“சிலப்பதிகாரக் கதை” பலரும் அறிந்தது. காவியத்தைப் படித்தவர் அறிவர் எனினும் உள்ளே உள்ள எல்லாச் செய்திகளையும் அறிவதற்கு வாய்ப்பு இல்லை. அவ்வகையில் இது எல்லாச் செய்திகளையும் தருகிறது: முழுமையாக அறிய உதவுகிறது.
இது ஒரு “நாட்டுக் காவியம்” - தமிழ் நாடு, நாட்டு மக்கள் அவர்கள் வாழ்வியலைத் தெள்ளத்தெளியத் தருவது இது. அரசியல் வாழ்வில் இருந்த சீர்மை, பெண்மையின் உயர்வு, அறத்தின்பால் நம்பிக்கை இம்மூன்றும் தமிழ் மக்களின் உயர்ந்த கோட்பாடுகள். இவற்றைச் சிலப்பதிகாரம் உணர்த்துகிறது.
டாக்டர் ரா. சீனிவாசன் பச்சையப்பன் கல்லூரியில் 1940 முதல் 45 வரை மாணவர்; 1945 முதல் 1981 வரை தமிழ்த்துறைப் பேராசிரியர், தலைவர். மொழியியல், தமிழ் இலக்கணம், கட்டுரை நூல்கள், நாவல்கள், நாடகம், புதுக்கவிதை எனப் பல துறைகளிலும் அவர் நூல்கள் வெளிவந்துள்ளன; ‘சங்க இலக்கியத்தில் உவமைகள்’ என்னும் ஆய்வு நூல் மூன்று பதிப்புகளைக் கண்டது; மொழியியல் பத்துப் பதிப்புகளைக் கண்டது; அவர் எழுதிய உரைநடை நூல்களுள் ‘அணியும் மணியும்’ இன்னும் பாராட்டப்படுகிறது. அக்கட்டுரை நூலும், ‘சொல்லின் செல்வன்’ என்னும் நாடக நூலும், ‘வழுக்கு நிலம்’, ‘நனவோட்டங்கள்’ என்னும் நாவல்களும் பல்கலைக் கழகப்பாடநூல்களாக அவ்வப்பொழுது வைக்கப்பட்டு வருகின்றன; எழுத்து, அவர் தொடர் பணியாய் இருந்துவருகிறது. 1991 முதல் கம்பராமாயணம், மகாபாரதம், சீவக சிந்தாமணி முதலிய காவியங்கள் உரைநடையாக்கம் பெற்றன.