின் ஆட்சி தொடங்கிய நேரத்தில் தனிப்பெரும்பான்மையில் ஆண்ட மூன்று சாம்ராஜ்ஜியங்களும் அடையாளம் தெரியாமல் அழிந்தொழிந்து போனது. இரு சகோதர்களால் உருவான விஜயநகர சாம்ராஜ்ஜியம் வளரத் தொடங்கியவுடன் முகமதியர்களின் கொடும் ஆட்சிமுறை முடிவுக்கு வந்துவிடுகிறது.
நல்லவனை விட வல்லவனுக்குத் தான் அரியணையில் அமரும் தகுதியும் அதைக் காப்பாற்றும் பொறுப்பும் அதிகம் இருக்கிறது.
விஜய நகர சாம்ராஜ்ஜியம் என்று சொன்னாலே கிருஷ்ண தேவராயர் பெயர் தான் நம் நினைவில் எழும். அவரின் பேரனான அச்சுத தேவராயர் காலகட்டத்தின் பின்னணியில் இந்த ‘நந்தி நாயகன்’ நாவல் எழுதப்பட்டிருக்கிறது.
தஞ்சை பெரிய கோவிலை கட்டிய சோழர்களின் புகழ் என்றென்றும் நிலைத்திருப்பது போல, அப்பிரமாண்ட நாயகனுக்கு வாகனமான நந்தியையும் அதற்கேற்ப பிரமாண்டமாக வார்த்தெடுத்ததும், சரஸ்வதி மகாலை நிறுவியருமான செவ்வப்ப நாயக்கரை பற்றியது தான் இந்த நாவல்.
நந்தி நாயகனான செவ்வப்ப நாயக்கரை முதன்மைபடுத்தியதால் அரசாலும் அச்சுத தேவராயரின் புகழ்மாலைகள் எங்கேயும் நுழைக்காமல் அதன் போக்கிலே சரித்திர நிகழ்வுகள் சொல்லப்பட்டிருக்கிறது.
பிற்காலத்தில் செவ்வப்ப நாயக்கருக்கு மந்திரியாக இருக்கும் கோவிந்த தீட்சிதர் முதன் முதலில் நாயக்கரை சந்திக்கும் நிகழ்வுகளிலிருந்து தொடங்குகிறது.
உள்ளுக்குள் இருக்கும் பேராசை உறவுகளாலே விஜயநகர சாம்ராஜ்ஜியம் பலவீனப்படுத்துகிறது என்பது மன்னனுக்குத் தெரிந்தாலும் அவர்களைக் கையாளத் தெரியாமல் உறவின் உணர்வு கட்டிப்போடுகிறது. கேரளமும் போர் தொடுக்கப் போகிறது என்ற செய்தி மேலும் பலவீனத்தையே கொண்டுவருகிறது.
காளிங்க ராயர் ஆட்களால் தாக்கப்பட்டு உயிருக்கு போராடிய செவ்வப்ப நாயக்கரை காப்பாற்றிய கோவிந்த தீட்சிதர் அவனுக்கு மட்டும் உறுதுணையாகயில்லாமல் அவனின் வம்சத்திற்கே தன் காலம் முழுவதும் மந்திரியாக இருந்து நல்லாட்சி நடத்த பக்கபலமாக இருந்திருக்கிறார்.
உள்நாட்டுக் குழப்பத்தைச் சமாளிக்க நாயக்கதானத்தை அச்சுத தேவராயர் மூன்றாகப் பிரித்தளிக்கிறார். அதில் தஞ்சையிலிருந்து திருவண்ணாமலை வரை செவ்வப்ப நாயக்கரின் வசம் வருகிறது.
சாதாரண வீரன் ஒருவன் நல்லாட்சி வழங்கும் இடத்தில் அமர்வதற்கு எதிர்கொண்ட சம்பவங்களையும், அவனின் சாதூர்யத்தையும், இன்னல்களின் நெருக்கடிகளையும் விவரிக்கிறது.
சிதம்பர கோவிலில் தானொரு தீட்சிதர் என்று சிவனே சொல்லி இருப்பதாக அந்தப் புனிதத்தைப் பற்றி இதில் எழுதப்பட்டிருப்பதைப் படிக்கும் போது சமீபத்தில் கோவிலை “பிரமாண்ட கல்யாண மண்டபமாக்கிய” சம்பவம் தான் நினைவில் வந்து போகிறது.
மிகப் பெரிய நந்தியை ஆண்டவனுக்கு முன் சமர்பிக்க எழும் எண்ணத்தைப் பற்றிக்கொண்ட செவ்வப்ப நாயக்கருக்கு அதற்கான பூர்வாங்க வேலையான கல்லை தேடி அலையும் கஷ்டம் கூட இல்லை. அனைத்தும் அவரின் விருப்பப்படியே நடந்தேறுகிறது.