சிந்தனையாளராக, அவர் தமிழ் மண்ணில் தனித்துத் தன் பாதையில் செல்பவராக இருந்தார். அவருடைய புரட்சிகரமான, வழக்கத்துக்கு மாறான கருத்துக்களுக்களை மற்றவர்கள் எப்படி எதிர்கொண்டார்கள் என்பது பற்றி அவர் கவலைப்பட்டவரில்லை. அவர் கருத்துக்களைச் சொல்ல அவர் கையாண்ட தமிழ் நடை, சின்னச் சின்ன அலங்காரமற்ற, எதையும் நேராக மனத்தில் உடனே பதிய வைக்கும் எளிய ஆனால் சக்தி வாய்ந்த நடை. சீண்டி விடப்பட்ட முள்ளம்பன்றி தன் உடல் சிலுப்பி முட்களை விரித்துத் தாக்கத் தயாராவது போலத்தான், வ.ரா. வின் சொற்கள் அம்புகளாகப் பாயும். அவர் எழுத்துக்களைப் பற்றிச் சொன்ன இந்த குணச்சித்திரம் வ.ரா. என்ற மனிதரைப் பற்றிச் சொன்னதாக எடுத்துக் கொண்டாலும் அதில் தவறு ஏதும் இராது.