ஏதேன் தோட்டத்து ஆப்பிளைப் புசிப்பதற்கு முந்தைய கணங்களில் ஆதாமும் ஏவாளும் தம் நிர்வாணம் பற்றிய ப்ரக்ஞையற்று இருந்தனர். மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி தன் ஆயுளின் இறுதியாண்டுகளில் சர்ச்சைக்குரிய பிரம்மச்சரியப் பரிசோதனைகளின் வழி அடைய முயன்றது காமம் துறந்த அந்நிலையைத்தான். உடலை முன்வைத்த அப்பரிசோதனைகளை காந்தி, அதில் பங்கு கொண்ட பெண்டிர் மற்றும் சுற்றத்தார் மனதுள் நின்று முக்கோணத்தில் பார்க்க முயல்கிறது இப்புனைவுப் பிரதி. ஒருவகையில் இதில் காந்தி மேலும் பொலிவுடன் மகாத்மாவாய்த் துலங்குகிறார்.
C. Saravanakarthikeyan (Tamil: சி. சரவணகார்த்திகேயன்) (born 13 August 1984), known as CSK is a Tamil writer. He entered the field in 2007 and published 6 books to date. His writings appeared in many top Tamil magazines – both print and electronic media. His works include poems, short-stories, essays, reviews and translations. He got Tamil Nadu State Government's Award for Best Book (2009) and Kungumam Magazine's Prize for Best Poem (2007). He is a software engineer by profession and is now living in Bangalore.
பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை, முற்போக்காளர்களிலிருந்து பிற்போக்காளர்கள் வரை, காந்தியவாதிகளும் கோட்ஸேக்களும், ஆன்மீகவாதிகளும் நாத்திகவாதிகளும் என எவ்வித வேற்றுமையுமின்றி அனைத்துத் தரப்பினராலும் நேர்மறையாகக் கூவி கூவி கொண்டாடப்பட்ட, எதிர்மறையாகப் பேசி பேசி விமர்சிக்கப்பட்ட, இன்னும் கூட தன்னைப் பற்றி பேச வைக்கக்கூடிய ஒரு மனிதர் உண்டு என்றால் அவர் மகாத்மா என்று அழைக்கப்படும் காந்திஜி மட்டுமே.
பொதுவாக நாம் ஏன் ஒருவரை கொண்டாடுகிறோம்..? பின் எதற்காக அவரை விமர்சிக்கிறோம்..? சில சமயங்களில் தூக்கியெறிந்தும் விடுகிறோம்..? கொஞ்சம் நம் சிந்தனையை அகழ்ந்து பார்த்தோமானால், அதன் காரணம் நமக்கு தெளிவாகவே புரியும். நம்மிடம் இல்லாத ஒன்றோ அல்லது நம்மால் செய்ய இயலாத ஒன்றையோ அவர் செய்யும் போது, நாம் அறிந்த மனிதர்களிடமிருந்து தனித்து தெரியும் போது, என இவ்வகையான சூழல்களில் நமக்கு அவர் மீது ஒருவகை பிரமிப்பு ஏற்படுகிறது. அது, அவரைப் பற்றிய நேர்மறையான ஒரு பிம்பத்தை மனதில் விதைத்து விடுகிறது. நாளடைவில், அவரைப் பற்றிய இயல்புகள் தெரிய வரும் போது, அவற்றை ஏற்க இயலாமல், தவிக்கிறோம். பிரமிப்பின் இடத்தில் குழப்பங்களும் சஞ்சலங்களும் ஆக்ரமித்துக் கொள்கின்றன. பின், அவையே ஒரு தெளிவிற்கு வரும் போது ஒன்று வெறுத்து விடுகிறோம் அல்லது அதற்குக் காரணங்கள் தேடி மீண்டும் அப்பிம்பத்திற்குள்ளேயே சிக்கிக் கொள்ள விழைகிறோம்.
