வெய்யில் (இயற்பெயர்: வெயில்முத்து) தமிழ் நவீனக் கவிஞர். தமிழ் சிற்றிதழ்களிலும் வெகுசன இதழ்களிலும் தொடர்ந்து எழுதி வருபவர். ‘கொம்பு’ எனும் சிற்றிதழின் ஆசிரியராகவும் பதிப்பாளராகவும் செயல்பட்டு வருகிறார். 1984 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 29ஆம் நாள் திருநெல்வேலி மாவட்டத்தில் பிறந்தார். பெற்றோர்: பெருமாள் - தமிழ்செல்வி. மனைவி: பிரியா, மகள்: மாயா. தற்போது ‘ஆனந்த விகடன்’ குழும இதழில் பணிபுரிந்து வருகிறார். கவிதை குறித்தும் கவிதையின் அழகியல் குறித்தும் பல்வேறு தளங்களில் தொடர்ந்து பேசியும் கல்லூரி பேராசிரியர்கள், மாணவர்களுக்கு வகுப்புகள் எடுத்தும் வருகிறார். கவிதை குறித்து தமிழ் இலக்கிய மாணவர்களுக்கான பாடத்திட்டத்தை வகுப்பதில் சென்னை பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் கல்லூரிகளின் பாடத்திட்டக் குழுவின் ஆலோசகராகவும் இருக்கிறார்.
சன்னதம் கொண்ட மொழி தொட்டு எழுதப்பட்ட கவிதைகள் தொகுப்பு முழுவதும். அட்டைப்படமே குறியீடாகவும், ஒட்டு மொத்த கவிதைகளும் விளிம்பு நிலை மனிதர்களின் குரலாகி தங்களைப் புறக்கணித்து ஒதுக்கி வைத்திருக்கிறவர்களிடம் தான் பேச நினைப்பதையெல்லாம் பேசி, ஒப்பனைகளின்றி தன் வாழ்க்கையை விரித்துக் காட்டுகின்றன. மகிழ்ச்சி என்பது தலைப்பில் மட்டுமே இருப்பதும் கவிதைகளுக்குள் அது அரிதாகவே காணமுடிகிற விதமான உள்ளடக்கம்.
தொகுப்பில் இருக்கிற ஒரு கவிதையின் தலைப்பு 'உலகின் அத்தனை மகிழ்ச்சியான சொற்களாலும் எழுதப்பட்ட துயரம்'. ஏதோ ஒரு விதத்தில் இத்தொகுப்பின் ஒட்டு மொத்த கவிதைகளின் மையத்தோடு ஒத்திசைவு கொண்டதாக உணர்கிறேன்.