க.நா.சு எனப்படும் கந்தாடை நாராயணசாமி சுப்ரமணியம் தஞ்சை வலங்கைமானில் பிறந்தவர். எழுத்தாளராக வாழ்வது என்ற முடிவை இளம் வயதிலேயே தேர்ந்துகொண்டு வாசிப்பிலும் எழுத்திலும் நிறைவடைந்தார்.
க.நா.சு படைப்புகளில் சர்மாவின் உயில், வாழ்ந்தவர் கெட்டால், ஒருநாள், பொய்த் தேவு, அசுரகணம் முதலான பல நூல்கள் முக்கியமானவை. தமிழ் இலக்கியம் உலக இலக்கியத்திற்கு நிகராக நிற்க வேண்டும் என்ற கவலையில், தமிழின் மிகச்சிறந்த ஆக்கங்களை ஆங்கிலத்திலும், பல உலக இலக்கியங்களைத் தமிழுக்கும் மொழியாக்கம் செய்தார்.
சிறுகதை, நாவல், கவிதை, கட்டுரை மொழிபெயர்ப்பு, விமர்சனம் முதலான பல துறைகளிலும் தரமாக இயங்கிய க.நா.சு தன் காலத்திற்கு மேலான பல பரிசோதனை முயற்சிகளைச் செய்திருக்கிறார். ராமபாணம், இலக்கிய வட்டம், சூறாவளி, முன்றில், Lipi - Literary Magazine போன்ற சிற்றிதழ்களை நடத்தினார்.
நவீன இலக்கிய முயற்சிகளுக்கான சங்கமாகச் செயல்பட்ட மணிக்கொடியின் முக்கிய அங்கத்தினர் இவர். 1986ஆம் ஆண்டு அவரது “இலக்கியத்துக்கு ஒரு இயக்கம்” என்ற இலக்கியத் திறனாய்வு நூலுக்கு சாகித்ய அகாடமி பரிசு பெற்றார். தமிழக அரசின் விருது, குமாரன் ஆசான் விருது போன்றவற்றால் கௌரவிக்கப்பட்டார்.
1988ஆம் ஆண்டு டிசம்பர் 16ஆம் தேதி டெல்லியில் மறைந்தார். 2006ம் ஆண்டு அவரது நூல்களை தமிழ்நாடு அரசு நாட்டுடமையாக்கியது. தமிழ் எழுத்தாளர் மற்றும் நாடக நடிகரான பாரதி மணி க.நா.சு வின் மருமகன்.
க. நா. சுப்பிரமண்யம் என்பவன் ஓர் இலக்கிய விமர்சகன் என்ற பொது வழமை தமிழ் இலக்கிய சூழலில் இருக்கிறது. அவரின் மற்ற படைப்பான நாவல்கள் சிறுகதைகள் மொழிபெயர்ப்புகள் இவை எல்லாவற்றையும் ஓரம் தள்ளி வைத்துவிட்டு அவர் இலக்கியத்தின் பால் வைத்த விமர்சனமும் மதிப்புறையும் ஓங்கி நிற்கிறது. இதனாலோ என்னவோ இந்நூலிற்காக அவருக்கு சாகித்திய அகடமி விருது கிடைத்தது. ஆனால் என்னை பொருத்தவரை க. நா. சு. வினுடைய புனைவுகளின் பால் பெரிய மதிப்புள்ளது, ஏனெனில் அவரின் ஓரிரு நாவல்களை நான் வாசித்து உள்ளேன் அதனால் ஏற்பட்ட மதிப்பு தான அவை.
இந்நூலில் இலக்கியம் சம்பந்தமான பல கட்டுரைகளை மிகவும் தெள்ளத் தெளிவாக விளக்கி எழுதியிருந்தார். நாம் இந்நூலை வாசித்து முடித்தால் நமக்கும் ஓரளவுக்கு எதுவெல்லாம் இலக்கியம் என்ற அறிவு வளர்ந்திருந்தால் ஆச்சரியம் ஏதுமில்லை.
அது மட்டும் இல்லாமல் ஒரு படைப்பிற்கு விமர்சனம் என்பது எவ்வளவு முக்கியமாக இருக்கிற என்றும், விமர்சனமும் இலக்கியத்தின் ஓர் அங்கம் என்பதே உணர வேண்டும். அதுவும் ஒரு வகையான கலை சிருஷ்டி தான் என பல உதாரணங்களை முன்வைத்து தெளிவுபடுத்தி இருப்பார். இங்கு விமர்சனம் என்ற பெயரில் பலர் எழுதுவது அந்த படைப்பிற்கான மதிப்புரியை இன்றி தெளிவான விமர்சனம் இல்லை என்று அவர் விளக்கிய போது எனக்கும் அப்படித்தான் தோன்றியது.
பல தமிழ் எழுத்தாளர்களை இந்நூலின் மூலமாக அறியக்கூடும்.
கம்பனை நாம் உலக அரங்கில் பிரபலம்படுத்த தவறி விட்டோம் என்றும் உலகத்திலேயே சிறந்த காவியத்தை படைத்தவர்களின் பட்டியலில் டான்ட்டே விற்கு பிறகு நான் கம்பனைத்தான் பார்க்கிறேன், சில சமயங்களில் டான்ட்டேவை விட கம்பன் உயர்ந்து நிற்கிறான் எனத் தோன்றுகிறது என்று கூறியிருப்பார்.
அதேபோலத்தான் பாரதியையும் நாம் கொண்டாட தவறி விட்டோம், பாரதி தான் நவீன தமிழ் தொடக்கத்தின் உச்சம் என சிலாகித்துக் கூறியுள்ளார். அதுவே தான் பலரும் இன்று வரை கூறுகின்றனர்.
கலையை மையமாக வைத்து ஒரு நாடகமும் இந்நூலில் இருந்தது, ஒரு கலை படைப்பை எப்படி எல்லாம் interpretation பண்ணலாம் என பல வாக்குவாதங்களை உரையாடல்களாக தெள்ளத் தெளிவான விளக்கங்களோடு அந்நாடகம் இயற்றப்பட்டிருந்தது.
சேக்ஸ்பியர் பற்றிய கட்டுரையில், அவரின் புலமைப்பற்றியும் அவர் செய்த ஒரு சில தவறுகளையும் அருமையாக தெளிவுபடுத்திருப்பார். அவர் ஏன் எல்லாவற்றையும் நாடகமாகவே பார்த்தார் அவரின் ஒரு சில நாடகங்களை நாவலாக எழுதி இருந்தால் இன்னும் செழுமை பெற்றிருக்கும் என்பதே அவரின் கூற்றாக இருந்தது.