ஜெயமோகனின் முதல் நாவலாகிய இதுவே நான் படிக்கும் அவரின் முதல் நாவல். ஒருவித மாய வசீகரச் சூழலில், காட்டின் நடுவே, ரெமம்ப்ரான்ட் ஓவியம் கொண்ட செல்வச்செழிப்பான பங்களா ஒன்றில் சாகக்கிடக்கும் ஒரு முதியவருடன் அட்டகாசமான சூழல் வர்ணனையோடு தொடங்குகிறது. இக்கதையின் மிகப்பெரும் பலமே அதன் இட வர்ணனைகள் தான். அடர்ந்த காட்டுப்பகுதிகளிலும், மரம் சூழ்ந்த புராதானமான, மர்மமான சூழல்களிலும் இக்கதை நடைபெறவில்லையெனில் நான் அதைப் பெரிதும் ரசித்திருக்க மாட்டேன்.
வரலாறு முழுவதும் ஒடுக்கப்பட்ட வகுப்புகளிலிருந்து ஒருவன் எழுந்து நிறுவும் சாம்ராஜ்யத்தின் எழுச்சியையும் வீழ்ச்சியையும் non-linear ஆக, ரப்பரின் வரலாற்றுடன் பிணைத்துச் சொல்லப்பட்டிருக்கிறது. நாஞ்சில் நாட்டில் கிறித்துவம் பரவிய வரலாற்றையும், நாடார்களின் எழுச்சியையும் உள் கொண்ட இக்கதை பல புதிய பாத்திரங்கள் நடுநடுவே புகுத்தப்பட்டு, பின் அச்சரடுகளைத் தொடராமல் அந்தரத்தில் தொங்க விடுவதால் முழுமை பெறாத நிலையிலேயே அடங்கி விடுகிறது. பெருவட்டரின் கதையுமே முழுமையாக வெளிப்படாமல், அவர் வாழ்வின் முக்கியத் தருணங்களின் சிதறல்களாக மட்டுமே கூறப்படுவது இதே நிறைவற்ற நிலையை ஏற்படுத்துகிறது. பெருவட்டர் குடும்பத்தில் (மொத்த நாவலிலும் கூட) வரும் எவரும் விரும்பத்தகாதவர்களாக, இருள் நிரம்பியவர்களாகவே உலவி வருவது கதையின் மீது ஈடுபாடு கொள்ள சிறு தடைகளை ஏற்படுத்துகிறது. எனினும், அற்புதமான சூழல் சித்தரிப்புகளும், சுவாரஸ்யமிழக்காத கதையும், ஆங்காங்கே கலைத்திறமை மிளிறும் வரிகளும், முதல் நாவல் என்று நம்பமுடியாத முதிர்ச்சியும், நாஞ்சில்நாட்டு வரலாறும் வாசிப்பைத் தாங்கிச் செல்கின்றன.
ரசிக்கத் தடைகள் -
1) வட்டார வழக்கு. இயல்பான அப்பிரதேசத்து மொழிச்சித்தரிப்பாக இருப்பினும், உரையாடல்களைப் புரிந்து கொள்ள மிகப்பெரும் தடையை இது ஏற்படுத்துகிறது. சில வார்த்தைகளுக்கு ஆங்காங்கே விளக்கம் கொடுக்கப்பட்டிருந்தாலும், பெரும்பாலும் பலமுறை வாசித்து சூழலுக்கேற்ப பொருள் ஏற்படுத்திக் கொள்ளவோ, புரியாமல் கடந்து செல்லவோ தான் முடிந்தது.
2) மாந்தர்கள் அனைவரும் வெறுக்கத்தகுந்தவர்களாகவே இருப்பது. நாவலின் பிரதான பாத்திரங்களாக முன்னிறுத்தப்படும் பெருவட்டரும் ப்ரான்சிஸும் வக்கிரம் பொங்கும் chauvinistகளாகவே இருப்பது மிகவும் பிரச்சனைக்குள்ளானது.