ஆக மொத்தம் ஒருவரை அவரது இயல்பான குணங்களோடு ஏற்றுக் கொள்ள மனித மனது எப்போதுமே மறுத்து வந்திருக்கிறது. ஏனெனில், ஒருவரின் இயல்பான குணங்கள், கொண்டாட்டத்திற்கு உரியவை அல்ல என்று நாம் நம்புகிறோம். அசாத்தியமான குணங்களே எப்போதும் கொண்டாட்டங்களுக்கு உரியவையாக இருக்கின்றன. ஆனால், இயல்பான குணங்கள் சாதாரண நிகழ்வுகளில் வெளிப்படும் போது தான் அவை அசாத்தியமாக வெளிப்படுகின்றன என்பதை நாம் சிந்திக்கத் தவறி விடுகிறோம்.
இப்படிப்பட்ட உளவியல் சிக்கலுக்குள் தான் நமது பெரும்பாலான தலைவர்கள் சிக்கிக் கொள்கிறார்கள். அதற்கு காந்திஜியும் விதிவிலக்கல்ல. இவ்வுலகில் காந்திஜி அளவிற்கு விமர்சிக்கப்பட்ட மனிதர் வேறு எவரும் இல்லை. ஆனால், இப்பிம்பங்களையெல்லாம் புறந்தள்ளி விட்டு தனது சத்தியசோதனையின் மூலம் இதுதான் நான் என்று, எவ்வித பாசாங்குகளுமின்றி, எவ்வகை சமரசங்களுமன்றி தன்னை வெளிப்படுத்திக் கொண்ட ஒரே மனிதரும் காந்திஜி மட்டுமே. அதற்கான மன தைரியமும் அவருக்கு மட்டுமே உரித்தான ஒன்று.
பிறரை அடக்கி ஆள்வது எவ்வளவு எளிதோ, அவ்வளவு கடினம் தன்னைத்தானே அடக்கி ஆள்வது. அதைத் தான் காந்திஜி தன்னுடைய வாழ்வின் எல்லா காலகட்டங்களிலும் கடைபிடித்து வந்திருக்கிறார். இத்தகைய தன்னாளுமை காட்டுவதும் அவரது துணிவையே. அதைத் தொடர்ந்த மற்றொரு துணிவான முயற்சியே அவரது பிரம்மச்சரிய பரிசோதனைகள். இதிலும் கூட காந்திஜியின் துணிவு நம்மை அதிசயப்படவும் கூடவே அச்சப்படவும் வைக்கிறது. துணிவின் உச்சம் என்றால், அது அவரது பிரம்மச்சரிய பரிசோதனைகளின் வெளிப்படைத்தன்மையே.
எல்லாவற்றையும் வெளிச்சம் போட்டுக் காட்டக்கூடிய இன்றைய காலத்திலும் கூட, பேச வேண்டிய அவசியம் இருந்தும், ஆனால் நாம் பேச மறுக்கும், தயங்கும் ஒன்று என்றால் அது காமமும் அது சார்ந்த உணர்வுகளும் மட்டுமே. வார்த்தைகளாகவும், உரையாடல்களாகவும், விவாதங்களாகவும் எளிதாகக் கடந்து செல்ல வேண்டிய பாலியல் உணர்வுகள் சீண்டல்களாகவும், வக்கிரங்களாகவும், வன்முறைகளாகவும், வடிகால்களாகவும் வரையறையற்றுப் பல்கிப் பெருகிக் கொண்டிருப்பதைக் கண்டும், இன்னும் நமக்கு அதைப் பற்றிய புரிதலோ, அதைப் பேசுவதற்கான துணிவோ வந்து விடவில்லை.
ஆனால், காந்திஜியோ இதில் நமக்கு முன்னோடியாகவே நிற்கிறார். காமம் என்ற வார்த்தையை மறைபொருளாகக் கூட எவரும் பேசுவதற்கு விரும்பாத ஒரு காலகட்டம் அவருடையது. எனில், காந்திஜியின் இத்தகைய துணிவை என்னவென்று வரையறுப்பது..? இவைகளெல்லாம் இணைந்து தான் காந்திஜியை மகாத்மாவாக நிலைநிறுத்தியிருக்கிறது.
காந்திஜியின் அந்திம காலத்தையும், அதில் அவர் செய்த பிரம்மச்சரிய பரிசோதனைகளுமான காலத்தை தனது களமாகக் கொண்டிருக்கிறது சி.சரவணகார்த்திகேயனின் “ஆப்பிளுக்கு முன்” எனும் நாவல்.
