பெண்குழந்தைகளை அதன் பாலியத்தைக் கூட அனுபவிக்க விடாமல் தங்களின் காமத்திற்கு வடிகாலாக அவர்களை உபயோகப்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே தான் போகிறது.பொத்தி பாதுகாக்கப்படும் குடும்பத்திற்குள்ளேயே குழந்தைகளுக்குப் பாதுகாப்பு இல்லையெனும் போது ஆசிரமத்தில் வளரும் பிள்ளைகளுக்கு எங்கனம் பாதுகாப்பை எதிர்பார்ப்பது.
ஆசிரமத்தில் வளரும் நேத்ரா பனிரெண்டு வயதில் அங்கே இருக்கும் நிர்வாகியின் உதவியால் பாலியல் தொல்லைக்கு ஆளானவள் உடனடியாகத் தன் தங்கையாக எண்ணிய காயத்ரியுடன் அங்கிருந்து வெளியேறி கிடைத்த வேலையெல்லாம் செய்து நேத்ரா நர்சரிக்கு உரிமையாளராகிறாள்.
காயத்ரியை பார்த்தவுடனே காதலில் விழும் இந்திரனுக்கு அவளுடனான திருமணம் நடைபெற வேண்டும் என்றால் அண்ணன் மித்ரன் திருமணமும் நடக்க வேண்டும் என்ற சூழலை உண்டாக்கிவிடுகிறான்.ஏற்கனவே மித்ரன் நேத்ராவை பார்த்து இருந்தாலும் அவளின் கடந்த காலத்தைக் கேள்விபட்டு அதை விபத்தாக ஒதுக்கி விட்டு மணந்து கொள்கிறான்.
ஆண்களையே வெறுத்து மனிதர்களிடம் இருந்து ஒதுங்கி தனியாக வாழும் நேத்ராவை தங்கை திருமணம் என்ற கட்டாயத்தில் நிறுத்தி மணந்து கொண்ட மித்ரனை நண்பனாகப் பழகி அவன் மூலம் மனதில் இருந்த கசப்புகளை வெளியேற்றிய பிறகே காதல் மனைவியாக முடிகிறது.தன் பொறுமையான குணத்தால் நேத்ராவின் இதயத்தில் காதல் உணர்வை உண்டாக்குகிறான் இதயச் சிகிச்சை செய்யும் நிபுணனான மித்ரன்.