கடல்புரத்தில்
ஆசிரியர் - வண்ணநிலவன்
நாவல்(1977)
127 பக்கங்கள்
காலச்சுவடு பதிப்பகம்
எனக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர்களுள் ஒருவர் வண்ணநிலவன். அவர் மீது ஒரு இனம் புரியாத வாஞ்சை உண்டு. குழந்தை முகம் அவருக்கு. வெகுளி சிரிப்பு. பெரும்பாலும் சிறுகதை��ளில் பயணிக்கும் அவர், எழுதிய ஒரு சில நாவல்களுள் மிக சிறந்த ஒன்று தான் இந்த கடல்புரத்தில் நாவல். பக்கங்கள் அளவில் மிக சிறிதாக இருந்தாலும் இந்த புத்தகம் கொண்ட கதை மிக கணமான ஒன்று.
கடல் - இது ஒரு மந்திரச்சொல். கடல் என்று சொன்னாலோ, எழுதினாலோ, உடனே கடல் நீர் என் கால்களையும், மனதையும், நினைவுகளையும் சேர்த்து நனைத்து விடுகிறது. கடல் இன்னும் எத்தனை வருடங்களுக்கு எத்தனை எழுத்தாளர்களுக்கு இந்த உலகில் தனக்குள் மூழ்கிப்போன கதைகளை கொடுத்துக்கொண்டே இருக்கும் என்று தெரியவில்லை. அளவில்லாமல் அள்ளி அள்ளி கொடுத்தும் அலுத்து போகாதவள் கடல். இந்த உலகையே தன் நெஞ்சுக்கூட்டிற்குள் அரவனைத்து வைத்திருக்கும் பேரன்பு மிக்க தாய் கடல். அந்த கடல் தாயின் பிள்ளைகளை பற்றியும், அவர்களின் வாழ்க்கை முறை பற்றியுமான கதையே இந்த கடல்புரத்தில் நாவல்.
மணப்பாடு என்ற கடற்கரை கிராமத்தில் வசிக்கும் குருசு - மரியம்மாள் என்ற மீனவ குடும்பத்தில் ஒரு ஆண் ( செபாஸ்டி), இரண்டு பெண் ( அமலோற்பவம், பிலோமி ) மக்கள். செபாஸ்டி திருமணமாகி வேப்பங்காட்டிலும், அமலோற்பவம் மணம் முடித்து உவரியிலும் வசித்து வருகின்றனர். பிலோமி தன் பெற்றோருடன் திருமணத்தை எதிர்நோக்கி வாழ்ந்து வருகிறாள். பிலோமி அதே ஊரில் சாமிதாஸ் என்ற லாஞ்சு முதலாளி மகனை காதலிக்கிறாள். இந்த சூழ்நிலையில் செபாஸ்டி தன் தொழில் விருத்திக்காக தன் தந்தையின் வல்லத்தையும், சொந்த வீட்டையும் விற்று விட்டு அந்த பணத்தை தனக்கு கொடுக்குமாறும், பெற்றோரை தன்னோடு தன் ஊருக்கு வந்து வாழுமாறு வற்புறுத்தி சண்டை போடுகிறான். ஆனால் வம்சாவழியாக வல்லம் வைத்து மீன்பிடி தொழில் புரியும் குருசு இதற்கு மறுக்கிறார். இதன் நடுவே லாஞ்சுகாரர்களுக்கும், வல்லத்துகாரர்களுக்கும் அவ்வப்போது வாய்ச்சண்டையும், கைகலப்பும் நடைபெற அதனை ஊர் பெரியவரான பவுலு பாட்டா சமரசம் செய்கிறார். சில நாட்களில் அடுத்து அடுத்து பல அதிர்ச்சிகரமான சம்பவங்கள் மணப்பாட்டு கிராமத���தில் நிகழ்ந்து விடுகிறது. பிலோமியின் தாய் மரியம்மாள் இறந்து விடுகிறாள், ஒரு லாஞ்சு காரன் கொல்லப்படுகிறான், பிலோமி சாமிதாஸால் ஏமாற்ற படுகிறாள், குருசு தன் உயிரேன மதித்த வல்லத்தையும், வீட்டையும் விற்று விடுகிறான், குருசு புத்தி பேதலித்து நடைபிணமாகிறான், பிலோமி சொந்தம் இருந்தும் அனாதையாகிறாள். இறுதியில் பிலோமி என்ன ஆனாள், குருசு என்ன ஆனான், வல்லத்துக்காரர்களின் நிலை என்ன? என்பதின் முடிவுகளே இக்கதையின் முடிவு.