இது ஒரு வரலாற்றுப் புனைவு. ஆனால், வாசிக்கும் போது புனைவு என்பதே மறந்து விடுகிறது. அந்த அளவிற்கு வரலாற்றோடு அவரது புனைவு இரண்டறக் கலந்து நிற்கும் நேர்த்தியான எழுத்து நடையில் சரளமாக கொண்டு செல்கிறார்.
மிருதுளா எனும் மநு என்ற சிறுமி, ஜெய்சுக்லாலின் மகள். உடல்நிலை குன்றி இருக்கும் கஸ்தூர்பாவிற்கு உதவியாக ஆகா கான் அரண்மனை சிறைக்கு வருகிறாள். அவருக்கான அனைத்து பணிவிடைகளையும் செய்து, பாவிற்கு அணுக்கமானவளாகிறாள். சிறுமியாக இருந்தாலும் அவரைத் தாயாகத் தாங்குகிறாள்.
அப்போதே, காந்திஜி தனது பிரம்மச்சரிய பரிசோதனைகளை ஆரம்பித்திருந்தார். அதில் பாவிற்கு உடன்பாடு இல்லையென்றாலும், அவர் மறுத்து எதுவும் சொல்வதில்லை. அவர் மறுப்புக்கு அங்கு எந்த மதிப்பும் இருக்கப் போவதில்லை என்று நினைத்தாரோ என்னவோ மௌனம் சாதித்தார். அதைப் பற்றிய வதந்திகள் காற்றை விட வேகமாக ஆசிரமத்தில் பரவின. அதனைத் தடுக்கும் பொருட்டு காந்திஜியே தனது பரிசோதனைகள் பற்றிய உண்மையை அவர் வெளிப்படையாக எல்லோருக்கும் அறிவிக்கிறார். விளைவு, அவரது உண்மையின் குணம் அங்கு தூற்றப்பட்டு ஒருவகை அசூயை எல்லோர் மனதிலும் நிலைக்கிறது. ஆனால், அதைப் பற்றிய கவலை அவருக்கு இல்லை.
எவ்வளவுக்கெவ்வளவு தன்னுடைய பரிசோதனைகளில் அவர் தீவிரம் கொண்டிருந்தாரோ, அந்த அளவிற்கு பாவின் உடல்நிலை சீரற்றுப் போக, அவர் இறந்து விடுகிறார். அவரது இழப்பு காந்திஜியை தாக்கியதில் அவர் உடைந்து போகிறார். அவரது உடல்நிலை சீரற்று, பின் மெல்ல மெல்ல சீராகிறது. நாளடைவில் நடைமுறை வாழ்க்கைக்குத் திரும்புகிறார்.
மநு இப்போது காந்திஜிக்கு அணுக்கமாகிறாள். அவளது எல்லாவற்றிலும் காந்திஜியே பிரதானமாகிறார். கல்வி முதற்கொண்டு எல்லாவற்றையும் காந்திஜியே அவளுக்குக் கற்பிக்கிறார்.
இந்நிலையில் கல்வியின் பொருட்டு, அவள் காந்திஜியைப் பிரிந்து வேறு ஊரில் சில காலங்கள் வசிக்கிறாள். பின்பு, நாளடைவில் அவரிடமே வந்து சேர்கிறாள். அவரது காரியதரிசியாகவும் செவிலியாகவும் மநுவே இயங்கலானாள். முழுக்க முழுக்க அவளைச் சார்ந்தே காந்திஜியும் இயங்கத் தொடங்கினார். இறுதியாக, தனது பிரம்மச்சரிய பரிசோதனைகளிலும் மநுவையே ஈடுபடுத்த ஆரம்பித்தார். அவளும் அதற்கு முழுமனதாக தன்னை அர்ப்பணிக்கிறாள்.