3) திடீர் குழந்தைத்தனம் - இறுதியில் அனைத்தையும் இழக்கவிருக்கும் நிலையில், சிறுவர்கள் மகிழ்ந்து விளையாடுவதைப் பார்க்கும் ப்ரான்சிஸ் மனம் புத்துணர்வு பெற்று வாழ்வின் மீது திடீர் விருப்பம் கொள்வதைப்போன்ற ஒரு அபத்தமான திருப்பம் கதையின் மீதான மதிப்பைக் கடுமையாகக் குறைக்கிறது. அனைத்தின் மீதான பற்றையும் இழந்து நாயகன் இறுதியில் துறவியாகப் போகும் முடிவை ஏதோ பெரிய ஆழ்ந்த ஞான முதிர்ச்சியாகச் சித்தரித்துப் புனிதப்படுத்தும் அபத்தமான அந்நாவல்களின் வரிசையில் ரப்பர் கிட்டத்தட்ட சேர்ந்து விடுகிறது.
இவ்வனைத்தையும் விட நெருடியது, கதையில் புதைந்து கிடக்கும் சாதிய வன்மம். மேம்போக்காக கவனித்தால் வெளிப்படாத இவ்வன்மம் புத்திசாலித்தனமாக ஒளிக்கப்பட்டுள்ளது. ரப்பரின் வருகை அந்நிலத்தின் இயற்கையாக வளரும் தாவரங்களை அழித்து நிலத்தை நாசமாக்குவதை நாயர்களின் வீழ்ச்சியுடன் ஒப்பிடுவதன் மூலம் 'இயற்கை'யாக முன் நிலவிய சாதிய அமைப்பிற்கான ஏக்கம் வெளிப்படுகிறது. ஆங்காங்கே வரும் உயர்சாதி மெச்சல் வசனங்கள் இதற்குச் சான்று. காலங்காலமாக நாயர்களால் மிருகங்களைவிடக் குறைவாக நடத்தப்பட்ட, மிகக்குறைந்த மனித மரியாதைகள்கூட மறுக்கப்பட்ட வம்சம் வழி வரும் ப்ரான்சிஸே ஓரிடத்தில் நாயர்கள் மிகவும் மரியாதைக்குரியவர்கள் எனவும், அவர்களில் ஒருவனைக்கூட அவனால் "அடேய்" என அழைக்கமுடியாததைப் பற்றி சிந்திக்கும் இடத்தில் எழுத்தாளரின் சாதீயப்பற்று பச்சையாக வெளிப்படுகிறது. பெருவட்டருக்கு தொடர்புடைய அனைவரும் despicable ஆக சித்தரிக்கப்பட, நாயர் வழி வரும் மிகக்குரூரமான குளம்கோரி எனும் பாத்திரத்திற்குக் கூட வாசகர் மனதில் இறுதியில் பச்சாதாபம் வருவதற்கேற்ப நிகழ்வுகளை contrive செய்திருப்பது அருவருக்கத்தக்கது. கண்டன்காணி என்ற பாத்திரம், காட்டில் அவர் வாழ்ந்த ஆதிவழி வாழ்க்கையால் தெம்புடன் இருப்பதாகவும், "இயற்கை" வழி வாழ்க்கையை உதறி (மீறி) வாழ்வேணியில் உயர்ந்து சுகபோகங்களில் திளைத்த பெருவட்டர் தன் வாழ்வின் இறுதிநாட்களில் குற்றவுணர்வுடன் அலைவதாகவும், அவர் குடும்பம் வீழ்வதாலும் கதை உணர்த்த வருவது என்ன? இது போல இவ்வன்மத்தின் வெளிப்பாடுகளை அடுக்கிக் கொண்டே போகலாம்.
இக்குறைகளை பொருட்படுத்தவில்லையெனில், எழுத்தின் கவர்ச்சிக்காகவும், அவ்வெழுத்து உருவாக்கும் வசீகர உலகிற்காகவும் தாராளமாகப் படிக்கலாம்.