இக்கதையில் மூன்று கதை மாந்தர்களை பற்றி மட்டும் நான் கூற விரும்புகிறேன். பிலோமி, வாத்தியார் மற்றும் பவுலு பாட்டா
பிலோமி - ஒரு விவரம் அறியா பதின் பருவ பெண்ணாக கதையின் தொடக்கத்தில் இருக்கும் பிலோமி கதை முடியும் தருவாயில் சிதிலமடைந்த சிற்பம் பல நூறு ஆண்டுகள் அந்த கடலையே எதிர்த்து நிற்பது போல இந்த கதையின் மிகவும் நம்பிக்கையும்,வாழ்க்கை பற்றும் கொண்டவளாக தன்னை தானே உருமாற்றி கொள்கிறாள்.மரப்பசு அம்மணி, மோகமுள் யமுனா, ஜெயகாந்தனின் கங்கா வரிசையில் நிச்சயம் பிலோமிக்கும் நம் தமிழ் இலக்கியத்தில் மறுக்கமுடியா ஒரு இடம் உண்டு
வாத்தியார் - நம் வாழ்வில் சில உறவுகளுக்கு பெயரில்லை. நம்மால் அதற்கு ஒரு பெயர் சூட்டவும் முடியாது. யாரிடமும் அந்த உறவை புரியவைக்கவும் முடியாது. நமக்கும் அந்த உறவுக்காரருக்கும் மட்டுமே அந்த உறவின் அர்த்தம் புரியும். அப்படி ஒரு உறவு தான் மாரியம்மை - வாத்தியார் உறவு, பிலோமி - வாத்தியார் உறவு. அம்மாவையும் அவர் புரிந்து கொண்டார், அவரை வசைபாடிய அவள் பெற்ற பிள்ளையையும் அவர் புரிந்து கொண்டார். ஒரே வரியில் வண்ணநிலவன் அந்த உறவை விவரித்து விடுகிறார்." குருசுக்கு என்றைக்குமே என் மேல் கோபம் இருந்ததில்லை "
பவுலு பாட்டா - கதையில் மூன்று அல்லது நான்கு இடங்களில் மட்டுமே இவர் வந்தாலும். என் மனதிற்குள் ஏனோ இவர் நிரந்தரமாக இடம் பிடித்து விட்டார். லாஞ்சுகாரர்களை தடுக்கும்போதும், கடற்கரையில் நடக்கும் கலகத்தை தடுக்கும்போதும், பறையர்களை வாஞ்சையோடு அணுகும்போதும், குருசு தன் வீட்டை விற்று விட்டு திரும்பும்போது அவனை கோபிக்கும் போதும் அவர் கூறுவது ஒரே வரிதான் " போங்கலே போங்க. ஒங்கள்ல எவனுக்கும் கடல் மேலே, செய்யுற தொழில் மேல நம்பிக்கே கெடையாது. நீங்க கடலுக்கு விசுவாசமா இருந்தா அது ஒங்கள வாழத்தானலே வக்யும்.... "
இந்த வரிகள், இந்த கிழவன்,இந்த புலம்பல், இந்த நடுக்கம் நிறைந்த அரைக்கூவலை எங்கோ நான் கேட்டிருக்கிறேன்? இந்த கிழவன் வேறு யாரும் அல்ல, கிழவனும் கடலும் கதையில் வரும் அந்த கிழவன் சாந்தியாகோ வே தான். இது தான் இலக்கியத்தின் அருமை. எங்கோ உலகின் மூலையில் எழுதப்பட்ட ஒரு கதையில் வரும் ஒரு கிழவனும் இங்கு நம் தமிழகத்தில் தென் கோடியில் கடற்கரை கிராமமான மணப்பாட்டில் வசிக்கும் கிழவனும் ஒரே கருத்தை தான் கூறுகின்றனர். அந்த இரண்டு கிழவர்களும் வேறு வேறு காலகட்டத்தில் வேறு வேறு நிலப்பரப்பில் வாழ்ந்தாலும் அவர்கள் எண்ணமும், நம்பிக்கையும் ஒன்றுதான். அதனை பதிவு செய்தவன் ஒரு எழுத்தாளன் தான். இதுதான் ஒரு எழுத்தின் வீரியம், ஒரு எழுத்தாளனின் மூன்றாம் கண்.
நெய்தல் நில கதைகளில் ஒழுக்கம் இருக்காதுதான், அதீத கோபம் இருக்கும்தான், கொலைகள் கூட நடக்கலாம், பேசும் மொழியிலும், வீசும் காற்றிலும் சற்று நாற்றம் இருக்கும்தான், வஞ்சம் - ஏமாற்றுதல் - பழி - பாவம் - பொறாமை - போட்டி எல்லாம் இருக்கும் தான். உடம்பு இறுகி, கைகள் காப்பு காய்ச்சி, உடைகள் அழுக்கேரி, உருவம் கறுத்து இருந்தாலும் உள்ளம் மட்டும் எப்பொழுதும் அந்த கடலை போலவே அகண்டு பரந்து விரிந்து இருக்கும். இவர்களை பார்த்து நான் பொறாமை கொள்வது இவர்களால் மட்டும் வாழ்க்கையை எப்படி இவ்வளவு சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடிகிறது? பிறப்பு இறப்பு இரண்டையும் இவர்கள் எப்படி வாழ்க்கை தராசில் ஒரே அளவில் நிறுத்தி பார்க்கின்றனர்? கடந்து போவதுதான் வாழ்க்கை என்பதை எந்த ஒரு தயக்கமும் இன்றி எப்படி இவர்களால் ஏற்றுக்கொள்ள முடிகிறது? என் மனதிற்குள் எழும் இத்தனை கேள்விகளுக்கும் அவர்களிடம் இருக்கும் ஒரே பதில் அவர்கள் கடல் அன்னையின் பிள்ளைகள்.
-- இர. மௌலிதரன்.