அவரது பிரம்மச்சரிய பரிசோதனைகளின் உச்சமான, நிர்வாணமாக பெண்களுடன் ஒன்றாகக் குளிப்பது, நிர்வாணமாக அவர்களுடன் ஒரே படுக்கையைப் பகிர்ந்து கொள்வது என மேலும் மேலும் கடும் சச்சரவுகளை ஏற்படுத்துகிறது. அவரைப் பொறுத்த அளவில் அது ஒரு வேள்வி. மநுவிற்கு அப்பரிசோதனைகளைப் பற்றிய எந்த பிரக்ஞையும் இல்லை. அதனால் விமர்சனங்களும் இல்லை. ஆனால், இருவரைப் பற்றிய விமர்சனங்கள் அவளைப் பாதிக்கிறது.
மநுவிற்கு முன் இச்சோதனைகளில் பங்கு கொண்ட சுஷீலாபென், பிரபாவதி, சரளா தேவி, ஆபா, கஞ்ச்சன் போன்ற பதினோரு பெண்களும் அவள் மீது பொறாமை கொண்டு மேலு���் வதந்திகள் பரப்புகின்றனர். காந்திஜியின் சொல்படி அதனையும் மநு, புறம் தள்ளுகிறாள். இத்தகு நிலை ஆசிரமத்திற்குள்ளும் அரசியல் தலைவர்களுக்குள்ளும் கசப்பை விளைவிக்கிறது. கிருபாளனி, வினோபா பாவே, பட்டேல் ஆகிய தலைவர்கள், பிர்லா போன்ற நண்பர்கள், தேவ்தாஸ் என்கிற மகன், ஆசிரமத்தின் தொண்டர்கள் என அனைத்து புறத்திலும் கடுமையான எதிர்ப்பைப் பெறுகிறார். அதனால் அவரது பிடிவாதம் தளர்ந்தாலும், தொடர்ந்து தனது சோதனைகளை அவர் செய்து கொண்டேயிருக்கிறார்.
மநுவின் மனதில் காதல், திருமண ஆசைகளை பிறர் தூண்டுகின்றனர். ஆனால் அதனாலெல்லாம் அவள் இம்மியும் தளரவில்லை. ஆனால், காந்திஜியைப் பற்றிய அவதூறுகளினால் மனம் சஞ்சலமடைகிறாள்.
இறுதியாக தக்கர் பாபா வருகிறார். காந்திஜி மற்றும் மநு இருவரிடத்திலும் தனித்தனியாக உரையாடுகிறார். சில நேரங்களில் அது விவாதமாகவும் மாறுகிறது. காந்திஜியை விட, மநுவின் பதில்கள் அவருக்கு நம்பிக்கையை அளிக்க, அவள் மூலமாக காந்திஜியின் அச்சோதனை தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது.
இதன் பின்னரும் காந்திஜி தனது பரிசோதனைகளை தொடர்கிறார். ஆனால், இந்த முறை வெளிப்படைத்தன்மையை மறைத்து விடுகிறார். ஒருவகையில் அது இரகசியமாக நடக்கிறது, இறுதியாக அதில் வெற்றியும் அடைகிறார்.
காமத்தை வெல்கிறார், நாட்டுக்கு சுதந்திரம் கிடைக்கிறது, தனது உயிரையும் துறக்கிறார்.
சுதந்திரத்தை நோக்கிய தன்னுடைய செயல்பாடுகளில் எவ்வளவு தீவிரம் கொண்டிருந்தாரோ, அவ்வளவு தீவிரம் தன்னுடைய பிரம்மச்சரிய பரிசோதனைகளிலும் அவர் கொண்டிருந்தார். கூடுதலாக பிடிவாதமும் அதில் நிறைந்திருந்தது. அந்தப் பிடிவாதமே அவரது செயல்களில் வெற்றியைப் பெற்றுத் தருகிறது. ஆயினும் அதுவே அவரது பலவீனமாகவும் சுட்டப்படுகிறது. தன்னைத்தானே ஆள்வது அவரது பலமெனில், பிறரையும் ஆட்டுவிக்கும் மிகச் சராசரியான குணத்தையும் கொண்டிருப்பது அவரது பலவீனமாகக் கூறலாம். அதை இந்நாவல் மிக ஆணித்தரமாக சுட்டுகிறது.
காமம் என்பது உடலின் உணர்ச்சியா..? மனதின் உணர்வா..? அல்லது இரண்டும் கலந்த பிறிதொன்றின் வெளிப்பாடா..? இவற்றில் எதனை காமம் என்று பிரித்தெடுப்பது..? அப்படிப் பிரித்தறிதல் சாத்தியமா..? அவ்வாறு பிரித்தறிந்து விடில் அதனை வெல்வதும் சாத்தியமே. உடலின் நிர்வாணமே காம இச்சையின் முதல் நிலை. அந்த நிர்வாணம் எப்போது நம்மை சலனப்படுத்தவில்லையோ அல்லது உறுத்தவில்லையோ அப்போது நாம் காமத்தை வென்றவராகிவிடுகிறோம், என்பதன் அடிப்படையிலேயே காந்திஜி தனது பிரம்மச்சரிய பரிசோதனைகளை மேற்கொண்டு வெற்றி காண்கிறார்.
எந்த ஒன்றையும் உணர்வுப் பூர்வமாக அணுகும் போது அதன் நிறை குறைகள் நமக்குத் தெரிவதில்லை. மாறாக, உணர்வுகளுக்கு இடம் கொடாமல் நாம் அதனை ஆராய்ச்சிக்கு உட்படுத்தும் போது அதன் உண்மைத்தன்மையான நேர், எதிர் நிலைகள் நமக்கு புரியும். அப்படித்தான் காந்திஜியும் காமத்தை அணுகுகிறார். காமம் உணரப்படும் போது, அதில் தோய்ந்து முழுகவே உந்தித் தள்ளும். எனில், அதை நம்மால் வெல்ல இயலாது. ஆனால், அதை ஆராய்ச்சி நிலையில் வைத்து அணுகினால், அதன் பால் இருக்கும் நமது உணர்வுகள் மாறுபடும். அப்படித்தான் காந்திஜியும் காமத்தை வெல்கிறார்.
இதில் முக்கியமாக சொல்லப்பட வேண்டிய கதாபாத்திரம், மநு. அவள் ஒரு இடத்தில், “காந்திஜியின் இவ்வேள்வியில் நான் ஒரு செயப்படு பொருள்” எனக் கூறுவாள். ஆரம்பத்தில், காந்திஜியிடம் அவரது பிரம்மச்சரிய பரிசோதனை கஸ்தூரிபாவிற்கு திணிக்கப்பட்ட ஒன்றல்லவா..? என்று கேட்கும் துணிவு அவளிடம் இருப்பதையும் கூறுகிறது. ஆனால், உண்மையில் நாவல் முழுக்க அவள் செயப்படு பொருளாகவே வருகிறாள். அவளுக்கென பிரத்தியேகக் குணங்களோ, கோபங்களோ, கருத்துக்களோ என எதுவும் இருப்பதாக நாவல் கூறவில்லை. முழுக்க முழுக்க காந்திஜியின் கைப்பாவை ஆகிறாள் மநு, இல்லையில்லை மனப்பாவை என்று கூறினால் சரியாக பொருந்தும். அந்த அளவிற்கு அவரது மனதின் சிந்தனைகளுக்கு எல்லாம் செயல் வடிவமாகிறாள் மநு. அத்தகைய கதாபாத்திரம் எந்த அளவிற்கு நடைமுறையில் சாத்தியம் என்று தெரியவில்லை. ஆனால், காந்திஜியின் வேள்விக்கு மிக வலுவான பாத்திரம் இது மட்டுமே.
தக்கர் பாபாவினுடனான காந்திஜி – மநு இருவருடைய வாத விவாதங்கள் நமது சிந்தனைகளுக்கும் ஆராய்ச்சிகளுக்கும் தர்க்கங்களுக்கும் அருமையான விருந்து. மிக ஆழமாக அழுத்தமாக தெளிவாக செல்லும் விவாதம், அதே நேரம் எவரை நம்மால் மறுக்க முடியும்..? எனும் பிரமிப்பிற்கு ஆளாக நேரிடுகிறது. அந்த அளவிற்கு உரையாடல்களில் அறிவின் செறிவும் உணர்வுகளின் நெகிழ்வும் சமமாக பாவிக்கிறது.
வர்ணனைகள் இல்லாத புனைவில் இரசிப்புத்தன்மையின் அளவு எத்தனை சதவீதம் இருக்க முடியும்..? சிறு சிறு அத்தியாயங்கள். சின்ன சின்ன வாக்கியங்கள். அடுத்தடுத்த நிகழ்வுகள், வர்ணனைகள் பெரும்பாலும் இல்லை. இவையெல்லாம் இணைந்து இவ்வரலாற்றுப் புனைவை, வெறும் வரலாறாக மட்டுமே பார்க்க வைக்கிறது அதுவே இதில் பலமும் பலவீனமாகவும் இருக்கிறது.
“காமத்தை கிசுகிசுப்பது உலக வழக்கம். அதில் இந்தியர்கள் இன்னமும் பிரத்யேகம்” என்பது நாவலில் வரும் ஒரு வரி. ஆனால், ஆசிரியர் இந்தியராக இருந்தும் அதை கிசுகிசுக்கவில்லை. மிக விரிவாகவே அலசி ஆராய்ந்திருக்கிறார். உணர்வுப்பூர்வமாகவும், ஆராய்ச்சிப்பூர்வமாகவும், தர்க்கரீதியாகவும் என அனைத்துக் கோணங்களிலும் ஆராய்ந்திருப்பதே இதன் பலம். காந்திஜியே இதனை நேரடியாக எழுதியிருந்தால் கூட இந்த அளவிற்கு எழுதியிருப்பாரோ என்னவோ, ஆசிரியர் மிகச்சிறப்பாகவே படைத்திருக்கிறார்.
எதற்கும் காலம் என்ற ஒன்று இருக்கிறது. எதையும் விமர்சனத்திற்குள்ளாக்கும் இக்காலம் தான், எல்லாவற்றையும் புரிந்து கொள்ளவும் தயாராக இருக்கிறது. எனில், இந்நாவல் இக்காலத்திற்கான சிறந்த படைப்பு. மகாத்மா – காமம் – நிர்வாணம் – பிம்பம் என்ற நால்வகை குறியீடுகளையும் நான்கு கோணங்களிலும் நாம் புரிந்து கொள்வதற்கான ஆரம்பத் திறப்பாக இப்படைப்பைக் கொள்ளலாம். அந்த வகையில், “ஆப்பிளுக்கு முன்” மனிதனின் பசிக்கு மிகச் சிறந்த உணவாக இருக்கும் அதே சமயம், அதன் தேவையின் அளவையும் உணர்த்தி விட்டே செல்கிறது.
காந்தியின் பிரம்மச்சரியப் பரிசோதனைகள் பற்றிய தெளிவான பார்வையை இந்த நாவல் அளிக்கும், அவர் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளது உள்ளபடி சொல்லப்படு உள்ளது.
சி சரவண கார்த்திகேயன் அவர்களை விழுப்புரம் விருது விழாவில் சந்தித்தேன். அப்போதிலிருந்தே, அப்போதிலிருந்தேஇந்த அப்போதிலிருந்தேஇந்தஆப்பிளுக்கு அப்போதிலிருந்தேஇந்தஆப்பிளுக்குமுன் அப்போதிலிருந்தேஇந்தஆப்பிளுக்குமுன்புதினத்தை அப்போதிலிருந்தே இந்தஆப்பிளுக்குமுன் புதினத்தை வாசித்���ுவிடவேண்டும் என்ற ஆவல் இன்று தான் நிறைவேறியது. ஒரே மூச்சில் வாசித்து முடித்துவிட்டேன்.
மஹாத்மா காந்தியின் பிரம்மச்சர்யம் , சுய புலனடக்கம் குறித்தான எனது தனிப்பட்ட , பல தவறான கண்ணோட்டங்கள் , எத்தகைய கீழ்மையானவை என்பதை எனக்கு மிக வலுவாக உணர்த்தியது. காந்தியாருடன் கூடவே வாழ்ந்த. பல ஆளுமைகளுக்கும் கூட , இது போன்ற இன்னும் பல கேள்விகள் இருந்தன என்பதும் மிகத்தெளிவாக அறிந்துகொள்ள முடிகிறது. வெல்லப்பாகு கம்பி பதமாக, பதமாகஇழுபடுவதுபோன்ற, பதமாக இழுபடுவது போன்ற இயல்பான ,ஆற்றொழுக்கான எளிய நடை.. வாழ்த்துகள் CSK.